Friday, November 28, 2008

போலி மோதல் படுகொலைகள் சமூக பிரச்சினைகளுக்கு தீர்வாகுமா…? இவை தொடர்பான சட்டத்தின் பார்வை என்ன….?மனித உரிமைக்கான மக்கள் கழகத்தின் பேராசிரியர் மார்க்ஸ்



போலி மோதல் படுகொலைகள் (Fake encounters) உலக அளவில் அறியப்பட்டதும் இடம் பெறுவதுமாக இருந்தாலும் கூட மூன்றாம் உலகநாடுகளில் குறிப்பாக இந்தியாவில் இதன் முக்கியத்துவம் சிறுக,சிறுக அதிகரித்து அரச அங்கீகாரத்தை சட்டரீதியாக கூட பெற்றுவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தும் நிலையை எட்டியுள்ளதை காண்கிறோம்.காவல்துறை சட்டப் புறம்பாக நிறைவேற்றும் Fake encounters எனப்படும் இந்த கொலைகார நடைமுறையை அம்பலபடுத்துவதில் சர்வதேச அளவில் மனிதஉரிமை அமைப்புகள் முக்கிய பங்காற்றி வருகின்றன.
இந்த வகையில் தற்போது இந்திய அளவில் செயல்படும் மனித உரிமைக்கான மக்கள் கழகத்தின் அமைப்பாளர் பேராசிரியர் அ.மார்க்ஸ அவர்கள் இந்த விடயத்தில் ஆற்றும் பாரிய பணி மிகமிக குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக அவருடனான ஒரு நேர் காணல்……


போலி மோதல் எதிர்ப்புக் கூட்டியக்கம் ஒன்றை அமைத்துள்ளீர்கள்.மோதல்(என்கவுன்டர்) என்ற பெயரால் திட்டமிட்ட படுகொலைகளே நிகழ்கின்றன என்று கூறியுள்ளீர்கள். எப்படி என்று விளக்க முடியுமா….?



இந்த கூட்டியக்கம் சென்ற ஆண்டு நடுவில் உருவாக்கப்பட்டது. தமிழக அளவில் உருவாக்கப்பட்டது என்ற போதிலும் இதற்கு முன்னதாக சென்ற 2007 ஜுன் 26 ஆம் நாள் மும்பையில்,இந்திய அளவில் மனித உரிமை அமைப்புகள் இணைந்து ஒரு மாநாடு நடத்தின. போலி மோதல்களுக்கு எதிரான பரப்புரைக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. குசாரத்தில் வன்சாரா, இராஜ்குமார்,பாண்டியன் முதலிய IPS அதிகாரிகள் முன்னின்று நடத்திய சொராபுதீன் மோதல் ஒரு திட்டமிட்ட படுகொலை என்பது அம்பலப்பட்டுத் துணைக்கண்ட அளவில் விவாதப் பொருளான நிலையில் அந்த மாநாடு கூட்டப்பட்டது. இந்தியாவெங்கிலும் பல்வேறு மாநிலங்களிலும் இது போன்ற போலி மோதல் கொலைகள் மேற்கொள்ளப்படுவது கவனத்திற்கு வந்தது. “அவுட்லுக்” வார இதழ் (மே 27) என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் சிறப்பிதழ் ஓன்றை வெளியிட்டது. 100 என்கவுண்டர் செய்தவன் 80 செய்தவன் என்று எல்லாம் புகைப்படங்களுடன் ஆல்பம் ஒன்றும் வெளியிடபபட்டது.
மோதல் என்ற பெயரில் படுகொலைகளை நடத்துவது தமிழகத்திலும் கடந்த 30 ஆண்டுகளாக நடந்துவருவம் கதைதான்.80களில் வால்டர் தேவாரம் தலைமையில் சுமார் இருபது நக்சலைட்டுகள் கொல்லப்பட்டார்கள். பின்னர் ராசாராம்,சரவணன் போன்ற தமிழ்த்தேச விடுதலைக் கோரிக்கையைக் முன்வைத்து இயங்கிய ஆயுதக் குழுவினரும்,இம்முறையில் கொல்லப்பட்டார்கள். ராசாராமும்,சரவணனும் சிறையில் இருக்கும்போதே காவல்துறையினரால் கொல்லப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.கருணாநிதி இம்முறை ஆட்சிக்கு வந்த கையோடு மூன்று நான்கு ரவுடிகள்,மோதல் என்ற பெயரில் கொலை செய்யப்பட்டார்கள். முந்தைய ஜெயலலிதாவின் ஆட்சியைக்காட்டிலும் தாங்கள் ஓன்றும் சட்டம்,ஒழுங்கை நிலைநாட்டுவதில் குறைந்தவர்களல்ல எனக் காட்டிக் கொள்வதற்க் காகவே இக்கொலைகள் நிகழ்த்தப்பட்டன என பத்திரிக்கைகள் எழுதின்.
இந் நிலையில் தான்,இத்தகைய போலி மோதல்களை எதிர்க்கக் கூடிய பல்வேறு சிறிய மனித உரிமை அமைப்புகள் ஓன்றாக இணைந்து போலி மோதல் கொலை எதிர்ப்புக் கூட்டியக்கத்தை உருவாக்கிணோம். சென்ற ஜுலை மாதத்தில் சென்னையில் எழுச்சிமிக்க கருத்தரங்கம் நடத்திணோம்.போலி மோதலுக்கு எதிரான ஓரு விரிவான துண்டறிக்கை ஆயிரக்கணக்கில் அச்சிட்டுத் தமிழகமெங்கும் விநியோகித்தோம். இந்தியாவிலும் சரி, தமிழகத்திலும் சரி 99% மோதல்கள் போலி மோதல்கள்தான். முன்னரே பிடித்துச்சென்று நிராயுதபாணியான நிலையில் கொன்றுவிடும் படுகொலைகள் தான்,இந்த மோதல்கள். எதிலும் காவல்துறையினர் கொல்லப்படுவதில்லை. பெரிய காயங்கள் அடைவதும் கிடையாது. ஆனால் காவல் துறையினரால் குறிவைக்கப் படுபவர்கள் அவ்வளவு பேரும் கொல்லப் படுகின்றனர். தப்பிச் சென்றதாகவோ காயங்களுடன் பிடி பட்டதாகவோ வரலாறு கிடையாது. இது ஒன்றே எல்லா மோதல்களும் போலி மோதல்களே என்பதற்குப் போதிய சான்று.


