Friday, November 28, 2008

போலி மோதல் படுகொலைகள் சமூக பிரச்சினைகளுக்கு தீர்வாகுமா…? இவை தொடர்பான சட்டத்தின் பார்வை என்ன….?மனித உரிமைக்கான மக்கள் கழகத்தின் பேராசிரியர் மார்க்ஸ்

போலி மோதல் படுகொலைகள் (Fake encounters) உலக அளவில் அறியப்பட்டதும் இடம் பெறுவதுமாக இருந்தாலும் கூட மூன்றாம் உலகநாடுகளில் குறிப்பாக இந்தியாவில் இதன் முக்கியத்துவம் சிறுக,சிறுக அதிகரித்து அரச அங்கீகாரத்தை சட்டரீதியாக கூட பெற்றுவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தும் நிலையை எட்டியுள்ளதை காண்கிறோம்.காவல்துறை சட்டப் புறம்பாக நிறைவேற்றும் Fake encounters எனப்படும் இந்த கொலைகார நடைமுறையை அம்பலபடுத்துவதில் சர்வதேச அளவில் மனிதஉரிமை அமைப்புகள் முக்கிய பங்காற்றி வருகின்றன.
இந்த வகையில் தற்போது இந்திய அளவில் செயல்படும் மனித உரிமைக்கான மக்கள் கழகத்தின் அமைப்பாளர் பேராசிரியர் அ.மார்க்ஸ அவர்கள் இந்த விடயத்தில் ஆற்றும் பாரிய பணி மிகமிக குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக அவருடனான ஒரு நேர் காணல்……

போலி மோதல் எதிர்ப்புக் கூட்டியக்கம் ஒன்றை அமைத்துள்ளீர்கள்.மோதல்(என்கவுன்டர்) என்ற பெயரால் திட்டமிட்ட படுகொலைகளே நிகழ்கின்றன என்று கூறியுள்ளீர்கள். எப்படி என்று விளக்க முடியுமா….?

இந்த கூட்டியக்கம் சென்ற ஆண்டு நடுவில் உருவாக்கப்பட்டது. தமிழக அளவில் உருவாக்கப்பட்டது என்ற போதிலும் இதற்கு முன்னதாக சென்ற 2007 ஜுன் 26 ஆம் நாள் மும்பையில்,இந்திய அளவில் மனித உரிமை அமைப்புகள் இணைந்து ஒரு மாநாடு நடத்தின. போலி மோதல்களுக்கு எதிரான பரப்புரைக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. குசாரத்தில் வன்சாரா, இராஜ்குமார்,பாண்டியன் முதலிய IPS அதிகாரிகள் முன்னின்று நடத்திய சொராபுதீன் மோதல் ஒரு திட்டமிட்ட படுகொலை என்பது அம்பலப்பட்டுத் துணைக்கண்ட அளவில் விவாதப் பொருளான நிலையில் அந்த மாநாடு கூட்டப்பட்டது. இந்தியாவெங்கிலும் பல்வேறு மாநிலங்களிலும் இது போன்ற போலி மோதல் கொலைகள் மேற்கொள்ளப்படுவது கவனத்திற்கு வந்தது. “அவுட்லுக்” வார இதழ் (மே 27) என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் சிறப்பிதழ் ஓன்றை வெளியிட்டது. 100 என்கவுண்டர் செய்தவன் 80 செய்தவன் என்று எல்லாம் புகைப்படங்களுடன் ஆல்பம் ஒன்றும் வெளியிடபபட்டது.
மோதல் என்ற பெயரில் படுகொலைகளை நடத்துவது தமிழகத்திலும் கடந்த 30 ஆண்டுகளாக நடந்துவருவம் கதைதான்.80களில் வால்டர் தேவாரம் தலைமையில் சுமார் இருபது நக்சலைட்டுகள் கொல்லப்பட்டார்கள். பின்னர் ராசாராம்,சரவணன் போன்ற தமிழ்த்தேச விடுதலைக் கோரிக்கையைக் முன்வைத்து இயங்கிய ஆயுதக் குழுவினரும்,இம்முறையில் கொல்லப்பட்டார்கள். ராசாராமும்,சரவணனும் சிறையில் இருக்கும்போதே காவல்துறையினரால் கொல்லப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.கருணாநிதி இம்முறை ஆட்சிக்கு வந்த கையோடு மூன்று நான்கு ரவுடிகள்,மோதல் என்ற பெயரில் கொலை செய்யப்பட்டார்கள். முந்தைய ஜெயலலிதாவின் ஆட்சியைக்காட்டிலும் தாங்கள் ஓன்றும் சட்டம்,ஒழுங்கை நிலைநாட்டுவதில் குறைந்தவர்களல்ல எனக் காட்டிக் கொள்வதற்க் காகவே இக்கொலைகள் நிகழ்த்தப்பட்டன என பத்திரிக்கைகள் எழுதின்.
இந் நிலையில் தான்,இத்தகைய போலி மோதல்களை எதிர்க்கக் கூடிய பல்வேறு சிறிய மனித உரிமை அமைப்புகள் ஓன்றாக இணைந்து போலி மோதல் கொலை எதிர்ப்புக் கூட்டியக்கத்தை உருவாக்கிணோம். சென்ற ஜுலை மாதத்தில் சென்னையில் எழுச்சிமிக்க கருத்தரங்கம் நடத்திணோம்.போலி மோதலுக்கு எதிரான ஓரு விரிவான துண்டறிக்கை ஆயிரக்கணக்கில் அச்சிட்டுத் தமிழகமெங்கும் விநியோகித்தோம். இந்தியாவிலும் சரி, தமிழகத்திலும் சரி 99% மோதல்கள் போலி மோதல்கள்தான். முன்னரே பிடித்துச்சென்று நிராயுதபாணியான நிலையில் கொன்றுவிடும் படுகொலைகள் தான்,இந்த மோதல்கள். எதிலும் காவல்துறையினர் கொல்லப்படுவதில்லை. பெரிய காயங்கள் அடைவதும் கிடையாது. ஆனால் காவல் துறையினரால் குறிவைக்கப் படுபவர்கள் அவ்வளவு பேரும் கொல்லப் படுகின்றனர். தப்பிச் சென்றதாகவோ காயங்களுடன் பிடி பட்டதாகவோ வரலாறு கிடையாது. இது ஒன்றே எல்லா மோதல்களும் போலி மோதல்களே என்பதற்குப் போதிய சான்று.

தமிழகத்திலும் இந்தியாவின் பல பகுதிகளிலும் போலி மோதல் கொலைகள் நிகழ்வதாக அடிக்கடி செய்திகள் வருகின்றன. இந்தக் காவல்துறை உத்தி, எப்போது,எப்படி தொடங்கியது….? மோதல் கொலைக்குப் பலியாகிறவர்கள் யார்….?

நெருக்கடி நிலைக் காலத்தில் ஆந்திராவில் மட்டும் 300க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் இவ்வாறு கொல்லப்பட்டனர். நெருக்கடி நிலை நீக்கப்பட்டவுடன் அப்போது நடைபெற்ற அத்துமீறல்கள் குறித்த விவாதங்கள் பெரிய அளவில் நடைடிபெற்றதையொட்டி இத்தகைய மோதல் கொலைகள் சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. எனினும், 80களில் காலிஸ்தான் போராட்டம் தீவிரமாகச் செயல்பட்ட பின்னணியில் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டார். அதையொட்டி மீண்டும் மோதல் கொலைகள் தொடர்ந்தன. 96இல் மத்தியப் புலனாய்வுக் குழு உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கை ஒன்றின்படி 1984-95 காலகட்டத்தில் அமிர்தசரசில் மட்டும் 2,097 உடல்கள் சட்ட விரோதமாக எரிக்கப்பட்டன. பிற பஞ்சாப் நகரங்களிலும் இதே நிலைதான். காணாமல் போனதாகச் சொல்லப்பட்டவர்களில் 60 விழுக்காட்டினர் கொல்லப்பட்டார்கள் என்பது இப்போது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை. கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில் (85-96) ஆந்திர மாநிலத்தில் 1,049 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். தர்மபுரியில்,தேவாரம் தலைமையில் நடைபெற்ற கொலைகளை முன்னரே குறிப்பிட்டேன். 90களுக்குப்பின் மோதல் படுகொலைகள் முஸ்லீம் தீவிரவாதிகள் மீதும் ரவுடிகள் மற்றும் குண்டர்கள் மீதும் மேற்கொள்ளப்பட்டன. பாபர் மசூதி இடிப்பிற்குப் பின் வடமாநிலங்களில் முஸ்லீம்கள் இவ்வாறு பெருமளவில் கொல்லப்பட்டனர். நரேந்திர மோடியைக் கொல்ல வந்ததாகச் சொல்லி இர்சத் செகான் என்கிற 19 வயதுக் கல்லூரி மாணவி கொல்லப்பட்டது ஊரறிந்த உண்மை.
ரவடிகள், தாதாக்கள் கொல்லப்படுவது, உலகமயம், ரியல்எஸ்டேட் பெருக்கம் ஆகியவற்றுடன் தொடர்புடைய ஒன்று. தாதாக்களையும் ரவுடிகளையும் அரசியல்வாதிகளும், காவல் துறையுமே உருவாக்குகின்றனர். பிறகு ஒரு கட்டத்தில் அவர்களால் தங்களுக்கே ஆபத்து எனும்போது அவர்களைக் கொன்று விடுகின்றனர். ஆக, இன்று இந்தியத் துணைக்கண்டத்தில் நடாத்தப்படும் மோதல் படுகொலைகள் மூன்று தரப்பினரைக் குறிவைத்து நடத்தப்படுகின்றன. ஒன்று இபயங்கரவாதத்தை எதிர்ப்பதன் பெயரால் பெரிய அளவில் முஸ்லீம்கள் கொல்லப் படுகிறார்கள். இரண்டாவதாக வட மாநிலங்களில், குறிப்பாக காசுமீரத்தில் உள்நாட்டுப் பாதுகாப்பு என்ற பெயரால் மாவோயிஸ்டுகளும்,தேசிய இனப் போராளிகளும் கொல்லப்படுகினற்னர். மூன்றாவதாக தாதாக்கள், ரவுடிகள் முதலிய கிரிமினல் குற்றவாளிகள் கொல்லப்படுகிறார்கள்.
இந்தியாவில் ஒருபுறம் மோசமான அரம்பர்களுக்கும்(ரவடிகள்), மறுபுறம் தீவிரவாதிகள் எனப்டுவோருக்கும் எதிராக இந்தப் போலி மோதல் படுகொலை உத்தி கையாளப்பட்டு வருகிறது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் போலி மோதல் தொடர்பான நிலவரம் என்ன?சி.கே.காந்திராசன் என்கிற IPS அதிகாரி சென்னையைச் சேர்ந்த 19 ரவுடிக் கும்பல்களை ஆய்வு செய்து அண்மையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். அவரது ஆய்வேட்டுச் சுருக்கம் சென்ற ஏப்ரல் 15 “டைம்ஸ் ஆப் இந்தியா” இதழில் வெளிவந்தது. அமைப்பு ரீதியாக மேற் கொள்ளப்படும் எந்தக் குற்றமும் அரசியல்வாதிகள், காவல்துறையினர், வழக்கறிஞர்கள் ஆகியோரின் கூட்டுறவின்றி சாத்தியம் இல்லை என்பது அவரது ஆய்வின் முடிவு. சுமார் 12 போலீஸ் அதிகாரிகள் கிரிமினல்களுக்குப் பல்வேறு வகையில் ஆலோசனை சொல்பவர்களாய் இருப்பதாகவும் இத்தகைய ஆலோசனைகளுக்கு 50 ஆயிரம் முதல் பல இலட்சம் வரை ஊதியம் பெறுவதாகவும் அந்த இதழில் வெளியாகி இருந்தது. சில எடுத்துக் காட்டுகளும் கொடுக்கப் பட்டிருந்தன.
சென்ற மாதம் திருச்சியில் நடந்த மோதலில் கொல்லப்பட்ட “பாம்” பாலாஜிக்கும், தஞ்சை மேற்குக் காவல் நிலையத்தில் பணியாற்றிய குமாரவேலுவுக்கும் தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அந்த ஆய்வாளர் வேதாரண்யத்துக்கு மாற்றப்பட்டார். “பாம்” பாலாஜி மோதலில் கொல்லப்பட்டார். ஜுனியர் விகடனில் டாக் ரவி,வரிச்சியா செல்வம் என்கிற இரு ரவுடிகள் தாங்கள் மோதலில் கொல்லப்படலாம் என்று அச்சம் தெரிவித்துள்ளனர். ரவியின் வழக்கறிஞர் காரல் மார்க்ஸ் என்பவர், ரவியைக் கொல்வதற்காக அவருக்கு எதிரான கும்பல் ஒன்று மிகப் பெரியஅளவில் பணம் செலவழிப்பதாக்க கூறியுள்ளார்.
இங்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்,சில ஆண்டுகளுக்கு முன் நானா படேகர் என்கவுண்டர் ஸ்பெசலிஸ்டாக நடித்த இந்தித் திரைப்படம் வெளிவந்தது. “ஜதெக் 56″ அதாவது 56 என் கவுண்டர் செய்தவன் என்பது அதன் பெயர். நானா படேகருக்கு நடிப்பு பயிற்சி அளித்தவர் பிரதிப்வர்மா என்கிற உண்மையான என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட். இவர் 80 மோதல் கொலைகள் செய்தவர். இவருடைய சீடர் தயா நாயக் 100 மோதல் கொலைகளைச் செய்தவர். இவர்கள் இருவரும் இப்போது பணிநீக்கம் செய்யப்பட்டு நீதிமன்றங்களுக்கு அலைந்து கொண்டுள்ளனர். ஒரு ரவுடிக்கும்பலிடம் பணம் பெற்றுக்கொண்டு மற்றொரு ரவுடிக் கும்பலைக் கொன்று அளவுக்கதிமாகச் சொத்து சேர்த்தனர் என்பது அவர்கள் மீதுள்ள குற்றச்சாட்டு. ஒரு சாதாரண காவல்துறை அதிகாரியான பிரதீப் வர்மாவின் சொத்து 100 கோடி. தன்னுடைய சொந்த ஊரில் தன்னுடைய அம்மா பெயரில் பள்ளி நிறுவி அமிதாப்பச்சனை அழைத்துத் திறந்து வைத்தவர் அவர். இப்படி நிறைய சொல்லலாம். அவுட்லுக் வெளியிட்ட “என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட்”ஆல்பம் பற்றி முன்பு குறிப்பிட்டேன். இதில் குறிப்பிடப்பட்ட பலரில், ராஜ் பீரசிங் என்பவரும் ஒருவர். 100 என்கவுண்டர் செய்தவர், இவர் சென்ற மார்ச்சு இறுதியில் ரியல் எஸ்டேட் தகராறு ஒன்றில் சுட்டுக் கொல்லப்பட்டார். சம்பாதித்த பணத்தை ரியல் எஸ்டேட்டில் முடக்கும் போது ஏற்பட்ட தகராறு இது. தமிழகத்தில்கூட இத்தகைய குற்றச்சாட்டுகள் வந்து கொண்டுள்ளன. மோதலில் கொல்லப்பட்ட வெள்ளை ரவியின் மனைவி அவரைக் கொல்வதற்கு 60.000 ரூபாய் கைமாறியதாகப் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார். இவை குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.