தமிழகத்திலும் இந்தியாவின் பல பகுதிகளிலும் போலி மோதல் கொலைகள் நிகழ்வதாக அடிக்கடி செய்திகள் வருகின்றன. இந்தக் காவல்துறை உத்தி, எப்போது,எப்படி தொடங்கியது….? மோதல் கொலைக்குப் பலியாகிறவர்கள் யார்….?


நெருக்கடி நிலைக் காலத்தில் ஆந்திராவில் மட்டும் 300க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் இவ்வாறு கொல்லப்பட்டனர். நெருக்கடி நிலை நீக்கப்பட்டவுடன் அப்போது நடைபெற்ற அத்துமீறல்கள் குறித்த விவாதங்கள் பெரிய அளவில் நடைடிபெற்றதையொட்டி இத்தகைய மோதல் கொலைகள் சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. எனினும், 80களில் காலிஸ்தான் போராட்டம் தீவிரமாகச் செயல்பட்ட பின்னணியில் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டார். அதையொட்டி மீண்டும் மோதல் கொலைகள் தொடர்ந்தன. 96இல் மத்தியப் புலனாய்வுக் குழு உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கை ஒன்றின்படி 1984-95 காலகட்டத்தில் அமிர்தசரசில் மட்டும் 2,097 உடல்கள் சட்ட விரோதமாக எரிக்கப்பட்டன. பிற பஞ்சாப் நகரங்களிலும் இதே நிலைதான். காணாமல் போனதாகச் சொல்லப்பட்டவர்களில் 60 விழுக்காட்டினர் கொல்லப்பட்டார்கள் என்பது இப்போது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை. கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில் (85-96) ஆந்திர மாநிலத்தில் 1,049 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். தர்மபுரியில்,தேவாரம் தலைமையில் நடைபெற்ற கொலைகளை முன்னரே குறிப்பிட்டேன். 90களுக்குப்பின் மோதல் படுகொலைகள் முஸ்லீம் தீவிரவாதிகள் மீதும் ரவுடிகள் மற்றும் குண்டர்கள் மீதும் மேற்கொள்ளப்பட்டன. பாபர் மசூதி இடிப்பிற்குப் பின் வடமாநிலங்களில் முஸ்லீம்கள் இவ்வாறு பெருமளவில் கொல்லப்பட்டனர். நரேந்திர மோடியைக் கொல்ல வந்ததாகச் சொல்லி இர்சத் செகான் என்கிற 19 வயதுக் கல்லூரி மாணவி கொல்லப்பட்டது ஊரறிந்த உண்மை.
ரவடிகள், தாதாக்கள் கொல்லப்படுவது, உலகமயம், ரியல்எஸ்டேட் பெருக்கம் ஆகியவற்றுடன் தொடர்புடைய ஒன்று. தாதாக்களையும் ரவுடிகளையும் அரசியல்வாதிகளும், காவல் துறையுமே உருவாக்குகின்றனர். பிறகு ஒரு கட்டத்தில் அவர்களால் தங்களுக்கே ஆபத்து எனும்போது அவர்களைக் கொன்று விடுகின்றனர். ஆக, இன்று இந்தியத் துணைக்கண்டத்தில் நடாத்தப்படும் மோதல் படுகொலைகள் மூன்று தரப்பினரைக் குறிவைத்து நடத்தப்படுகின்றன. ஒன்று இபயங்கரவாதத்தை எதிர்ப்பதன் பெயரால் பெரிய அளவில் முஸ்லீம்கள் கொல்லப் படுகிறார்கள். இரண்டாவதாக வட மாநிலங்களில், குறிப்பாக காசுமீரத்தில் உள்நாட்டுப் பாதுகாப்பு என்ற பெயரால் மாவோயிஸ்டுகளும்,தேசிய இனப் போராளிகளும் கொல்லப்படுகினற்னர். மூன்றாவதாக தாதாக்கள், ரவுடிகள் முதலிய கிரிமினல் குற்றவாளிகள் கொல்லப்படுகிறார்கள்.
இந்தியாவில் ஒருபுறம் மோசமான அரம்பர்களுக்கும்(ரவடிகள்), மறுபுறம் தீவிரவாதிகள் எனப்டுவோருக்கும் எதிராக இந்தப் போலி மோதல் படுகொலை உத்தி கையாளப்பட்டு வருகிறது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் போலி மோதல் தொடர்பான நிலவரம் என்ன?சி.கே.காந்திராசன் என்கிற IPS அதிகாரி சென்னையைச் சேர்ந்த 19 ரவுடிக் கும்பல்களை ஆய்வு செய்து அண்மையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். அவரது ஆய்வேட்டுச் சுருக்கம் சென்ற ஏப்ரல் 15 “டைம்ஸ் ஆப் இந்தியா” இதழில் வெளிவந்தது. அமைப்பு ரீதியாக மேற் கொள்ளப்படும் எந்தக் குற்றமும் அரசியல்வாதிகள், காவல்துறையினர், வழக்கறிஞர்கள் ஆகியோரின் கூட்டுறவின்றி சாத்தியம் இல்லை என்பது அவரது ஆய்வின் முடிவு. சுமார் 12 போலீஸ் அதிகாரிகள் கிரிமினல்களுக்குப் பல்வேறு வகையில் ஆலோசனை சொல்பவர்களாய் இருப்பதாகவும் இத்தகைய ஆலோசனைகளுக்கு 50 ஆயிரம் முதல் பல இலட்சம் வரை ஊதியம் பெறுவதாகவும் அந்த இதழில் வெளியாகி இருந்தது. சில எடுத்துக் காட்டுகளும் கொடுக்கப் பட்டிருந்தன.
சென்ற மாதம் திருச்சியில் நடந்த மோதலில் கொல்லப்பட்ட “பாம்” பாலாஜிக்கும், தஞ்சை மேற்குக் காவல் நிலையத்தில் பணியாற்றிய குமாரவேலுவுக்கும் தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அந்த ஆய்வாளர் வேதாரண்யத்துக்கு மாற்றப்பட்டார். “பாம்” பாலாஜி மோதலில் கொல்லப்பட்டார். ஜுனியர் விகடனில் டாக் ரவி,வரிச்சியா செல்வம் என்கிற இரு ரவுடிகள் தாங்கள் மோதலில் கொல்லப்படலாம் என்று அச்சம் தெரிவித்துள்ளனர். ரவியின் வழக்கறிஞர் காரல் மார்க்ஸ் என்பவர், ரவியைக் கொல்வதற்காக அவருக்கு எதிரான கும்பல் ஒன்று மிகப் பெரியஅளவில் பணம் செலவழிப்பதாக்க கூறியுள்ளார்.
இங்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்,சில ஆண்டுகளுக்கு முன் நானா படேகர் என்கவுண்டர் ஸ்பெசலிஸ்டாக நடித்த இந்தித் திரைப்படம் வெளிவந்தது. “ஜதெக் 56″ அதாவது 56 என் கவுண்டர் செய்தவன் என்பது அதன் பெயர். நானா படேகருக்கு நடிப்பு பயிற்சி அளித்தவர் பிரதிப்வர்மா என்கிற உண்மையான என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட். இவர் 80 மோதல் கொலைகள் செய்தவர். இவருடைய சீடர் தயா நாயக் 100 மோதல் கொலைகளைச் செய்தவர். இவர்கள் இருவரும் இப்போது பணிநீக்கம் செய்யப்பட்டு நீதிமன்றங்களுக்கு அலைந்து கொண்டுள்ளனர். ஒரு ரவுடிக்கும்பலிடம் பணம் பெற்றுக்கொண்டு மற்றொரு ரவுடிக் கும்பலைக் கொன்று அளவுக்கதிமாகச் சொத்து சேர்த்தனர் என்பது அவர்கள் மீதுள்ள குற்றச்சாட்டு. ஒரு சாதாரண காவல்துறை அதிகாரியான பிரதீப் வர்மாவின் சொத்து 100 கோடி. தன்னுடைய சொந்த ஊரில் தன்னுடைய அம்மா பெயரில் பள்ளி நிறுவி அமிதாப்பச்சனை அழைத்துத் திறந்து வைத்தவர் அவர். இப்படி நிறைய சொல்லலாம். அவுட்லுக் வெளியிட்ட “என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட்”ஆல்பம் பற்றி முன்பு குறிப்பிட்டேன். இதில் குறிப்பிடப்பட்ட பலரில், ராஜ் பீரசிங் என்பவரும் ஒருவர். 100 என்கவுண்டர் செய்தவர், இவர் சென்ற மார்ச்சு இறுதியில் ரியல் எஸ்டேட் தகராறு ஒன்றில் சுட்டுக் கொல்லப்பட்டார். சம்பாதித்த பணத்தை ரியல் எஸ்டேட்டில் முடக்கும் போது ஏற்பட்ட தகராறு இது. தமிழகத்தில்கூட இத்தகைய குற்றச்சாட்டுகள் வந்து கொண்டுள்ளன. மோதலில் கொல்லப்பட்ட வெள்ளை ரவியின் மனைவி அவரைக் கொல்வதற்கு 60.000 ரூபாய் கைமாறியதாகப் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார். இவை குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.


போலி மோதல் தொடர்பான சட்டவிதிகள் என்ன? இவை மதிக்கப்படுவதும் மிதிக்கப்படுவதும் எந்த அளவில்?


தற்காப்புக்காக-தன்உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக- தேவையானால் எதிரியைக் கொல்வதற்கு, குற்றநடைமுறைச் சட்டவிதிகள் 154,170,173, 190, இந்தியத் தண்டனைச்சட்டம் 96,97,100,46 ஆகியவற்றில் இடம் உண்டு. பொதுவாக இவை தற்காப்பு உரிமையைக் குறிப்பவை. காவல் துறையினருக்கு மட்டுமின்றி எவருக்கும் பொருந்தக் கூடியவை. ஆனால், இத்தகைய நிகழ்வுகளில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அதில் இந்தியச் சாட்சியக் சட்டம் 105ஆவது பிரிவின்படி அக்கொலை தவிர்க்க இயலாதது எனவும், முற்றிலும் தற்காப்பிற்காகவே செய்யப்பட்டது எனவும் நிறுவப்படுதல் வேண்டும். இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவு 46 இன் படி காவல்துறையினர் ஒருவரைக் கைது செய்யச் செல்லும் போது அவர் கைதாக மறுத்தால் அவரை வலுக்கட்டாயமாகக் கைது செய்யலாம். இந்த வலுக்கட்டாயத்தின் எல்லை அவரை கொல்வதாகக்கூட இருக்கலாம். ஆனால்,கைது செய்யப்படுபவர் மீது சாட்டப்பட்டுள்ள குற்றம் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனைக்குரிய குற்றமாக இருக்கும் நேர்வுகளில் மட்டுமே இந்த வலுக்கட்டாயம், கொல்லுதல் என்கிற எல்லைக்குச் செல்ல முடியும் என பிரிவு 46,உட்பிரிவு 3 வரையறுக் கிறது. குற்ற நடைமுறைச் சட்டம் 176ஆவது பிரிவில் 1983ஆம் ஆண்டு சேர்க்கப்பட்ட திருத்தத்தின்படி ஒரு நிர்வாக நடுவர் இது குறித்து விசாரணை செய்ய வேண்டும். ஆனால் இது நடு நிலையுடன் மேற்கொள்ளப்படுவதில்லை என்பதே உண்மை.மோதல் நடக்கும்போத கொல்லப்பட்டவரின் மீது அவர் காவல்துறையினரைக் கொலை செய்ய முயன்றதாக இந்தியத் தண்டனைச் சட்டம் 370ஆம் பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்கிறார்கள். பின்னர் குற்றவாளி உயிருடன் இல்லை என்பதைக் காரணம் காட்டி விசாரணை இன்றி வழக்கை முடித்து விடுகிறார்கள். பெயருக்கு வருவாய்க் கோட்ட அலுவலர் (RDO) விசாரணை ஒன்றை நடத்தி மூடிவிடுகிறார்கள்.
ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். இவ்வாறு மோதல் கொலைகளை ஊற்றி மூடுகிற நடைமுறையில் காவல்துறையினரும், சிவில் நிர்வாகமும், அரசியல்வாதிகளும் கூட்டுக் களவாணிகளாக உள்ளனர்,இணைந்து செயல்படுகின்றனர்,நீதிமன்றங்களும் கண்டுகொள்வதில்லை. இராசாராம், சரவணன் என்கிற இரு தமிழ்த் தீவிரவாதிகள் சென்னை மத்திய சிறையில் இருந்தபோது கொல்லப் பட்டனர். அவர்கள் கொல்லப்படுவது முன்னரே தெரியும். அவர்கள் அந்த அச்சத்தை வெளிப்படுத்தியும் இருந்தனர். காவல் நீடிப்பிற்காக அவர்கள் சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர். காலை நேரத்தில் அழைத்துச் செல்வதே வழக்கம். ஆனால், அன்று மாலையில் அழைத்துச் செல்லப்பட்டனர். சென்டரல் ரயில்நிலையம் அருகே இருந்த மத்திய சிறைக்கு, சைதாப்பேட்டையிலிருநது அண்ணா சாலை வழியாக வருவதே வழக்கம். அன்று அவர்கள் கோட்டூர்புரம் வழியாகக் கொண்டு வரப்பட்டனர். சாலைப் போக்குவரத்து எல்லாம் நிறுத்தப்பட்டு அவர்கள் சுட்டுக் கொல்லப் பட்டனர். அவர்கள் தப்பிச் செல்ல முயன்றதாக போலீஸ் பொய்யுரைத்தது. காவல்துறை, போக்குவரத்துத் துறை ஆகிய துறைகள் இணைந்து செயல்பட்டன என்பது எண்ணிப் பார்க்க வேண்டிய செய்தி.