போலி மோதல் தொடர்பான சட்டவிதிகள் என்ன? இவை மதிக்கப்படுவதும் மிதிக்கப்படுவதும் எந்த அளவில்?

தற்காப்புக்காக-தன்உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக- தேவையானால் எதிரியைக் கொல்வதற்கு, குற்றநடைமுறைச் சட்டவிதிகள் 154,170,173, 190, இந்தியத் தண்டனைச்சட்டம் 96,97,100,46 ஆகியவற்றில் இடம் உண்டு. பொதுவாக இவை தற்காப்பு உரிமையைக் குறிப்பவை. காவல் துறையினருக்கு மட்டுமின்றி எவருக்கும் பொருந்தக் கூடியவை. ஆனால், இத்தகைய நிகழ்வுகளில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அதில் இந்தியச் சாட்சியக் சட்டம் 105ஆவது பிரிவின்படி அக்கொலை தவிர்க்க இயலாதது எனவும், முற்றிலும் தற்காப்பிற்காகவே செய்யப்பட்டது எனவும் நிறுவப்படுதல் வேண்டும். இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவு 46 இன் படி காவல்துறையினர் ஒருவரைக் கைது செய்யச் செல்லும் போது அவர் கைதாக மறுத்தால் அவரை வலுக்கட்டாயமாகக் கைது செய்யலாம். இந்த வலுக்கட்டாயத்தின் எல்லை அவரை கொல்வதாகக்கூட இருக்கலாம். ஆனால்,கைது செய்யப்படுபவர் மீது சாட்டப்பட்டுள்ள குற்றம் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனைக்குரிய குற்றமாக இருக்கும் நேர்வுகளில் மட்டுமே இந்த வலுக்கட்டாயம், கொல்லுதல் என்கிற எல்லைக்குச் செல்ல முடியும் என பிரிவு 46,உட்பிரிவு 3 வரையறுக் கிறது. குற்ற நடைமுறைச் சட்டம் 176ஆவது பிரிவில் 1983ஆம் ஆண்டு சேர்க்கப்பட்ட திருத்தத்தின்படி ஒரு நிர்வாக நடுவர் இது குறித்து விசாரணை செய்ய வேண்டும். ஆனால் இது நடு நிலையுடன் மேற்கொள்ளப்படுவதில்லை என்பதே உண்மை.மோதல் நடக்கும்போத கொல்லப்பட்டவரின் மீது அவர் காவல்துறையினரைக் கொலை செய்ய முயன்றதாக இந்தியத் தண்டனைச் சட்டம் 370ஆம் பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்கிறார்கள். பின்னர் குற்றவாளி உயிருடன் இல்லை என்பதைக் காரணம் காட்டி விசாரணை இன்றி வழக்கை முடித்து விடுகிறார்கள். பெயருக்கு வருவாய்க் கோட்ட அலுவலர் (RDO) விசாரணை ஒன்றை நடத்தி மூடிவிடுகிறார்கள்.
ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். இவ்வாறு மோதல் கொலைகளை ஊற்றி மூடுகிற நடைமுறையில் காவல்துறையினரும், சிவில் நிர்வாகமும், அரசியல்வாதிகளும் கூட்டுக் களவாணிகளாக உள்ளனர்,இணைந்து செயல்படுகின்றனர்,நீதிமன்றங்களும் கண்டுகொள்வதில்லை. இராசாராம், சரவணன் என்கிற இரு தமிழ்த் தீவிரவாதிகள் சென்னை மத்திய சிறையில் இருந்தபோது கொல்லப் பட்டனர். அவர்கள் கொல்லப்படுவது முன்னரே தெரியும். அவர்கள் அந்த அச்சத்தை வெளிப்படுத்தியும் இருந்தனர். காவல் நீடிப்பிற்காக அவர்கள் சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர். காலை நேரத்தில் அழைத்துச் செல்வதே வழக்கம். ஆனால், அன்று மாலையில் அழைத்துச் செல்லப்பட்டனர். சென்டரல் ரயில்நிலையம் அருகே இருந்த மத்திய சிறைக்கு, சைதாப்பேட்டையிலிருநது அண்ணா சாலை வழியாக வருவதே வழக்கம். அன்று அவர்கள் கோட்டூர்புரம் வழியாகக் கொண்டு வரப்பட்டனர். சாலைப் போக்குவரத்து எல்லாம் நிறுத்தப்பட்டு அவர்கள் சுட்டுக் கொல்லப் பட்டனர். அவர்கள் தப்பிச் செல்ல முயன்றதாக போலீஸ் பொய்யுரைத்தது. காவல்துறை, போக்குவரத்துத் துறை ஆகிய துறைகள் இணைந்து செயல்பட்டன என்பது எண்ணிப் பார்க்க வேண்டிய செய்தி.

மோதல் சாவுகள் குறித்துத் தேசிய மனித உரிமை ஆணையம் பிறப்பித்துள்ள நெறிமுறைகள் யாவை? தமிழக அரசு அவற்றைக் கடைப்பிடிக்கிறதா…?

ஆந்திரப் பிரதேசக் குடியுரிமைக் கழகம் (APCLC) 94 மார்ச்30இல் தேசிய மனித உரிமை ஆணையத்திடம் இது குறித்து விரிவான புகார் ஒன்றை அளித்திருந்தது. அதையொட்டி தேசிய மனித உரிமை ஆணையம் 1996 நவம்பர் 5இல் தனது பார்வைகளைப் பதிவு செய்தது.1997 மார்ச்சு 29இல் ஆந்திர முதல்வருக்கு விரிவான நெறி முறைகளை அனுப்பிய ஆணையம் இதன் நகல்களை எல்லா மாநில முதல்வர்களுக்கும் அனுப்பியது. சென்ற ஆண்டில் இது தொடர்பான விவாதங்கள் இந்திய அளவிலும் தமிழக அளவிலும் மேலுக்கு வந்த போது சென்ற 2007 ஆகஸ்டு 8இல் தமிழக அரசு இது குறித்து நெறிமுறை என்ற ஒன்றை உருவாக்கி மிக அவசரம் என்று தலைப்பிட்டு, தலைமைச் செயலாளரே ஒப்பமிட்டு, காவல்துறை இயக்குநருக்கு அனுப்பியது. இதன் நகல்கள் சிறைத்துறையின் துணைக்காவல் இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டது. தேசிய மனித உரிமை ஆணையத்தின் விதிமுறைகளைப் பின்பற்றவேண்டும், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மோதல் கொலைகள் தொடர்பாக அறிக்கை அனுப்ப வேண்டும், என்பது இந்த ஆணையின் சாரம். மோதல் கொலைகள் நடை பெற்றவுடன் அருகில் உள்ள காவல் நிலையத்தில் உரிய பதிவேட்டில் அதைப் பதிவு செய்ய வேண்டும். RDO விசாரணைக்குப் பதிலாக நீதிமன்ற விசாரணை நடத்த வேண்டும். இவ் விசாரணையில் கொல்லப்பட்டவரின் உடனடி உறவினர்கள் பங்கேற்பது அவசியம். அவர்களது குற்றச் சாட்டுகளைப் பரிசீலிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் மோதலில் பங்கேற்ற அதிகாரிகளுக்கு வீரப் பரிசுகளோ, பதவி உயர்வுகளோ வழங்கக் கூடாது. மோதலில் பங்கு பெற்ற அதிகாரி அதே காவல்நிலையத்தைச் சேர்ந்தவராக இருப்பின வேறு சுதந்திரமான சிபிசிஐடி போன்ற புலன் விசாரணை அமைப்பைக கொண்டு விசாரிக்க வேண்டும். இவை அந்நெறி முறைகளில் முக்கியமானவை.
மோதல் என்பது ஒரு கொலை. காவல்துறை செய்தாலும் சரி, சாதாரண ஆள் செய்தாலும் சரி, கொலை கொலைதான் என்கிற அடிப்படையில் கைது செய்து, குற்றநடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய கொலைக் குற்றமாகவே அதைக் கருத வேண்டும். தற்காப்புக்காகக் கொன்றேன் என மெய்ப்பிக்கும் வரை அந்த அதிகாரி கொலைக் குற்றவாளிதான். அதிகாரியின் மீது குற்றம் நிரூபிக்கப்படுமானால் கொல்லப்பட்டவரது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றெல்லாம் இந்த நெறிமுறைகளில் இருந்தது. இந்த நெறி முறைகளை அவற்றின் ‘வார்த்தை, தொனி’ ஆகிய இரண்டின் அடிப்படையிலும் அப்படியே பின்பற்றவேண்டும் எனவும். இல்லையேல் ‘ கடுமையாகக் கருதப்படும்’ எனவும் மாவட்ட அதிகாரிகள் இதற்கு பொறுப்பாக்கப் படுவார்கள் எனவும் எச்சரிக்கப்பட்டிருந்தது.
நமக்கெல்லாம் பெரிதும் ஆறுதல் அளித்த அந்த நெறிமுறைகளுக்காகப் போலி மோதல் எதிர்ப்புக் கூட்டியக்கம் சார்பாகத் தமிழக முதல்வருக்கு நன்றியும் தெரிவித்தோம். கூடவே இது நடைமுறைப் படுத்தப்படுமா,அல்லது வெறும் வார்த்தைகளோடு நின்றுவிடுமா என்கிற அய்யத்தையும் வெளியிட்டிருந்தோம். நமது அய்யம் இன்று உறுதியாகி விட்டது. ஆறு மாதம் அமைதிகாத்த நம் காவல்துறையினர் சென்ற மாதத்தில் மட்டும் ஐந்து பேரைக் கொன்றுள்ளனர். மேற்கண்ட நெறிமுறைகள் எதையும் பின் பற்றவில்லை. ஏப்ரல் 3 அன்று தஞ்சையில் மிகுன் சக்கரவர்த்தி என்பவரை மோதலில் கொன்ற காவல்துறையினருக்குக் கூடுதல் காவல்துறை இயக்குனர் விசயகுமார் உடனடியாகப் பரிசுளை வழங்கியுள்ளார். நெறிமுறைகளுக்கு எதிராகச் செயல்பட்ட அவர் மீதும், நடவடிக்கையில்லை. அப்படியானால் இந்த நெறிமுறைகள் யாரை ஏமாற்றுவதற்கு?