மோதல் சாவுகள் குறித்துத் தேசிய மனித உரிமை ஆணையம் பிறப்பித்துள்ள நெறிமுறைகள் யாவை? தமிழக அரசு அவற்றைக் கடைப்பிடிக்கிறதா…?


ஆந்திரப் பிரதேசக் குடியுரிமைக் கழகம் (APCLC) 94 மார்ச்30இல் தேசிய மனித உரிமை ஆணையத்திடம் இது குறித்து விரிவான புகார் ஒன்றை அளித்திருந்தது. அதையொட்டி தேசிய மனித உரிமை ஆணையம் 1996 நவம்பர் 5இல் தனது பார்வைகளைப் பதிவு செய்தது.1997 மார்ச்சு 29இல் ஆந்திர முதல்வருக்கு விரிவான நெறி முறைகளை அனுப்பிய ஆணையம் இதன் நகல்களை எல்லா மாநில முதல்வர்களுக்கும் அனுப்பியது. சென்ற ஆண்டில் இது தொடர்பான விவாதங்கள் இந்திய அளவிலும் தமிழக அளவிலும் மேலுக்கு வந்த போது சென்ற 2007 ஆகஸ்டு 8இல் தமிழக அரசு இது குறித்து நெறிமுறை என்ற ஒன்றை உருவாக்கி மிக அவசரம் என்று தலைப்பிட்டு, தலைமைச் செயலாளரே ஒப்பமிட்டு, காவல்துறை இயக்குநருக்கு அனுப்பியது. இதன் நகல்கள் சிறைத்துறையின் துணைக்காவல் இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டது. தேசிய மனித உரிமை ஆணையத்தின் விதிமுறைகளைப் பின்பற்றவேண்டும், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மோதல் கொலைகள் தொடர்பாக அறிக்கை அனுப்ப வேண்டும், என்பது இந்த ஆணையின் சாரம். மோதல் கொலைகள் நடை பெற்றவுடன் அருகில் உள்ள காவல் நிலையத்தில் உரிய பதிவேட்டில் அதைப் பதிவு செய்ய வேண்டும். RDO விசாரணைக்குப் பதிலாக நீதிமன்ற விசாரணை நடத்த வேண்டும். இவ் விசாரணையில் கொல்லப்பட்டவரின் உடனடி உறவினர்கள் பங்கேற்பது அவசியம். அவர்களது குற்றச் சாட்டுகளைப் பரிசீலிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் மோதலில் பங்கேற்ற அதிகாரிகளுக்கு வீரப் பரிசுகளோ, பதவி உயர்வுகளோ வழங்கக் கூடாது. மோதலில் பங்கு பெற்ற அதிகாரி அதே காவல்நிலையத்தைச் சேர்ந்தவராக இருப்பின வேறு சுதந்திரமான சிபிசிஐடி போன்ற புலன் விசாரணை அமைப்பைக கொண்டு விசாரிக்க வேண்டும். இவை அந்நெறி முறைகளில் முக்கியமானவை.
மோதல் என்பது ஒரு கொலை. காவல்துறை செய்தாலும் சரி, சாதாரண ஆள் செய்தாலும் சரி, கொலை கொலைதான் என்கிற அடிப்படையில் கைது செய்து, குற்றநடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய கொலைக் குற்றமாகவே அதைக் கருத வேண்டும். தற்காப்புக்காகக் கொன்றேன் என மெய்ப்பிக்கும் வரை அந்த அதிகாரி கொலைக் குற்றவாளிதான். அதிகாரியின் மீது குற்றம் நிரூபிக்கப்படுமானால் கொல்லப்பட்டவரது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றெல்லாம் இந்த நெறிமுறைகளில் இருந்தது. இந்த நெறி முறைகளை அவற்றின் ‘வார்த்தை, தொனி’ ஆகிய இரண்டின் அடிப்படையிலும் அப்படியே பின்பற்றவேண்டும் எனவும். இல்லையேல் ‘ கடுமையாகக் கருதப்படும்’ எனவும் மாவட்ட அதிகாரிகள் இதற்கு பொறுப்பாக்கப் படுவார்கள் எனவும் எச்சரிக்கப்பட்டிருந்தது.
நமக்கெல்லாம் பெரிதும் ஆறுதல் அளித்த அந்த நெறிமுறைகளுக்காகப் போலி மோதல் எதிர்ப்புக் கூட்டியக்கம் சார்பாகத் தமிழக முதல்வருக்கு நன்றியும் தெரிவித்தோம். கூடவே இது நடைமுறைப் படுத்தப்படுமா,அல்லது வெறும் வார்த்தைகளோடு நின்றுவிடுமா என்கிற அய்யத்தையும் வெளியிட்டிருந்தோம். நமது அய்யம் இன்று உறுதியாகி விட்டது. ஆறு மாதம் அமைதிகாத்த நம் காவல்துறையினர் சென்ற மாதத்தில் மட்டும் ஐந்து பேரைக் கொன்றுள்ளனர். மேற்கண்ட நெறிமுறைகள் எதையும் பின் பற்றவில்லை. ஏப்ரல் 3 அன்று தஞ்சையில் மிகுன் சக்கரவர்த்தி என்பவரை மோதலில் கொன்ற காவல்துறையினருக்குக் கூடுதல் காவல்துறை இயக்குனர் விசயகுமார் உடனடியாகப் பரிசுளை வழங்கியுள்ளார். நெறிமுறைகளுக்கு எதிராகச் செயல்பட்ட அவர் மீதும், நடவடிக்கையில்லை. அப்படியானால் இந்த நெறிமுறைகள் யாரை ஏமாற்றுவதற்கு?


போலி மோதல் கொலைகள் குறித்துப் பொதுமக்களின் பார்வை என்ன?


பொதுவாக நடுத்தர வர்க்கத்தினரின் பார்வை மோதல் கொலைகளுக்கு ஆதரவாக உள்ளது என்பது வேதனையான உண்மை. காவல்துறையின் பலம் இதுதான். கிரிமினல்களை வெளியே விட்டால் அவர்கள் மேலும் மேலும் கொலைகளைத் தானே செய்வார்கள்? சட்டத்தின் மூலம் அவர்களைச் சிக்க வைக்க முடியுமா? என்கிற கேள்விகள் எழுப்பப்படுகின்றன. கிரிமினல் குற்றங்களை ஒழிப்பதற்கு மோதல் கொலைகள் தான் வழி என்ற கருத்தைக் காவல்துறையே பரப்பி வருகிறது.
கிரிமினல்கள் மட்டுமே கொல்லப் படுவதில்லை. அரசியல் காரணங்களுக்காகவும் கொலைகள் நடக்கின்றன என்பதெல்லாம் மக்களுக்குச் சொல்லப்பட வேண்டும். மோதல்கொலைகளுக்கும் கிரிமினல் குற்றங்களுக்கும் தொடர்பே இல்லை. சென்னை நகரத்தில் மட்டும் கடந்த 12 ஆண்டுகளில்,18 மோதல் கொலைகள் நடை பெற்றுள்ளன. ஆனால், கிரிமினல் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. கிரிமினல்கள் எப்படி உருவாகின்றனர் என்பதை மக்களிடம் விளக்கியாக வேண்டும். காசு வாங்கிக் கொண்டு மோதல் கொலைகள் நிகழ்த்துவது, உன் மகனைக் கொலை செய்து விடுவேன் என மிரட்டி வீட்டாரிடம் பணம் பறிப்பது, இவையெல்லாம் மக்களுக்குத் தெரியாது. இவற்றையும் நாம் விளக்கியாக வேண்டும். பஸ்ஸை எரித்து மாணவிகளைக் கொன்றவர்கள். பத்திரிகை அலுவலகத்தைத் தாக்கி ஊழியர்களைக் கொன்றவர்கள் இவர்களுக்கு ஒரு நீதி, மற்றவர்களுக்கு ஒரு நீதி என்று பாகுபடுத்தித் தேர்வு செய்கிற உரிமையை காவல் துறையினருக்கு யார் அளித்தது?
கொலைக்குற்றம் உறுதி செய்யப்பட்டவர் களுக்குக்கூட மரணதண்டனை கூடாது என 135 நாடுகள் முடிவெடுத்துள்ள நிலையில், குற்றம் நிரூபிக்கவேபடாத நிலையில் மரணத்தீர்ப்பை வழங்கும் அதிகாரத்தைக் காவல்துறைக்கு யார் கொடுத்தது? அரசுச் சட்டத்தின் 21 ஆவது பிரிவின்படி இந்தியக் குடிமக்கள் எல்லோருக்கும் உயிர் வாழும் உரிமை இருக்கிறது. அரசியல் சட்டம் 14ஆவது பிரிவின்படி எல்லோரும் சமமாக நடத்தப்பட வேண்டும். இந்த மிக அடிப்படையான உரிமைகளை யெல்லாம் குழிதோண்டிப் புதைப்பவையாக மோதல் கொலைகள் உள்ளன என்பதை மக்களிடம் விளக்கிச் சொல்வது அவசியம்.


போலி மோதலை நியாயப்படுத்தும் ஊடகங்கள் அப்படிச் செய்வது ஏன்?