போலி மோதல் கொலைகள் குறித்துப் பொதுமக்களின் பார்வை என்ன?

பொதுவாக நடுத்தர வர்க்கத்தினரின் பார்வை மோதல் கொலைகளுக்கு ஆதரவாக உள்ளது என்பது வேதனையான உண்மை. காவல்துறையின் பலம் இதுதான். கிரிமினல்களை வெளியே விட்டால் அவர்கள் மேலும் மேலும் கொலைகளைத் தானே செய்வார்கள்? சட்டத்தின் மூலம் அவர்களைச் சிக்க வைக்க முடியுமா? என்கிற கேள்விகள் எழுப்பப்படுகின்றன. கிரிமினல் குற்றங்களை ஒழிப்பதற்கு மோதல் கொலைகள் தான் வழி என்ற கருத்தைக் காவல்துறையே பரப்பி வருகிறது.
கிரிமினல்கள் மட்டுமே கொல்லப் படுவதில்லை. அரசியல் காரணங்களுக்காகவும் கொலைகள் நடக்கின்றன என்பதெல்லாம் மக்களுக்குச் சொல்லப்பட வேண்டும். மோதல்கொலைகளுக்கும் கிரிமினல் குற்றங்களுக்கும் தொடர்பே இல்லை. சென்னை நகரத்தில் மட்டும் கடந்த 12 ஆண்டுகளில்,18 மோதல் கொலைகள் நடை பெற்றுள்ளன. ஆனால், கிரிமினல் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. கிரிமினல்கள் எப்படி உருவாகின்றனர் என்பதை மக்களிடம் விளக்கியாக வேண்டும். காசு வாங்கிக் கொண்டு மோதல் கொலைகள் நிகழ்த்துவது, உன் மகனைக் கொலை செய்து விடுவேன் என மிரட்டி வீட்டாரிடம் பணம் பறிப்பது, இவையெல்லாம் மக்களுக்குத் தெரியாது. இவற்றையும் நாம் விளக்கியாக வேண்டும். பஸ்ஸை எரித்து மாணவிகளைக் கொன்றவர்கள். பத்திரிகை அலுவலகத்தைத் தாக்கி ஊழியர்களைக் கொன்றவர்கள் இவர்களுக்கு ஒரு நீதி, மற்றவர்களுக்கு ஒரு நீதி என்று பாகுபடுத்தித் தேர்வு செய்கிற உரிமையை காவல் துறையினருக்கு யார் அளித்தது?
கொலைக்குற்றம் உறுதி செய்யப்பட்டவர் களுக்குக்கூட மரணதண்டனை கூடாது என 135 நாடுகள் முடிவெடுத்துள்ள நிலையில், குற்றம் நிரூபிக்கவேபடாத நிலையில் மரணத்தீர்ப்பை வழங்கும் அதிகாரத்தைக் காவல்துறைக்கு யார் கொடுத்தது? அரசுச் சட்டத்தின் 21 ஆவது பிரிவின்படி இந்தியக் குடிமக்கள் எல்லோருக்கும் உயிர் வாழும் உரிமை இருக்கிறது. அரசியல் சட்டம் 14ஆவது பிரிவின்படி எல்லோரும் சமமாக நடத்தப்பட வேண்டும். இந்த மிக அடிப்படையான உரிமைகளை யெல்லாம் குழிதோண்டிப் புதைப்பவையாக மோதல் கொலைகள் உள்ளன என்பதை மக்களிடம் விளக்கிச் சொல்வது அவசியம்.

போலி மோதலை நியாயப்படுத்தும் ஊடகங்கள் அப்படிச் செய்வது ஏன்?

ஊடகங்கள், குறிப்பபாக திரைப்படங்கள் என்கவுண்டரை நியாயப்படுத்தவே செய்கின்றன. இது மிகவும் வேதனைக்குரிய நடைமுறை. சமீபத்தில் திரைப்படத் துறையைச் சேர்ந்த ஒரு சிலருடன் உரையாடக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டது. நவீன் பிரசாத் என்கிற மாவோயிஸ்டு கொல்லப்பட்டது குறித்து அவர்களிடம் பேசும்போது, மோதல் கொலைகள் குறித்த அப்பட்டமான நடுத்தரவர்க்க மனநிலையே அவர்களிடம் இருந்தது அதிர்ச்சி அளித்தது. இதில் திரைப்படத் துறையை மட்டும் சொல்லிப் பயனில்லை. நம் எழுத்தாளர்கள் சிந்தனையாளர்கள் இதைக் கண்டு கொள்வது இல்லை, குறிப்பிட்ட திரைப்படங்களை விமர்சிப்பதில்லை. பத்திரிகைகளைப் பொறுத்தமட்டில் புலனாய்வு இதழ்கள் ஒரளவு நம் தரப்பு செய்திகளை வெளியிடுவது, சில உண்மைகளை வெளிப்படுத்த வாய்ப்பாக உள்ளது. கூடவே காவல்துறை அளிக்கிற அப்பட்டமான பொய்ச் செய்திகளையும், கொல்லப்பட்டவர் குறித்த அவதூறுகளையும் வெளியிடுவதன் மூலம் ஒட்டுமொத்தமாகக் காவல்துறையின் கருத்துகளுக்கு ஆதரவு ஏற்படும் நிலையே உள்ளது.
தில்லி, மும்பை, குசாரத்தில் போலி மோதல் வல்லுநர்கள் என்றே சில காவல்துறை அதிகாரிகள் பெயர் பெற்றனர். இங்கும் சிலருக்கு அந்தப் பெயர் உள்ளது. சட்டவிரோதமாகச் செய்வதை இப்படிப் பெருமைப்படுத்தலாமா?நான் முன்பே சொன்னேன், தமிழ்நாட்டிலும்கூட இத்தகைய மோதல் கதாநாயகர்கள் இருக்கவே செய்கின்றனர். இவர்களை வீரர்களாகப் பாராட்டுகிற நடைமுறையை அரசுக்ள பின்பற்றுகின்றன. கோடிக்கணக்கில் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்படுகின்றன. வீரப்பன் தேடுதல் - வேட்டை என்ற பெயரில் 50க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பெண்கள் பலர் வன்புணர்ச்சி செய்யப்பட்டனர். தேவாரத்துக்கு வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டா மட்டும் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ளது என ஒரு பத்திரிகை எழுதியிருந்தது. தேசிய மனித உரிமை ஆணையத்தின் நெறிமுறைகள் கறாராக நடைமுறைப்படுத்தப் பட்டால் இந்தக் கதாநாயகர்களின் சாயம் வெளுக்கும். கொடூர முகங்கள் அம்பலமாகும்.

அண்மைக்காலத்தில் தமிழகத்தில் போலி மோதல் கொலைகள் திடீரென அதிகரித்திருப்பது ஏன்?

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 68 மோதல் கொலைகள் நடைபெற்றுள்ளன. இதில் திமுக,அதிமுக, இரண்டுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. அதிமுக ஆட்சி என்றாலே அத போலீஸ் ஆட்சிதான். தேவாரம் செய்த கொலைகள் எல்லாம் எம்.ஜி.ஆர்.ஆட்சிக் காலத்தில் நடந்தன. நான் முன்பே சொன்னபடி அதிமுக ஆட்சியைக் காட்டிலும் சட்டம் ஒழுங்கை நிறைவேற்றுவதில் நான் ஒன்றும் குறைந்தவன் இல்லை எனக் காட்டிக் கொள்ளும் நிர்ப்பந்தம் கருணாநிதிக்கு உள்ளது. கடந்த இரண்டாண்டுகளில் 15 மோதல் கொலைகள் நடைபெற்றுள்ளன. இன்னொன்றையும் நாம் இங்கு நினைத்து பார்ப்பது அவசியம். செப்டெம்பர் 11க்குப் பிறகு உலக அளவில் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் மனித உரிமை மீறல்கள் அதிமாகின்றன. இந்தியாவில் மன்மோகன்சிங் தலைமையில தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படும் உலகமயம், தாராளமயம், ஊடாகப் பெரிய அளவில் கனிமவளமும், நீர்வளமும் உள்ள நிலங்கள் உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வாரி வழங்கப்படுகின்றன. அப்பாவிப் பழங்குடி மக்களின் நிலங்கள் இவ்வாறு பெரிய அளவில் பறிக்கப்படுகின்றன.
மாவோயிஸ்டுகளின் நடைமுறை குறித்து நமக்கு விமர்சனம் இருந்த போதும், அவர்கள்தாம் இந்தப் பிரச்சனைகயைக் கையில் எடுக்கின்றனர். எனவே உள்நாட்டுப் பாதுகாப்பு என்கிற ஒலத்தை மைய அரசு தொடர்ந்து எழுப்பிக் கொண்டே இருக்கிறது. இராணுவத்திற்கும் காவல்துறைக்கும் அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இரண்டு மாதத்திற்கு ஒரு முறை உள்துறை அமைச்சர்களை எல்லாம் கூட்டிக் கடும் நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. இப்படியெல்லாம் மோதல் கொலை அதிகரிப்பின் பின்னணியை நாம் பார்க்க வேண்டியுள்ளது. இதில் ஆளும் கட்சியை மட்டும் சொல்லிப் பயனில்லை. பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசைத் தவிர மற்றத் தலைவர்கள் யாரும் மோதல் கொலைகளைக் கண்டிக்கவில்லையே…!

போலி மோதல் கொலைகளை நீதிமன்றங்கள் எவ்வாறு பார்க்கின்றன?