ஊடகங்கள், குறிப்பபாக திரைப்படங்கள் என்கவுண்டரை நியாயப்படுத்தவே செய்கின்றன. இது மிகவும் வேதனைக்குரிய நடைமுறை. சமீபத்தில் திரைப்படத் துறையைச் சேர்ந்த ஒரு சிலருடன் உரையாடக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டது. நவீன் பிரசாத் என்கிற மாவோயிஸ்டு கொல்லப்பட்டது குறித்து அவர்களிடம் பேசும்போது, மோதல் கொலைகள் குறித்த அப்பட்டமான நடுத்தரவர்க்க மனநிலையே அவர்களிடம் இருந்தது அதிர்ச்சி அளித்தது. இதில் திரைப்படத் துறையை மட்டும் சொல்லிப் பயனில்லை. நம் எழுத்தாளர்கள் சிந்தனையாளர்கள் இதைக் கண்டு கொள்வது இல்லை, குறிப்பிட்ட திரைப்படங்களை விமர்சிப்பதில்லை. பத்திரிகைகளைப் பொறுத்தமட்டில் புலனாய்வு இதழ்கள் ஒரளவு நம் தரப்பு செய்திகளை வெளியிடுவது, சில உண்மைகளை வெளிப்படுத்த வாய்ப்பாக உள்ளது. கூடவே காவல்துறை அளிக்கிற அப்பட்டமான பொய்ச் செய்திகளையும், கொல்லப்பட்டவர் குறித்த அவதூறுகளையும் வெளியிடுவதன் மூலம் ஒட்டுமொத்தமாகக் காவல்துறையின் கருத்துகளுக்கு ஆதரவு ஏற்படும் நிலையே உள்ளது.
தில்லி, மும்பை, குசாரத்தில் போலி மோதல் வல்லுநர்கள் என்றே சில காவல்துறை அதிகாரிகள் பெயர் பெற்றனர். இங்கும் சிலருக்கு அந்தப் பெயர் உள்ளது. சட்டவிரோதமாகச் செய்வதை இப்படிப் பெருமைப்படுத்தலாமா?நான் முன்பே சொன்னேன், தமிழ்நாட்டிலும்கூட இத்தகைய மோதல் கதாநாயகர்கள் இருக்கவே செய்கின்றனர். இவர்களை வீரர்களாகப் பாராட்டுகிற நடைமுறையை அரசுக்ள பின்பற்றுகின்றன. கோடிக்கணக்கில் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்படுகின்றன. வீரப்பன் தேடுதல் - வேட்டை என்ற பெயரில் 50க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பெண்கள் பலர் வன்புணர்ச்சி செய்யப்பட்டனர். தேவாரத்துக்கு வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டா மட்டும் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ளது என ஒரு பத்திரிகை எழுதியிருந்தது. தேசிய மனித உரிமை ஆணையத்தின் நெறிமுறைகள் கறாராக நடைமுறைப்படுத்தப் பட்டால் இந்தக் கதாநாயகர்களின் சாயம் வெளுக்கும். கொடூர முகங்கள் அம்பலமாகும்.


அண்மைக்காலத்தில் தமிழகத்தில் போலி மோதல் கொலைகள் திடீரென அதிகரித்திருப்பது ஏன்?


தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 68 மோதல் கொலைகள் நடைபெற்றுள்ளன. இதில் திமுக,அதிமுக, இரண்டுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. அதிமுக ஆட்சி என்றாலே அத போலீஸ் ஆட்சிதான். தேவாரம் செய்த கொலைகள் எல்லாம் எம்.ஜி.ஆர்.ஆட்சிக் காலத்தில் நடந்தன. நான் முன்பே சொன்னபடி அதிமுக ஆட்சியைக் காட்டிலும் சட்டம் ஒழுங்கை நிறைவேற்றுவதில் நான் ஒன்றும் குறைந்தவன் இல்லை எனக் காட்டிக் கொள்ளும் நிர்ப்பந்தம் கருணாநிதிக்கு உள்ளது. கடந்த இரண்டாண்டுகளில் 15 மோதல் கொலைகள் நடைபெற்றுள்ளன. இன்னொன்றையும் நாம் இங்கு நினைத்து பார்ப்பது அவசியம். செப்டெம்பர் 11க்குப் பிறகு உலக அளவில் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் மனித உரிமை மீறல்கள் அதிமாகின்றன. இந்தியாவில் மன்மோகன்சிங் தலைமையில தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படும் உலகமயம், தாராளமயம், ஊடாகப் பெரிய அளவில் கனிமவளமும், நீர்வளமும் உள்ள நிலங்கள் உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வாரி வழங்கப்படுகின்றன. அப்பாவிப் பழங்குடி மக்களின் நிலங்கள் இவ்வாறு பெரிய அளவில் பறிக்கப்படுகின்றன.
மாவோயிஸ்டுகளின் நடைமுறை குறித்து நமக்கு விமர்சனம் இருந்த போதும், அவர்கள்தாம் இந்தப் பிரச்சனைகயைக் கையில் எடுக்கின்றனர். எனவே உள்நாட்டுப் பாதுகாப்பு என்கிற ஒலத்தை மைய அரசு தொடர்ந்து எழுப்பிக் கொண்டே இருக்கிறது. இராணுவத்திற்கும் காவல்துறைக்கும் அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இரண்டு மாதத்திற்கு ஒரு முறை உள்துறை அமைச்சர்களை எல்லாம் கூட்டிக் கடும் நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. இப்படியெல்லாம் மோதல் கொலை அதிகரிப்பின் பின்னணியை நாம் பார்க்க வேண்டியுள்ளது. இதில் ஆளும் கட்சியை மட்டும் சொல்லிப் பயனில்லை. பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசைத் தவிர மற்றத் தலைவர்கள் யாரும் மோதல் கொலைகளைக் கண்டிக்கவில்லையே…!


போலி மோதல் கொலைகளை நீதிமன்றங்கள் எவ்வாறு பார்க்கின்றன?


நீதிமன்றங்கள் அவ்வப்போது சில வழக்குகளில் போலி மோதல்களைக் கண்டிக்காமல் இல்லை. மதுசூதனன் ராவ் போலி மோதலில் கொல்லப் பட்டபோது, புகழ்பெற்ற வழக்கறிஞர் கே.ஜி.கண்ணபிரான் ஆந்திர மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். (ரிட் எண் 16868/1995) நீதி அரசர்கள் பி.எஸ். மிஸ்ரா, சி.வி.என். சாஸ்திரி ஆகியோர் அளித்த தீர்ப்பு முக்கியமானது. ஒரு குடிமகனின் உயிர் வாழ்வில் இடையீடு செய்வது சாதாரண நிகழ்வாக இருக்க முடியாது என்பதை வலியுறுத்திச் சொன்ன அவர்கள் காவல்துறைக் கொலைக்கும் சாதாரணக் கொலைக்கும் தனித்தனிச் சட்டங்கள் இருக்க முடியாது என்றனர். மோதலில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகளை அனைத்துக் கிரிமினல் குற்றவாளிகளைப் போலவுமே புலன் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் கூறினர்.புகழ்பெற்ற டி.கே.பாசு-எதிர்-மேற்குவங்க அரசு வழக்கில் நீதியரசர்கள் குர்தீப்சிங், ஏ.எஸ்.ஆனந்த் ஆகியோர் வழங்கிய தீர்ப்பும, பியசிஎல்-எதிர்-இந்திய அரசு வழக்கில் நீதியரசர்கள் ஜீவன் ரெட்டி,சுகவ் சென் ஆகியோர் வழங்கிய தீர்ப்பும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை. மிகச்சமீபத்தில் ஏப்ரல் 22 அன்று உச்ச நீதிமன்றத்தில் நீதியரசர்கள் அல்டாப் ஆலம், பி.என்.அகர்வால், ஜி.எஸ்.சிங்வீ ஆகியோர் காஷ்மீர மாநிலத்தில் வீரப் பரிசுகளுக்காகவும் பதவி உயர்வுகளுக்காகவும் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை வன்மையாகக் கண்டித்துள்ளனர். ஆனால் எல்லா வழக்குகளிலும் நீதிமன்றங்கள் இவ்வாறு நடந்துள்ளன எனச் சொல்ல முடியாது. இது தொடர்பாக மனித உரிமை அமைப்புகள் தொடர்கின்ற வழக்குகளில் நீதிமன்றங்கள் விரைவாகத் தீர்ப்பளிப்பதும் இல்லை. காட்டாக, சமீபத்தில் கொல்லப்பட்ட மாவோயிஸ்டு நவீன் பிரசாரத்தின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டுமெனக் கோரி மேற்கொள்ளப்பட்ட வழக்கு தள்ளிக் கொண்டே போகிறது. மோதலில் கொல்வதற்கு முன்னரே நபர்கள் கைது செய்யப்படுவது குறித்து நம் எல்லோருக்கும் தெரியும். அது குறித்து ஆட்கொணாவு மனு போட்டால் விரைவாகத் தீர்ப்பு வழங்குவதும் இல்லை. சமீபத்தில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் அவர்கள் தாங்கள் பொதுச் சேவர்கள் அல்ல,அரசமைப்புச் சட்டக் காப்பாளர்கள் எனவும் கூறியுள்ளார்.
அரசியல் சட்டக் காப்பாளர்கள் மட்டுமல்ல, குடிமக்களின் உயிரையும் காக்க முடியும் என்பதை உணர்ந்து அவர்கள் செயல்பட்டால் பல உயிர்களைக் காக்க முடியும். சிறையில் இருந்த மணல்மேடு சங்கரின் தாய், தன் மகன் என்கவுண்டர் செய்யப்படலாம் என நீதிமன்றத்தில் புகார் செய்தார். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை யென காவல்துறை சொல்லியது. ஆனால், அவர் அவ்வாறே கொல்லப்பட்ட போது இந்த நீதிமன்றம் என்ன செய்தது? இதுபோன்ற பல வழக்குகளையும் என்னால் சொல்ல முடியும்.


போலி மோதல் குறித்து நீதிமன்றம் உறுதியாக நடவடிக்கை எடுத்த வழக்கு ஏதும் உண்டா?


சில வழக்குகள் பற்றிச் சற்றுமுன் சொன்னேன். ஆனால் ஒன்று இதுவரைக்கும் பெரிய அளவில் காவல்துறையினர் இத்தகைய வழக்குகளில் தண்டிக்கப்பட்டது இல்லை. சொராபுதின் வழக்கு இந்தியத் துணைக்கண்ட அளவில் ஒரு முக்கியப் பிரச்சனையாக மாறியதால் வன்சாரா,ராஜ்குமார் பாண்டியன் மற்றும் பல காவல் துறையினர் சுமார் இரண்டாண்டுகளாகப் பிணையில் வெளிவராத நிலையில் உள்ளனர். வன்சாராவைப் பெரிய தேசபக்தன் எனவும், தேசத்துரோகம் செய்ய வந்த முஸ்லிமைக் கொன்ற வீரர் எனவும் இந்துத்துவவாதிகள் முன்வைத்து ஆதரவு திரட்டுகின்றனர். வன்சாரா நீதிமன்றத்திற்கு வரும் போதெல்லாம் ‘பாரு பாரு யாரு வருது, குசராத்தின் சிங்கம் வருது’ என்று அவரின் சாதிக்காரார்களையும் உறவினர்களையும் வைத்து, முழக்கமிடச் செய்கின்றனர். இப்படியான அரசியலும் ஒருப்ககம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.


போலி மோதல் குறித்து அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு என்ன?