நீதிமன்றங்கள் அவ்வப்போது சில வழக்குகளில் போலி மோதல்களைக் கண்டிக்காமல் இல்லை. மதுசூதனன் ராவ் போலி மோதலில் கொல்லப் பட்டபோது, புகழ்பெற்ற வழக்கறிஞர் கே.ஜி.கண்ணபிரான் ஆந்திர மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். (ரிட் எண் 16868/1995) நீதி அரசர்கள் பி.எஸ். மிஸ்ரா, சி.வி.என். சாஸ்திரி ஆகியோர் அளித்த தீர்ப்பு முக்கியமானது. ஒரு குடிமகனின் உயிர் வாழ்வில் இடையீடு செய்வது சாதாரண நிகழ்வாக இருக்க முடியாது என்பதை வலியுறுத்திச் சொன்ன அவர்கள் காவல்துறைக் கொலைக்கும் சாதாரணக் கொலைக்கும் தனித்தனிச் சட்டங்கள் இருக்க முடியாது என்றனர். மோதலில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகளை அனைத்துக் கிரிமினல் குற்றவாளிகளைப் போலவுமே புலன் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் கூறினர்.புகழ்பெற்ற டி.கே.பாசு-எதிர்-மேற்குவங்க அரசு வழக்கில் நீதியரசர்கள் குர்தீப்சிங், ஏ.எஸ்.ஆனந்த் ஆகியோர் வழங்கிய தீர்ப்பும, பியசிஎல்-எதிர்-இந்திய அரசு வழக்கில் நீதியரசர்கள் ஜீவன் ரெட்டி,சுகவ் சென் ஆகியோர் வழங்கிய தீர்ப்பும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை. மிகச்சமீபத்தில் ஏப்ரல் 22 அன்று உச்ச நீதிமன்றத்தில் நீதியரசர்கள் அல்டாப் ஆலம், பி.என்.அகர்வால், ஜி.எஸ்.சிங்வீ ஆகியோர் காஷ்மீர மாநிலத்தில் வீரப் பரிசுகளுக்காகவும் பதவி உயர்வுகளுக்காகவும் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை வன்மையாகக் கண்டித்துள்ளனர். ஆனால் எல்லா வழக்குகளிலும் நீதிமன்றங்கள் இவ்வாறு நடந்துள்ளன எனச் சொல்ல முடியாது. இது தொடர்பாக மனித உரிமை அமைப்புகள் தொடர்கின்ற வழக்குகளில் நீதிமன்றங்கள் விரைவாகத் தீர்ப்பளிப்பதும் இல்லை. காட்டாக, சமீபத்தில் கொல்லப்பட்ட மாவோயிஸ்டு நவீன் பிரசாரத்தின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டுமெனக் கோரி மேற்கொள்ளப்பட்ட வழக்கு தள்ளிக் கொண்டே போகிறது. மோதலில் கொல்வதற்கு முன்னரே நபர்கள் கைது செய்யப்படுவது குறித்து நம் எல்லோருக்கும் தெரியும். அது குறித்து ஆட்கொணாவு மனு போட்டால் விரைவாகத் தீர்ப்பு வழங்குவதும் இல்லை. சமீபத்தில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் அவர்கள் தாங்கள் பொதுச் சேவர்கள் அல்ல,அரசமைப்புச் சட்டக் காப்பாளர்கள் எனவும் கூறியுள்ளார்.
அரசியல் சட்டக் காப்பாளர்கள் மட்டுமல்ல, குடிமக்களின் உயிரையும் காக்க முடியும் என்பதை உணர்ந்து அவர்கள் செயல்பட்டால் பல உயிர்களைக் காக்க முடியும். சிறையில் இருந்த மணல்மேடு சங்கரின் தாய், தன் மகன் என்கவுண்டர் செய்யப்படலாம் என நீதிமன்றத்தில் புகார் செய்தார். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை யென காவல்துறை சொல்லியது. ஆனால், அவர் அவ்வாறே கொல்லப்பட்ட போது இந்த நீதிமன்றம் என்ன செய்தது? இதுபோன்ற பல வழக்குகளையும் என்னால் சொல்ல முடியும்.

போலி மோதல் குறித்து நீதிமன்றம் உறுதியாக நடவடிக்கை எடுத்த வழக்கு ஏதும் உண்டா?

சில வழக்குகள் பற்றிச் சற்றுமுன் சொன்னேன். ஆனால் ஒன்று இதுவரைக்கும் பெரிய அளவில் காவல்துறையினர் இத்தகைய வழக்குகளில் தண்டிக்கப்பட்டது இல்லை. சொராபுதின் வழக்கு இந்தியத் துணைக்கண்ட அளவில் ஒரு முக்கியப் பிரச்சனையாக மாறியதால் வன்சாரா,ராஜ்குமார் பாண்டியன் மற்றும் பல காவல் துறையினர் சுமார் இரண்டாண்டுகளாகப் பிணையில் வெளிவராத நிலையில் உள்ளனர். வன்சாராவைப் பெரிய தேசபக்தன் எனவும், தேசத்துரோகம் செய்ய வந்த முஸ்லிமைக் கொன்ற வீரர் எனவும் இந்துத்துவவாதிகள் முன்வைத்து ஆதரவு திரட்டுகின்றனர். வன்சாரா நீதிமன்றத்திற்கு வரும் போதெல்லாம் ‘பாரு பாரு யாரு வருது, குசராத்தின் சிங்கம் வருது’ என்று அவரின் சாதிக்காரார்களையும் உறவினர்களையும் வைத்து, முழக்கமிடச் செய்கின்றனர். இப்படியான அரசியலும் ஒருப்ககம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

போலி மோதல் குறித்து அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு என்ன?

இந்திய அளவில் பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் பெரிய வேறுபாடு இருப்பதாகச் சொல்ல முடியாது. 1949இல் ஜவஹர்லால் நேரு தேசப் பாதுகாப்பிற்கு ஆபத்தானவர்கள் என மூன்று பிரிவினரைச் சுட்டிக் காட்டினார். 1.வகுப்பு வாதிகள் 2.கம்னியூஸ்டுகளில் சிலர் 3.தேச ஒற்றுமைக்கு எதிரானவர்கள். இன்றைய அரசியல் மொழியில் இந்த மூன்று பிரிவினரையும் கீழ்க்கண்டவாறு சொல்லலாம்: 1.முஸ்லீம் தீவிரவாதிகள், 2.மாவோயிஸ்டுகள், 3.தேசிய விடுதலைக்காக ஆயுதம் தாங்கிப் போராடுபவர்கள். உலகமயச் சூழலில் தற்போது ரவுடிகளும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்கள் அவ்வளவுதான்.
பொதுவுடமையாளர்களைப் பொறுத்தமட்டில் அவர்கள் மனித உரிமையைப் பற்றிப் பேசியதில்லை என்கிற அவதூறு உண்டு. சோவியத்து உருசியாவில் மக்களுக்கு ஆட் கொணர்வு மனு உரிமைகூட அளிக்கப்பட்டது இல்லை. இபொக,மார்க்சிஸ்டுக் கட்சி இரண்டுமே பொதுவாக மனிதவுரிமைப் பிரச்சினைகளைப் பேசுவதில்லை. சொல்லப்போனால் அவர்கள் ஆளும் மாநிலங்களில் அவர்களே மனிதவுரிமை மீறல்களுக்குக் காரணமாக இருக்கிறார்கள். பிற சிறிய அமைப்புகளும்கூட அவரவர் சார்ந்த மனிதவுரிமை மீல்கள் நடைபெறும்போது மட்டுமே எதிர்வினை ஆற்றுகின்றன. முஸ்லீம்கள் பிரச்சனையில் பொதுவாக யாரும் அக்கறை காட்டுவதில்லை. முஸ்லீம்களும் அவர்கள் பிரச்சனைகளுக்கே முக்கியத்துவம் அளிக்கின்றனர். ஆனால், இன்று எல்லாத் தரப்பினர் மீதும் கடுமையான தாக்குதல்கள் மேற்கொள்ளப் படுவதை முன்னிட்டுச் சிறிய அமைப்புகள் கைகோக்கத் தொடங்கியுள்ளன. இது வரவேற்கத்தக்க அம்சம். இந்நிலையில் சென்ற 22 ஆம் தேதி சட்டமன்றத்தில் முதலமைச்சர் கருணாநிதி இது குறித்துப் பேசும்போது, தீவிரவாதத்தை ஒடுக்குவதில் ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்து செயல்பட வேண்டும் எனக் குறிப்பிட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இயற்கைச் சீரழிவுகளின் போது எதிர்க்கட்சியினர் ஒத்துழைப்பது போலத் தீவிரவாதத்தை ஒடுக்குவதிலும் ஒத்துழைக்க வேண்டுமாம். இது காவல்துறை அத்துமீறல்களை ஊக்குவிக்கும் பேச்சு. இதை முதல்வர் திரும்பப் பெற வேண்டும்.

போலி மோதல் கொலைகளை வெளிப்படுத்திக் குற்றவாளிகளைக் கூண்டிலேற்ற என்ன செய்ய வேண்டும் எனக் கருதுகிறீர்கள்?

முதலில் போலி மோதல் கொலை தொடர்பாக மக்கள் மத்தியில் உள்ள தவறான கருத்துகளை நீக்குவதற்குக் கருத்துப் பரப்புரை முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். மனிதவுரிமைகளில் அக்கறையுள்ள அமைப்பினர் அனைவரும் ஒன்றாக இணைந்து போலி மோதல்களை எதிர்க்க வேண்டும். ஊடகத் துறையினர்,அரசியல் கட்சியினர் ஆகியோருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு போலி மோதலுக்கு எதிராகக் கருத்துத் தெரிவிக்குமாறு அவர்களை வற்புறுத்த வேண்டும். போலி மோதல்கள் தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள நெறிமுறைகளை உடனடியாகப் பின்பற்ற வேண்டும் என்கிற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்த வேண்டும். மருத்தவர் இராமதாசு அவர்கள் கூறியுள்ளது போல எல்லா மோதல் கொலைகள் குறித்தும் விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும். “ஆயுதம் தாங்கிய எதிர்ப்புகளை நாங்கள் ஆயுதம் கொண்டு எதிர்கொள்ளாமல் சாக வேண்டுமா?” எனக் காவல்துறையினர் கேட்பார்கள். அப்படியான சந்தர்பங்களில் அவர்கள் கேமார(camera) பொருத்திய துப்பாக்கிகளைப் பயன்படுத்த வேண்டும். உண்மையிலேயே கொல்லப்பட்டவர்கள் தப்பியோட முயன்றார்களா,எதிர்த் தாக்குதல் மேற் கொண்டார்களா,தற்காப்புக்காகத்தான் சுட்டார்களா என்பது வெட்ட வெளிச்சமாகும். தீவிரவாதப் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வுகளே காண முடியும் என்ற கருத்தை வலியுறுத்த வேண்டும். 2006ஆம் ஆண்டில் இந்திய அரசின் திட்டக்குழு, வந்தோப்பாத்தியாயா என்கிற ஒய்வு பெற்ற IPS அதிகாரி ஒருவரின் தலைமையில் குழு ஒன்றை நியமித்தது. மேற்கு வங்கத்தில் நக்சல்களை எதிர்கொள்வதில் இவர் முக்கியப் பங்காற்றியவர். முன்னாள் உத்திரப்பிரதேசக் காவல்துறை இயக்குனர் பிரகாசின், பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவர் சக்தியோ தோரத், புகழ் பெற்ற மனித உரிமைப் போராளி பாலகோபால் மற்றும் பலர் இக்குழுவில் பணியாற்றினர். இவர்கள் அளித்துள்ள பரிந்துரைகளின் சுருக்கம் ஏப்பரல் 28 ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளிதழில் வெளிவந்துள்ளது. பழங்குடியினரின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவது, குறிப்பாக அவர்கள் குடியிருக்கும் இடமே அவர்களுக்குச் சொந்தமில்லாத நிலை… இவற்றையெல்லாம் கவனத்தில் எடுத்துக் கொண்டு உரிய வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்படாமல் வெறும் சட்டம் - ஒழுங்குப் பிரச்சனையாகவே அணுகி நக்சல் பிரச்சனையைத் தீர்த்துவிட முடியாது என அக்குழு அறிவுறுத்தியுள்ளது. கருணாநிதியும் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சட்டக்கல்லூரி மோதல்: உண்மை அறியும் குழு அறிக்கை

சட்டக்கல்லூரி மோதல்: உண்மை அறியும் குழு அறிக்கை
(கல்வியாளர் மற்றும் மனிதஉரிமை அமைப்புகள் மேற்கொண்ட கூட்டு ஆய்வு)
தொடர்புக்கு: 3/5, முதல் குறுக்குத் தெரு, சாஸ்திரிநகர், அடையாறு, சென்னை -600 020.செல்: 94441 20582, 94442 14175, 94434 39869
20, நவம்பர் 2008
சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சென்ற 12-ம் தேதி நடைபெற்ற சம்பவங்கள் தமிழக அளவில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. சாதி அடிப்படையில் இம்மோதல் நடைபெற்றுள்ளமை சமூக ஆர்வலர்களின் கூடுதல் கவனத்தைக் கோருகிறது. காட்சி ஊடகங்களில் திருப்பித் திருப்பிக் காட்டப்பட்ட வன்முறைச் சம்பவங்களின் அடிப்படையில் இங்கு ஏற்பட்டுள்ள புரிதல் ஒரு குறிப்பிட்ட சாதி மாணவர்கள், பிறசாதி மாணவர்களை கொடுமையாகத் தாக்கினார்கள் என்கிற அளவிலேயே உள்ளது. மேலோட்டமாகப் பார்க்கும்போது இதுவே முழு உண்மை போலத் தோன்றிய போதும் இது பகுதி உண்மையே. பிரச்சினை மேலும் ஆழமான வேர்களைக் கொண்டுள்ளது. சட்டக் கல்லூரிக்குள் நிலவுகிற சாதி உணர்வுகள், சாதி அமைப்பு ஆகிய பின்னணிகளை அறியாமல் இந்தப் பிரச்சினையை முழுமையாகப் புரிந்து கொள்ள இயலாது.
இது தொடர்பாக எங்களின் கவனத்தை சட்டக் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஈர்த்தனர். பிரச்சினை குறித்த முழு உண்மைகளையும் அறிய கல்வியாளர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகளைச் சேர்ந்தோரடங்கிய உண்மை அறியும் குழு ஒன்று உருவாக்கப்பட்டது. இதில் பங்குபெற்றோர்:
அ.மார்க்ஸ், கு.பழனிசாமி, வழக்குரைஞர்கள் ரஜினி, தய்.கந்தசாமி, (மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம்) வழக்குரைகள் கே.கேசவன், டி,சுஜாதா (குடியுரிமைப் பாதுகாப்பு நடுவம்), வழக்குரைஞர் மனோகரன் (மக்கள் வழக்குரைஞர் சங்கம், இந்தியா), கல்வியாளர்கள் டாக்டர் ப.சிவக்குமார் (முன்னாள் முதல்வர் எல்.என்.அரசு கலைக்கல்லூரி, குடியாத்தம்) டாக்டர் கே.சந்தோஷம் (முன்னாள் இயற்பியல் பேராசிரியர், மாநிலக் கல்லூரி,சென்னை), பேரா.லெனின் (லயோலா கல்லூரி, சென்னை), சி.ஜெரோம் சாம்ராஜ் (அயோத்திதாசர் ஆய்வுப் பேரவை, எம்.ஐ.டி.எஸ், சென்னை) ஆர்.ரேவதி (பெண்கள் சந்திப்பு, சென்னை) வழக்குரைஞர் இராகவன் ஆகியோர்.
இக்குழு நவ.18,19 தேதிகளில் சென்னை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிற மாணவர்களான தேவகோட்டை கருப்பையாவின் மகன் பாரதிகண்ணன் (நான்காம் ஆண்டு மாணவர்), சங்கரன்கோயில் மாரியப்பத்தேவர் மகன் அய்யாதுரை (இரண்டாம் ஆண்டு), திருவண்ணாமலை காமராஜ் மகன் ஆறுமுகம் (மூன்றாம்ஆண்டு), இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிற பட்டுக்கோட்டை குப்புசாமி மகன் சித்திரைச் செல்வன் (நான்காம் ஆண்டு) ஆகியோரையும் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரேம்குமார், இளையராஜா, அசோக், கோகுல்ராஜ், கனகராஜ், கோபால கிருஷ்ணன், சிவ. கதிரவன், பி.கோவிந்தன், வி.கோவிந்தன் முதலான தலித் மாணவர்களையும், சட்டக் கல்லூரிக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள முதல்வர் பேரா.முஹம்மது இக்பால் அவர்களையும், நிகழ்ச்சியை நேரடியாகப் பார்த்த கல்லூரிப் பேராசிரியர்களையும், நிகழ்ச்சியின்போது அப்பகுதியில் இருக்க நேர்ந்த விஞ்ஞானி கோபால், வழக்குரைஞர் ரஜினிகாந்த் ஆகியோரையும் சந்தித்தது.சென்னை பூக்கடை காவல் நிலையம் உதவி ஆணையர் பாலசந்திரனையும் சந்தித்துப் பேசியது. எஸ்பிளனேட் காவல்நிலைய ஆய்வாளர் ஜெயக்கொடியிடமும் தொலைபேசியில் பேசினோம். பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோரையும் சந்தித்தோம்.
பின்னணி:
சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் மாணவர்களிடையே மோதல்கள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. நேரடியான சாதி அடிப்படை மோதல்கள் தவிர விடுதி மாணவர்களுக்கிடையே மோதல்,விடுதி மாணவர்களுக்கும் விடுதியில் இல்லாதவர்களுக்கும் மோதல் என இவை நடந்துள்ளன. விடுதியிலுள்ள பெரும்பாலான மாணவர்கள் (149 பேர்) தலித்கள். பிற்படுத்தப்பட்டோர் வெறும் 7 பேர்தான். இந்த எல்லா மோதல்களிலுமே சாதி ஒரு அடிப்படையாக உள்ளது.
எடுத்துக்காட்டாக விடுதி மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கும் மோதல் என்பதைக் கூட ஒரு சாதி மோதலாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலாக சட்டக் கல்லூரிக்குள் சாதி அமைப்பு ஒன்று முளைத்தது. இதுவரை பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பான மாணவர் அமைப்புகள்தான் அங்கு இருந்தனவே ஒழிய சாதி அமைப்புகள் செயல்பட்டதில்லை. ‘முக்குலத்தோர் மாணவர் சங்கம்’ என்கிற இந்த அமைப்பை வெளியே உள்ள தேவர் பேரவை முதலான அமைப்புகள் முன்னின்று உருவாக்கியுள்ளன.
இந்த அமைப்பு ஆண்டுதோறும் அக்.30 அன்று முத்துராமலிங்கத்தேவரின் பிறந்தநாளில் ‘தேவர் ஜெயந்தி’ கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. இதை ஒட்டி அச்சிடும் சுவரொட்டிகள், துண்டறிக்கைகள் ஆகியவற்றில் சாதி உணர்வூட்டும் வாசகங்கள் தவிர, கல்லூரியின் பெயரை அச்சிடும்போது ‘டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி’என்னும் பெயரிலுள்ள ‘டாக்டர் அம்பேத்கர்’ என்னும் சொல்லை நீக்கி வெறும் ‘சென்னை சட்டக் கல்லூரி’என்றே அச்சிட்டு வந்துள்ளனர், கல்லூரி நிர்வாகமும் இதைக் கண்டுக்கொண்டதில்லை. இது அங்கு பயிலும் தலித் மாணவர்கள் மத்தியில் வருத்தத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கல்லூரிக்குள் நடைபெறும்எந்த நிகழ்விலும் உள்ளே உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பது வழக்கம். தேவர் ஜெயந்தி விழாவின்போது கல்லூரிக்குள் ஊர்வலமாக வரும்போதும் அம்பேத்கர் சிலையை வேண்டுமென்றே புறக்கணிப்பதும் நிகழ்ந்து வந்துள்ளது.
இதற்கிடையில் சென்ற கல்வி ஆண்டு தொடக்கத்தில் சீனியர் மாணவர்கள் புதிதாகச் சேர்ந்தவர்களை ‘ராகிங்’ செய்துள்ளனர். தீவிரமாகப் புதிய மாணவர்களைக் கேலி செய்வது என்கிற வகையின்றி சும்மா விசாரித்துக் ‘கலாய்ப்பது’ என்கிற அளவில் அது நிகழ்ந்துள்ளது. அப்போது விஜய் பிரதீப் என்கிற மாணவர் ‘‘என்னுடைய பேக்ரவுண்ட் தெரியாமல் விளையாடதீர்கள். மேலவளவு முருகேசன் கொலை வழக்கில் முதுல் ‘அக்யூஸ்ட்’ ராமர் என்னுடைய சித்தப்பா’’ என மிரட்டியுள்ளார். இதை ஒட்டி இருதரப்பும் ஆத்திரமடைந்துள்ளனர். விஜய் பிரதீப் சாதிரீதியாக மாணவர்களை திரட்டுவதற்கு முக்கியத்துவம் அளித்ததோடு, 12-ந் தேதி நிகழ்விலும் முக்கிய பின்னணியாக இருந்தார் என்பதை சம்பவத்தின்போது நேரடியாகப் பார்த்த பேராசிரியர்கள் உள்ளிட்ட சிலர் குறிப்பிட்டனர்.
இந்த ஆண்டும் அக்டோபர் இறுதியில் தேவர் ஜெயந்தி தொடர்பான சுவரொட்டிகள் அடிக்கப்பட்டன. டாக்டர் அம்பேத்கர் பெயர் நீக்கப்பட்ட சுவரொட்டிகளால் ஆத்திரமுற்ற தலித்மாணவர்கள் சிலர் அவற்றில் ஒன்றிரண்டைக் கிழித்ததாக முக்குலத்தேர் பேரவை மாணவர்கள் சொல்கின்றனர். சுவரொட்டிகளை நாங்கள் கிழிக்கவில்லை, போய் அவர்களிடம் கேட்க மட்டுமே செய்தோம் என தலித்மாணவர்கள் கூறுகின்றனர். எப்படியோ அன்று இருதரப்பினருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளது.
இதை ஒட்டி தலித் மாணவர்களை ‘‘தேர்வு எழுத வந்தால் தாக்குவோம், காலை ஒடிப்போம்’’ என்று மற்ற மாணவர்கள் மிரட்டியுள்ளனர். இதில் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். தலித் மாணவர்கள் என்பது பெரும்பாலும் விடுதியிலுள்ள தலித் மாணவர்களையே குறிக்கும். ஒன்றாக ஒரே இடத்தில் அவர்கள் தங்கியுள்ளதால் இந்தப் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பது, பேசுவது என்கிற வகையில் அவர்கள் சேர்ந்து செயல்படுவர். எனவே அவர்களே சாதி மோதல்களில் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.
தாக்கப்பட்டு இன்று மருத்துவமனையில் உள்ளவரும் தலித் மாணவர்களின் பிரச்சினையை முன்னெடுத்து செயல்படக் கூடியவருமான சித்திரைச் செல்வனுக்கும் இன்று தாக்கப்பட்டு மருத்துவமனையிலுள்ள பாரதி கண்ணன், ஆறுமுகம் ஆகியோருக்கும் முன்பகை இருந்துள்ளது. இரண்டாண்டுகளுக்கு முன் தன்னை பாரதி கண்ணனும் ஆறுமுகமும் தாக்கியதாக சித்திரைச் செல்வன் அளித்த புகாரின்அடிப்படையில் அவர்கள் இருவர் மீதும் பி.சி.ஆர். சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பாரதி கண்ணன் முன் ஜாமீன் பெற்றுள்ளார். தன் மீது வழக்குள்ளதை ஆறுமுகம் எங்களிடம் ஒத்துக் கொண்டார். தாங்கள் அவரை தாக்கியதையும் அவர் ஏற்றுக் கொண்டார். இந்த ஆண்டில் சுமார் 11 வழக்குகள் சட்டக் கல்லூரி தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் 3 வழக்குகளில் பாரதி கண்ணன் உள்ளார் எனவும் காவல்துறை ஆய்வாளர் ஜெயக்கொடி எங்களிடம் குறிப்பிட்டார்.