இந்திய அளவில் பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் பெரிய வேறுபாடு இருப்பதாகச் சொல்ல முடியாது. 1949இல் ஜவஹர்லால் நேரு தேசப் பாதுகாப்பிற்கு ஆபத்தானவர்கள் என மூன்று பிரிவினரைச் சுட்டிக் காட்டினார். 1.வகுப்பு வாதிகள் 2.கம்னியூஸ்டுகளில் சிலர் 3.தேச ஒற்றுமைக்கு எதிரானவர்கள். இன்றைய அரசியல் மொழியில் இந்த மூன்று பிரிவினரையும் கீழ்க்கண்டவாறு சொல்லலாம்: 1.முஸ்லீம் தீவிரவாதிகள், 2.மாவோயிஸ்டுகள், 3.தேசிய விடுதலைக்காக ஆயுதம் தாங்கிப் போராடுபவர்கள். உலகமயச் சூழலில் தற்போது ரவுடிகளும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்கள் அவ்வளவுதான்.
பொதுவுடமையாளர்களைப் பொறுத்தமட்டில் அவர்கள் மனித உரிமையைப் பற்றிப் பேசியதில்லை என்கிற அவதூறு உண்டு. சோவியத்து உருசியாவில் மக்களுக்கு ஆட் கொணர்வு மனு உரிமைகூட அளிக்கப்பட்டது இல்லை. இபொக,மார்க்சிஸ்டுக் கட்சி இரண்டுமே பொதுவாக மனிதவுரிமைப் பிரச்சினைகளைப் பேசுவதில்லை. சொல்லப்போனால் அவர்கள் ஆளும் மாநிலங்களில் அவர்களே மனிதவுரிமை மீறல்களுக்குக் காரணமாக இருக்கிறார்கள். பிற சிறிய அமைப்புகளும்கூட அவரவர் சார்ந்த மனிதவுரிமை மீல்கள் நடைபெறும்போது மட்டுமே எதிர்வினை ஆற்றுகின்றன. முஸ்லீம்கள் பிரச்சனையில் பொதுவாக யாரும் அக்கறை காட்டுவதில்லை. முஸ்லீம்களும் அவர்கள் பிரச்சனைகளுக்கே முக்கியத்துவம் அளிக்கின்றனர். ஆனால், இன்று எல்லாத் தரப்பினர் மீதும் கடுமையான தாக்குதல்கள் மேற்கொள்ளப் படுவதை முன்னிட்டுச் சிறிய அமைப்புகள் கைகோக்கத் தொடங்கியுள்ளன. இது வரவேற்கத்தக்க அம்சம். இந்நிலையில் சென்ற 22 ஆம் தேதி சட்டமன்றத்தில் முதலமைச்சர் கருணாநிதி இது குறித்துப் பேசும்போது, தீவிரவாதத்தை ஒடுக்குவதில் ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்து செயல்பட வேண்டும் எனக் குறிப்பிட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இயற்கைச் சீரழிவுகளின் போது எதிர்க்கட்சியினர் ஒத்துழைப்பது போலத் தீவிரவாதத்தை ஒடுக்குவதிலும் ஒத்துழைக்க வேண்டுமாம். இது காவல்துறை அத்துமீறல்களை ஊக்குவிக்கும் பேச்சு. இதை முதல்வர் திரும்பப் பெற வேண்டும்.


போலி மோதல் கொலைகளை வெளிப்படுத்திக் குற்றவாளிகளைக் கூண்டிலேற்ற என்ன செய்ய வேண்டும் எனக் கருதுகிறீர்கள்?


முதலில் போலி மோதல் கொலை தொடர்பாக மக்கள் மத்தியில் உள்ள தவறான கருத்துகளை நீக்குவதற்குக் கருத்துப் பரப்புரை முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். மனிதவுரிமைகளில் அக்கறையுள்ள அமைப்பினர் அனைவரும் ஒன்றாக இணைந்து போலி மோதல்களை எதிர்க்க வேண்டும். ஊடகத் துறையினர்,அரசியல் கட்சியினர் ஆகியோருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு போலி மோதலுக்கு எதிராகக் கருத்துத் தெரிவிக்குமாறு அவர்களை வற்புறுத்த வேண்டும். போலி மோதல்கள் தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள நெறிமுறைகளை உடனடியாகப் பின்பற்ற வேண்டும் என்கிற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்த வேண்டும். மருத்தவர் இராமதாசு அவர்கள் கூறியுள்ளது போல எல்லா மோதல் கொலைகள் குறித்தும் விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும். “ஆயுதம் தாங்கிய எதிர்ப்புகளை நாங்கள் ஆயுதம் கொண்டு எதிர்கொள்ளாமல் சாக வேண்டுமா?” எனக் காவல்துறையினர் கேட்பார்கள். அப்படியான சந்தர்பங்களில் அவர்கள் கேமார(camera) பொருத்திய துப்பாக்கிகளைப் பயன்படுத்த வேண்டும். உண்மையிலேயே கொல்லப்பட்டவர்கள் தப்பியோட முயன்றார்களா,எதிர்த் தாக்குதல் மேற் கொண்டார்களா,தற்காப்புக்காகத்தான் சுட்டார்களா என்பது வெட்ட வெளிச்சமாகும். தீவிரவாதப் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வுகளே காண முடியும் என்ற கருத்தை வலியுறுத்த வேண்டும். 2006ஆம் ஆண்டில் இந்திய அரசின் திட்டக்குழு, வந்தோப்பாத்தியாயா என்கிற ஒய்வு பெற்ற IPS அதிகாரி ஒருவரின் தலைமையில் குழு ஒன்றை நியமித்தது. மேற்கு வங்கத்தில் நக்சல்களை எதிர்கொள்வதில் இவர் முக்கியப் பங்காற்றியவர். முன்னாள் உத்திரப்பிரதேசக் காவல்துறை இயக்குனர் பிரகாசின், பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவர் சக்தியோ தோரத், புகழ் பெற்ற மனித உரிமைப் போராளி பாலகோபால் மற்றும் பலர் இக்குழுவில் பணியாற்றினர். இவர்கள் அளித்துள்ள பரிந்துரைகளின் சுருக்கம் ஏப்பரல் 28 ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளிதழில் வெளிவந்துள்ளது. பழங்குடியினரின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவது, குறிப்பாக அவர்கள் குடியிருக்கும் இடமே அவர்களுக்குச் சொந்தமில்லாத நிலை… இவற்றையெல்லாம் கவனத்தில் எடுத்துக் கொண்டு உரிய வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்படாமல் வெறும் சட்டம் - ஒழுங்குப் பிரச்சனையாகவே அணுகி நக்சல் பிரச்சனையைத் தீர்த்துவிட முடியாது என அக்குழு அறிவுறுத்தியுள்ளது. கருணாநிதியும் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.


1 comment:

அபு ஆதில் said...

கொலைக்குற்றம் உறுதி செய்யப்பட்டவர் களுக்குக்கூட மரணதண்டனை கூடாது என135 நாடுகள் முடிவெடுத்துள்ள நிலையில், குற்றம் நிரூபிக்கவேபடாத நிலையில் மரணத்தீர்ப்பை வழங்கும் அதிகாரத்தைக் காவல்துறைக்கு யார் கொடுத்தது?