நவ.5 முதல் தேர்வுகள் தொடங்கியபோது அச்சத்தில் சில விடுதி(தலித்)மாணவர்கள் தேர்வுக்கு வரவில்லை. இந்த மிரட்டலையும் மீறி வந்த மாணவர்களை இன்று அடிபட்டு மருத்துவமனையில் உள்ள பாரதி கண்ணன்,ஆறுமுகம் முதலானவர்கள் மிரட்டியுள்ளனர். சென்ற நவ.7 அன்று இவ்வாறு மேகநாதன், சிவராஜ், ராஜா, ஏழுமலை என்கிற நான்கு தலித் மாணவர்கள் கல்லூரி அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் தாக்கப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலில் பாரதிகண்ணன், ஆறுமுகம் தவிர அய்யாத்துரை, விஜய் பிரதீப், திருலோகேஸ்வரன், சுகுமாரன்ஆகியோரும் பங்குபெற்றுள்ளதாக அறிகிறோம்.
இது குறித்து விடுதியில் தலித் மாணவர்கள் கூடிப் பேசியுள்ளனர். தேர்வு நேரத்தில் பிரச்சினை வேண்டாம் என முடிவு செய்து போலீசில் புகார் கொடுப்பதை தவிர்த்துள்ளனர்.தேவையானால் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது எனவும் முடிவு செய்துள்ளனர்.ஒவ்வொரு நாளும் பாரதி கண்ணன் கத்தியுடன் திரிந்ததை ஆசிரியர்களும் உறுதிபடுத்துகின்றனர். பாரதிகண்ணன், ஆறுமுகம் ஆகியோருக்கு இப்போது தேர்வு ஏதும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வு எழுதவிடாமல் சிலர் விரட்டப்பட்ட போது அவ்வாறு விரட்டிய மாணவர்களை ஆசிரியர்கள் சென்று கலைத்து அனுப்பிய சம்பவங்களும் நடந்துள்ளன. இந்நிலையில்தான் நவ.12ம் தேதி நிகழ்வுகள் அரங்கேறின.
நவ.12 வன்முறை:
இன்று காலை தேர்வு எழுத வந்த சில தலித் மாணவர்களை பாரதி கண்ணன் குழுவினர் மிரட்டியபோது பேராசிரியர்களும் பொறுப்பு முதல்வர் ஸ்ரீதேவும் சென்று மிரட்டியவர்களை விரட்டியுள்ளனர். இதற்கிடையில் தலித்மாணவர்கள் மிரட்டப்படுகிற செய்தி அறிந்த விடுதி மாணவர்கள் சுமார் 40-க்கும் மேற்பட்டோர் கையில் உருட்டுக்கட்டைகள் சகிதம் புரசைவாக்கத்திலிருந்து பஸ்சில் வந்து இறங்கியுள்ளனர். அவர்கள் கையில் உருட்டுக் கட்டைகள் தவிர வேறு ஏதும் அபாயகரமான ஆயுதங்கள் இருக்கவில்லை என்பதை ஒரு பேராசிரியர் உறுதிப்படுத்தினார்.
இதற்கிடையில் கல்லூரி நிர்வாகம் வாயிற் கதவுகளைச் சாத்தியுள்ளது. வந்த மாணவர்கள் ‘கேட்’டைத் தள்ளித் திறந்து உள்ளே திபுதிபுவென நுழைந்துள்ளனர். பேராசிரியர்களும் முதல்வரும் வந்து கேட்டபோது தங்களுக்கு யாரையும் தாக்கும் நோக்கம் இல்லை எனவும் தேர்வு எழுத வந்துள்ள மாணவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதே நோக்கம் எனவும் கூறி வெளியேற மறுத்து, உள்ளே அமர்ந்துள்ளனர். இதனால் பதட்டமடைந்த கல்லூரி நிர்வாகம் காவல்துறையின் உதவியை நாடியுள்ளது. கல்லூரி முதல்வர் எழுத்து மூலம் அருகிலுள்ள ‘எஸ்பிளனேடு’ காவல் நிலையத்திற்கு புகார் அனுப்பியுள்ளார். பதட்டம் அதிகரித்தபோது நேரிலும் சென்று புகார் செய்துள்ளார்.
தற்போது பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள காவல்துறை உதவிஆணையர் நாராயணமூர்த்தி கல்லூரி முதல்வரிடம் ‘பகுஜன் சமாஜ் கட்சி’ தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் மற்றும் வழக்குரைஞர் சங்க தலைவர் பால் கனகராஜ் ஆகியோரின் தொலைபேசி எண்களைத் தந்து அவர்கள் மூலம் மாணவர்களிடம் பேசி வெளியேறச் செய்யுமாறு ஆலோசனை கூறியுள்ளார். முதல்வரும் அவ்வாறே செய்துள்ளார்.கல்லூரி முதல்வர் கேட்டுக் கொண்டதற்கிணங்க வழக்குரைஞர் ரஜினிகாந்த்தும் த லித் மாணவர்களிடம் பேசியுள்ளார்.அவருடன் விஞ்ஞானி கோபாலும் இருந்துள்ளார். பாதுகாப்பிற்காகத்தான் தாங்கள் இருப்பதாக அவர்களிடமும் மாணவர்கள் சொல்லியுள்ளனர்.
சட்டக் கல்லூரியையும் நீதிமன்றத்தையும் பிரிக்கும் சுவர் வழியே திரும்பி வரும்போது பாரதிகண்ணன் அச்சுவரிலுள்ள சிறிய கேட்டுக்கு அருகிலுள்ள கல்லில் கத்தியைத் தீட்டிக்கொண்டிருந்ததை கோபால் நேரில் கண்டுள்ளார். இதற்கிடையில் தேர்வு எழுதி முடித்துவிட்டு அய்யாத்துரை வந்துள்ளார். ஏற்கனவே தலித் மாணவர்கள் தேர்வு எழுதுவதைத் தடுத்து அடித்தவர் அய்யாத்துரை என்பதால் அவரை தலித்மாணவர்கள் தாக்கியுள்ளனர். எனினும் அவர் அன்று ஆயுதம் எதுவும் கொண்டு வரவில்லை. தாக்கும் நோக்கத்துடன் இல்லை என்பதால் அடித்தவர்களே அவரை ஆசுவாசப்படுத்தி தண்ணீர் கொடுத்து அனுப்பியுள்ளனர். இதைத் தேர்வு எழுத வந்த தன் மகளுக்குப் பாதுகாப்பாக வந்த வழக்குரைஞர் பிரகாஷ் நேரில் பார்த்துள்ளார். ஆசிரியர்களும் உறுதிப்படுத்துகின்றனர்.
இந்நிலையில்தான் பாரதிகண்ணனும் ஆறுமுகமும் ஓடி வந்துள்ளனர். உருவிய கத்தியுடன் பாரதிகண்ணன் ஓடி வந்தது ஊடகங்களில் பதிவாகியுள்ளது. நாங்கள் சென்றபோது பாரதிகண்ணன் மயக்க நிலையில் இருந்ததாகச் சொல்லப்பட்டது. அவரது பெற்றோர்களே எங்களிடம் பேசினர். எங்களிடம் தெளிவாக விவரங்களைச் சொன்ன ஆறுமுகம் தங்கள் இருவரிடமும் அன்று கத்திகள் இருந்ததை ஒத்துக் கொண்டார். அய்யாத்துரை அடிபடுவதாக அறிந்து அவரைக் காப்பாற்றவே ஓடிவந்ததாகச் சொன்னார். கடும் சொற்களால் தலித் மாணவர்களைத் திட்டிக்கொண்டே கையில் கத்தியுடன் பாரதி கண்ணன் ஓடி வந்ததைக் கண்டு தலித் மாணவர்கள் பின்வாங்கியுள்ளனர்.
சித்திரைச் செல்வன் மீது பாரதிகண்ணன், ஆறுமுகம் ஆகியோருக்கு இருந்த முன் பகை குறித்து முன்பே கண்டோம். கத்தியுடன் வந்த இருவரும் சித்திரைச் செல்வனைத் தாக்கியுள்ளனர். தலையிலும் உட லிலும் பெருங்காயத்துடன் சித்திரைச் செல்வன் கீழே விழுந்ததைக் கண்ட தலித் மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் இருவரையும் தாக்கியுள்ளனர். கத்தி நழுவி கீழே விழுந்தவுடன் அவர்கள் இருவரும் உருட்டுக் கட்டைகளால் கடுமையாகத் தாக்கப்பட்டதை ஊடகங்களில் எல்லோரும் பார்த்தோம். காவல்துறையினர் அருகில் இருந்தும் தாக்குதலைத் தடுப்பதற்கோ, கூட்டத்தைக் கலைப்பதற்கோ முயற்சிக்காததையும் கண்டோம்.
இன்றைய நிலை:
நவ.12 நிகழ்ச்சியை ஒட்டி மூன்று வழக்குகள் பதிவாகியுள்ளன.
1. குற்ற எண்:1371/2008 என்கிற வழக்கில் பெயர் குறிப்பிடப்பட்ட 8 தலித் மாணவர்கள் ‘மற்றும் பலர்’ குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். இதுவரை 23 தலித் மாணவர்கள் இது தொடர்பாகக் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையிலும், சைதாப்பேட்டை கிளைச் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். மருத்துமனையிலுள்ள சித்திரைச்செல்வனும் கைது செய்யப்பட்டுள்ளார். இ.பி.கோ.147, 148, 307, 506(2) முதலான (கொலை முயற்சி உள்ளிட்ட)பிரிவுகளில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
2. குற்ற எண்:1372/2008 என்கிற வழக்கு சித்திரைச் செல்வன் அளித்த புகாரின் பேரில் பாரதி கண்ணன்,ஆறுமுகம் ஆகிய இருவர் மீது மட்டும் பெயர் குறிப்பிடப்பட்டு போடப்பட்டுள்ளது. பெயர் குறிப்பிடாமல் யாரையும்(‘மற்றவர்கள்’) சேர்க்கவில்லை. 506(2) அதாவது கொலை மிரட்டல் என்கிற பிரிவின் கீழ் மட்டுமே குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. யாரும் கைது செய்யப்படவில்லை.
3. குற்ற எண்.1373/2008: முதல்வர் அளித்த புகார் இது. முதல்வர் அளித்த புகார் ஒன்றின் அடிப்படையில் 14 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளில் சிலரை இடம் மாற்றியும், சிலரை தற்காகஇடை நீக்கம் செய்தும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பொறுப்பு முதல்வர் இடை நீக்கம் செய்யப்பட்டு நிரந்தர முதல்வர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். நீதிபதி (ஓய்வு) சண்முகம் தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றையும் அரசு நியமித்துள்ளது.
எமது பார்வைகள்:
1. கல்லூரி வளாகத்திற்குள் சாதி அமைப்புகள், வன்முறை ஆகியன மிகுந்த கவலைக்குரியவையாக உள்ளன.அன்றயை வன்முறை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. எனினும் நவ.12 சம்பவங்களை அன்றைய நிகழ்ச்சியை மட்டும் வைத்து மதிப்பிடக்கூடாது. தொடர்ச்சியாக அங்கு நடைபெற்று வரும் சம்பவங்களின் பின்னணியிலேயே வைத்து அது பார்க்கப்பட வேண்டும்.
2. கல்லூரிக்குள் சாதி அமைப்புகள் உருவாகிச் செயற்படுவதை அனுமதிக்கக்கூடாது. அதிலும் கல்லூரியின் பெயரில் டாக்டர் அம்பேத்கர் என்னும் சொல்லை நீக்கி அச்சிடுவது, கல்லூரி அருகில் அவற்றை ஒட்டுவது முதலானவற்றை கல்லூரி நிர்வாகம் தடுத்திருக்க வேண்டும். பிரச்சினைகள் வரும்போது உடனடியாக கவுன் லிசிங் செய்வது, தேவையானால் பெற்றோர் - ஆசிரியர்கள் - காவல்துறையினர் கூட்டம் கூட்டிப் பேசுவது, முடிவுகளுக்கு கட்டுப்படாதபோது நடவடிக்கை எடுப்பது என்கிற வடிவில் பிரச்சினைகளை அணுகியிருக்க வேண்டும்.
3. காவல்துறை அன்று தலையிடாததற்குச் சொல்லும் காரணம் தம்மை நிர்வாகம் உள்ளே அனுமதிக்கவில்லை என்பது. ஆனால் கல்லூரி நிர்வாகமோ எழுத்து மூலம் புகாரளித்துள்ளதாகச் சொல்லுகிறது. இது குறித்து நாங்கள் காவல்துறை ஆய்வாளர் ஜெயக்கொடியிடம் பேசியபோது தனக்கு அது தெரியாது என்றார். எனினும் அடிப்பட்ட மாணவர்களை அவரே சென்று தூக்கி வந்ததாகவும் குறிப்பிட்டார். காவல்துறையின் இந்தப்போக்கு கவலைக்குரியது. கண்முன் ஒரு Cognizable Offence நடக்கும் பொழுது அதை தடுக்க முனைவதற்கு எந்த ஆணையும்,அனுமதியும் தேவையில்லை.
4. அரசு கல்லூரிகள் அனைத்தும், குறிப்பாகச் சட்டக் கல்லூரிகள் என்பன தமிழக கிராமப் புறங்களின் நீட்சிகளாகவே உள்ளன. கிராமங்களிலுள்ள அத்தனை சாதி உணர்வுகளும் வளாகத்திற்குள் பிரதிபக்கின்றன. சென்னை சட்டக் கல்லூரி மட்டுமின்றி எல்லா அரசு கல்லூரிகளிலும் இதுவே நிலை. கோவை சட்டக் கல்லூரியிலும் இன்று இத்தகைய பிரச்சினை உள்ளது. சட்டக் கல்லூரியில் இப்பிரச்சினை கூடுதலாக இருப்பதற்கு வழக்குரைஞர் தொழிலின் தன்மை ஒரு காரணமாக உள்ளது. குறிப்பாக கிராமப்புறங்களில் சாதி சார்ந்துள்ளதாகவே இத்தொழில் உள்ளது. வழக்குரைஞராகப் பதிவு செய்வதே ஒரு சாதி சார்ந்த நிகழ்வாகவும் இன்று உள்ளது. அரசியல் கட்சிகள் இவற்றைக் கண்டிப்பதில்லை. ஒரு மாணவர் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியிலும், அதே நேரத்தில் சாதி சங்கத்திலும் உள்ளதை காண முடிகிறது.
5. அரசு கல்லூரிகள் மற்றும் சட்டக் கல்லூரிகள் அரசின் புறக்கணிப்பிற்குள்ளாகியுள்ளன. ஆசிரியர் கா லியிடங்கள் உடனடியாகப் பூர்த்தி செய்யப்படுவதில்லை. இதனால் வகுப்புகள் பல ரத்தாகின்றன. வகுப்புகள் ரத்தாகும் போது மாணவர்கள் வளாகத்திற்குள் கூடி நிற்பது பூசலுக்கு ஒரு காரணமாகிறது. தமிழகம் முழுவதுமுள்ள சட்டக் கல்லூரிகளில் இன்று நிரந்தர ஆசிரியப் பதவிகளில் மட்டும் சுமார் 55 இடங்கள் காலியாக உள்ளதாக அறிகிறோம்.ஆனால் அதே நேரத்தில் Elite Schools என்கிற பெயரில் அரசால் நடத்தப்படுகிற நிறுவனங்களில் வகுப்புகள் ஒழுங்காக நடத்தப்படுவதை யாரும் அறிவர். சென்னை சட்டக் கல்லூரியில் இச்சம்பவத்தின் போது நிரந்தர முதல்வர் கூட இல்லை. பொறுப்பு முதல்வரின் தலைமையில் கல்லூரி நிர்வாகம் அமைவது உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வழிவகுக்காது.
6. சில ஆண்டுகட்கு முன் விடுதியில் நடைபெற்ற மோதலை ஒட்டி அப்போது அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் சில பரிந்துரைகளை வழங்கியது. நிரந்தர முழு நேர விடுதிக் கண்காணிப்பாளர் நியமிக்கப்படவேண்டும் என்கிற பரிந்துரை உள்பட எதுவும் நிறைவேற்றப்பட்டதாக தெரியவில்லை.
7. மாணவர்களைத் தேர்வு எழுத விடாமல் தடுப்பது அம்மாணவர்களின் வாழ்வையும், எதிர்காலத்தையும் பாதிக்கும் ஒரு விஷயம். இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் கவலைப்பட்டிருக்க வேண்டும். எத்தனை மாணவர்கள் இவ்வாறு மிரட்டலுக்குப் பயந்து தேர்வு எழுதாமற் போனார்கள் என்பது குறித்து உறுதியான தகவல்களை பேராசிரியர்களாலும் நிர்வாகத்தாலும் கூற இயலவில்லை.
8. தலித் மாணவர்கள், தேவர் சாதி மாணவர்களைத் தாக்கியதாகச் சுருக்கிப் பார்க்கும் நிலையையே அரசும் காவல்துறையும் மேற்கொண்டுள்ளன. கண்ணில் பார்த்த தலித் மாணவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்துடன் எந்த தொடர்பும் இல்லாத ‘திருப்பதி சட்டக் கல்லூரி’ மாணவரான கோகுல்ராஜ் என்பவர் அவ்வழியே செல்லும்போது கைது செய்யப்பட்டுள்ளார். பிடிப்பட்ட இவரை விட்டுவிட முடிவெடுத்த காவல்துறை அவர் தலித் என்றவுடன் கைது செய்துள்ளனர். இளமுகில், கனகராஜ், கோபாலகிருஷ்ணன், திலீபன் முதலான மாணவர்களும் கூட இக்கல்லூரி மாணவர்களாக இருந்தபோதும் சம்பவத்துடன் தொடர்பில்லாத மாணவர்கள். தலித் என்பதாலேயே கைது செய்யப்பட்டுள்ளனர். தேடப்படும் மாணவர்களின் வீட்டாரும் தொல்லைக்குள்ளாக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை சில அதிகாரிகள் இழிவாகப் பேசியுள்ளனர்.
பரிந்துரைகள்:
1. கல்லூரி வளாகத்திற்குள் சாதி அமைப்புகள் செயல்படுவது அதன் சார்பில் சுவரொட்டிகள், துண்டறிக்கைகள் வெளியிடுவது தடைசெய்யப்பட வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட வடிவிலேயே கல்லூரிப் பெயர்கள் எதிலும் அச்சிடப்படவேண்டும். ‘டாக்டர் அம்பேத்கர்’ உள்ளிட்ட எந்தச் சொல்லையும் நீக்கி சுருக்குவது குற்றமாக்கப்பட வேண்டும்.
2. இப்பிரச்சினையை ஒட்டி சட்டக் கல்லூரிகளின் பெயரில் அம்பேத்கர் பெயர் நீக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை எழுப்பப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அரசு இதை ஏற்கக்கூடாது.
3. கோவை முதலான சட்டக் கல்லூரியிலும் இதே பிரச்சினை உள்ளது. அங்கும் தேர்வு எழுதிய மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். அரசும் நிர்வாகமும் முன் நடவடிக்கை எடுத்து வன்முறையைத் தடுக்க வேண்டும்.
4. அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் ஒரு சார்புடையவையாக உள்ளன. சித்திரைச் செல்வனை கத்தியால் குத்தி தாக்கி, அவர் தலையில் அடிபட்டு, காது கிழிந்துள்ள போதும் அவரைத் தாக்கியோர் மீது 307 பிரிவு போடப்படவில்லை. கைது செய்யப்படவுமில்லை. பின்னணியில் இருந்த சாதிப் பேரவையைச் சார்ந்த மாணவர்கள் மீதும் குற்றம் சுமத்தப்படவில்லை. இவை கண்டிக்கப்படத்தக்கவை. அரசு உடனடியாக இந்தத் தவறுகளைச் சரிசெய்ய வேண்டும்.
5. மாணவர்களைத் தேடுகிறோம் என்கிற பெயரில் அவர்களின் வீட்டார்களைத் தொல்லைப்படுத்துதல் தவிர்க்கப்படவேண்டும். கைது செய்யப்பட்ட அப்பாவி மாணவர்கள் குறிப்பாக திருப்பதி கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் விடுதலை செய்யப்பட வேண்டும்.
6. கல்லூரி முதல்வர் எழுத்து மூலம் புகார் அளித்தும் ஏன் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பது விசாரிக்கப்பட வேண்டும். பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங்கின் தொலைபேசி எண்ணைக் கொடுத்து அவருடன் பேசி சமாதானம் செய்யச் சொன்ன அதே காவல்துறை இன்று அவரைக் கைது செய்ய முயல்வதாக அறிகிறோம். பிற சாதிச் சங்கங்களின் வற்புறுத்தன்பேரில் இது செய்யப்பட்டால் அது தவறு. இதுகுறித்தும் விசாரிக்கப்பட வேண்டும்.
7. கல்லூரி ஆசிரியப் பணிக் கா லியிடங்கள் உடனடியாகப் பூர்த்தி செய்யப்பட வேண்டும். நின்றுபோன தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். மிரட்டல் காரணமாகத் தேர்வு எழுதாமல் போனவர்கள் குறித்து விசாரணை நடத்தி அவர்களுக்குத் தனித் தேர்வு நடத்த வேண்டும். நிரந்தர கவுன்சிலிங் அமைப்பு, அமைதிக்குழு ஆகியன கல்லூரியில் உருவாக்கப்பட வேண்டும். விடுதிக்கு முழு ‘வார்டன்’ நியமிக்கப்பட வேண்டும்.
8. மருத்துவ மாணவர்களுக்கு House Surgeon பயிற்சி உள்ளது போல சட்டம் பயிலும் மாணவர்களுக்கும் இறுதிஆண்டுகளில் (3 மற்றும் 5ம் ஆண்டு) பல்வேறு அரசு நிறுவனங்களின் சட்டத்துறைகள் மற்றும் Legal Cell Authority, High Court Registry ஆகியவற்றில் ஊதியத்துடன் கூடிய பயிற்சி அளிக்கப்படுதல் வேண்டும்.
9. சைதாப்பேட்டை கிளைச் சிறையிலுள்ள மாணவர்கள் உடனடியாக புழல் சிறைக்கு மாற்றப்பட வேண்டும்சட்டக்கல்லூரி மோதல்: உண்மை அறியும் குழு அறிக்கை
(கல்வியாளர் மற்றும் மனிதஉரிமை அமைப்புகள் மேற்கொண்ட கூட்டு ஆய்வு)
தொடர்புக்கு: 3/5, முதல் குறுக்குத் தெரு, சாஸ்திரிநகர், அடையாறு, சென்னை -600 020.செல்: 94441 20582, 94442 14175, 94434 39869
20, நவம்பர் 2008
சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சென்ற 12-ம் தேதி நடைபெற்ற சம்பவங்கள் தமிழக அளவில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. சாதி அடிப்படையில் இம்மோதல் நடைபெற்றுள்ளமை சமூக ஆர்வலர்களின் கூடுதல் கவனத்தைக் கோருகிறது. காட்சி ஊடகங்களில் திருப்பித் திருப்பிக் காட்டப்பட்ட வன்முறைச் சம்பவங்களின் அடிப்படையில் இங்கு ஏற்பட்டுள்ள புரிதல் ஒரு குறிப்பிட்ட சாதி மாணவர்கள், பிறசாதி மாணவர்களை கொடுமையாகத் தாக்கினார்கள் என்கிற அளவிலேயே உள்ளது. மேலோட்டமாகப் பார்க்கும்போது இதுவே முழு உண்மை போலத் தோன்றிய போதும் இது பகுதி உண்மையே. பிரச்சினை மேலும் ஆழமான வேர்களைக் கொண்டுள்ளது. சட்டக் கல்லூரிக்குள் நிலவுகிற சாதி உணர்வுகள், சாதி அமைப்பு ஆகிய பின்னணிகளை அறியாமல் இந்தப் பிரச்சினையை முழுமையாகப் புரிந்து கொள்ள இயலாது.
இது தொடர்பாக எங்களின் கவனத்தை சட்டக் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஈர்த்தனர். பிரச்சினை குறித்த முழு உண்மைகளையும் அறிய கல்வியாளர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகளைச் சேர்ந்தோரடங்கிய உண்மை அறியும் குழு ஒன்று உருவாக்கப்பட்டது. இதில் பங்குபெற்றோர்:
அ.மார்க்ஸ், கு.பழனிசாமி, வழக்குரைஞர்கள் ரஜினி, தய்.கந்தசாமி, (மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம்) வழக்குரைகள் கே.கேசவன், டி,சுஜாதா (குடியுரிமைப் பாதுகாப்பு நடுவம்), வழக்குரைஞர் மனோகரன் (மக்கள் வழக்குரைஞர் சங்கம், இந்தியா), கல்வியாளர்கள் டாக்டர் ப.சிவக்குமார் (முன்னாள் முதல்வர் எல்.என்.அரசு கலைக்கல்லூரி, குடியாத்தம்) டாக்டர் கே.சந்தோஷம் (முன்னாள் இயற்பியல் பேராசிரியர், மாநிலக் கல்லூரி,சென்னை), பேரா.லெனின் (லயோலா கல்லூரி, சென்னை), சி.ஜெரோம் சாம்ராஜ் (அயோத்திதாசர் ஆய்வுப் பேரவை, எம்.ஐ.டி.எஸ், சென்னை) ஆர்.ரேவதி (பெண்கள் சந்திப்பு, சென்னை) வழக்குரைஞர் இராகவன் ஆகியோர்.
இக்குழு நவ.18,19 தேதிகளில் சென்னை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிற மாணவர்களான தேவகோட்டை கருப்பையாவின் மகன் பாரதிகண்ணன் (நான்காம் ஆண்டு மாணவர்), சங்கரன்கோயில் மாரியப்பத்தேவர் மகன் அய்யாதுரை (இரண்டாம் ஆண்டு), திருவண்ணாமலை காமராஜ் மகன் ஆறுமுகம் (மூன்றாம்ஆண்டு), இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிற பட்டுக்கோட்டை குப்புசாமி மகன் சித்திரைச் செல்வன் (நான்காம் ஆண்டு) ஆகியோரையும் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரேம்குமார், இளையராஜா, அசோக், கோகுல்ராஜ், கனகராஜ், கோபால கிருஷ்ணன், சிவ. கதிரவன், பி.கோவிந்தன், வி.கோவிந்தன் முதலான தலித் மாணவர்களையும், சட்டக் கல்லூரிக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள முதல்வர் பேரா.முஹம்மது இக்பால் அவர்களையும், நிகழ்ச்சியை நேரடியாகப் பார்த்த கல்லூரிப் பேராசிரியர்களையும், நிகழ்ச்சியின்போது அப்பகுதியில் இருக்க நேர்ந்த விஞ்ஞானி கோபால், வழக்குரைஞர் ரஜினிகாந்த் ஆகியோரையும் சந்தித்தது.சென்னை பூக்கடை காவல் நிலையம் உதவி ஆணையர் பாலசந்திரனையும் சந்தித்துப் பேசியது. எஸ்பிளனேட் காவல்நிலைய ஆய்வாளர் ஜெயக்கொடியிடமும் தொலைபேசியில் பேசினோம். பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோரையும் சந்தித்தோம்.
பின்னணி:
சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் மாணவர்களிடையே மோதல்கள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. நேரடியான சாதி அடிப்படை மோதல்கள் தவிர விடுதி மாணவர்களுக்கிடையே மோதல்,விடுதி மாணவர்களுக்கும் விடுதியில் இல்லாதவர்களுக்கும் மோதல் என இவை நடந்துள்ளன. விடுதியிலுள்ள பெரும்பாலான மாணவர்கள் (149 பேர்) தலித்கள். பிற்படுத்தப்பட்டோர் வெறும் 7 பேர்தான். இந்த எல்லா மோதல்களிலுமே சாதி ஒரு அடிப்படையாக உள்ளது.
எடுத்துக்காட்டாக விடுதி மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கும் மோதல் என்பதைக் கூட ஒரு சாதி மோதலாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலாக சட்டக் கல்லூரிக்குள் சாதி அமைப்பு ஒன்று முளைத்தது. இதுவரை பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பான மாணவர் அமைப்புகள்தான் அங்கு இருந்தனவே ஒழிய சாதி அமைப்புகள் செயல்பட்டதில்லை. ‘முக்குலத்தோர் மாணவர் சங்கம்’ என்கிற இந்த அமைப்பை வெளியே உள்ள தேவர் பேரவை முதலான அமைப்புகள் முன்னின்று உருவாக்கியுள்ளன.
இந்த அமைப்பு ஆண்டுதோறும் அக்.30 அன்று முத்துராமலிங்கத்தேவரின் பிறந்தநாளில் ‘தேவர் ஜெயந்தி’ கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. இதை ஒட்டி அச்சிடும் சுவரொட்டிகள், துண்டறிக்கைகள் ஆகியவற்றில் சாதி உணர்வூட்டும் வாசகங்கள் தவிர, கல்லூரியின் பெயரை அச்சிடும்போது ‘டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி’என்னும் பெயரிலுள்ள ‘டாக்டர் அம்பேத்கர்’ என்னும் சொல்லை நீக்கி வெறும் ‘சென்னை சட்டக் கல்லூரி’என்றே அச்சிட்டு வந்துள்ளனர், கல்லூரி நிர்வாகமும் இதைக் கண்டுக்கொண்டதில்லை. இது அங்கு பயிலும் தலித் மாணவர்கள் மத்தியில் வருத்தத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கல்லூரிக்குள் நடைபெறும்எந்த நிகழ்விலும் உள்ளே உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பது வழக்கம். தேவர் ஜெயந்தி விழாவின்போது கல்லூரிக்குள் ஊர்வலமாக வரும்போதும் அம்பேத்கர் சிலையை வேண்டுமென்றே புறக்கணிப்பதும் நிகழ்ந்து வந்துள்ளது.
இதற்கிடையில் சென்ற கல்வி ஆண்டு தொடக்கத்தில் சீனியர் மாணவர்கள் புதிதாகச் சேர்ந்தவர்களை ‘ராகிங்’ செய்துள்ளனர். தீவிரமாகப் புதிய மாணவர்களைக் கேலி செய்வது என்கிற வகையின்றி சும்மா விசாரித்துக் ‘கலாய்ப்பது’ என்கிற அளவில் அது நிகழ்ந்துள்ளது. அப்போது விஜய் பிரதீப் என்கிற மாணவர் ‘‘என்னுடைய பேக்ரவுண்ட் தெரியாமல் விளையாடதீர்கள். மேலவளவு முருகேசன் கொலை வழக்கில் முதுல் ‘அக்யூஸ்ட்’ ராமர் என்னுடைய சித்தப்பா’’ என மிரட்டியுள்ளார். இதை ஒட்டி இருதரப்பும் ஆத்திரமடைந்துள்ளனர். விஜய் பிரதீப் சாதிரீதியாக மாணவர்களை திரட்டுவதற்கு முக்கியத்துவம் அளித்ததோடு, 12-ந் தேதி நிகழ்விலும் முக்கிய பின்னணியாக இருந்தார் என்பதை சம்பவத்தின்போது நேரடியாகப் பார்த்த பேராசிரியர்கள் உள்ளிட்ட சிலர் குறிப்பிட்டனர்.
இந்த ஆண்டும் அக்டோபர் இறுதியில் தேவர் ஜெயந்தி தொடர்பான சுவரொட்டிகள் அடிக்கப்பட்டன. டாக்டர் அம்பேத்கர் பெயர் நீக்கப்பட்ட சுவரொட்டிகளால் ஆத்திரமுற்ற தலித்மாணவர்கள் சிலர் அவற்றில் ஒன்றிரண்டைக் கிழித்ததாக முக்குலத்தேர் பேரவை மாணவர்கள் சொல்கின்றனர். சுவரொட்டிகளை நாங்கள் கிழிக்கவில்லை, போய் அவர்களிடம் கேட்க மட்டுமே செய்தோம் என தலித்மாணவர்கள் கூறுகின்றனர். எப்படியோ அன்று இருதரப்பினருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளது.
இதை ஒட்டி தலித் மாணவர்களை ‘‘தேர்வு எழுத வந்தால் தாக்குவோம், காலை ஒடிப்போம்’’ என்று மற்ற மாணவர்கள் மிரட்டியுள்ளனர். இதில் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். தலித் மாணவர்கள் என்பது பெரும்பாலும் விடுதியிலுள்ள தலித் மாணவர்களையே குறிக்கும். ஒன்றாக ஒரே இடத்தில் அவர்கள் தங்கியுள்ளதால் இந்தப் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பது, பேசுவது என்கிற வகையில் அவர்கள் சேர்ந்து செயல்படுவர். எனவே அவர்களே சாதி மோதல்களில் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.
தாக்கப்பட்டு இன்று மருத்துவமனையில் உள்ளவரும் தலித் மாணவர்களின் பிரச்சினையை முன்னெடுத்து செயல்படக் கூடியவருமான சித்திரைச் செல்வனுக்கும் இன்று தாக்கப்பட்டு மருத்துவமனையிலுள்ள பாரதி கண்ணன், ஆறுமுகம் ஆகியோருக்கும் முன்பகை இருந்துள்ளது. இரண்டாண்டுகளுக்கு முன் தன்னை பாரதி கண்ணனும் ஆறுமுகமும் தாக்கியதாக சித்திரைச் செல்வன் அளித்த புகாரின்அடிப்படையில் அவர்கள் இருவர் மீதும் பி.சி.ஆர். சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பாரதி கண்ணன் முன் ஜாமீன் பெற்றுள்ளார். தன் மீது வழக்குள்ளதை ஆறுமுகம் எங்களிடம் ஒத்துக் கொண்டார். தாங்கள் அவரை தாக்கியதையும் அவர் ஏற்றுக் கொண்டார். இந்த ஆண்டில் சுமார் 11 வழக்குகள் சட்டக் கல்லூரி தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் 3 வழக்குகளில் பாரதி கண்ணன் உள்ளார் எனவும் காவல்துறை ஆய்வாளர் ஜெயக்கொடி எங்களிடம் குறிப்பிட்டார்.
நவ.5 முதல் தேர்வுகள் தொடங்கியபோது அச்சத்தில் சில விடுதி(தலித்)மாணவர்கள் தேர்வுக்கு வரவில்லை. இந்த மிரட்டலையும் மீறி வந்த மாணவர்களை இன்று அடிபட்டு மருத்துவமனையில் உள்ள பாரதி கண்ணன்,ஆறுமுகம் முதலானவர்கள் மிரட்டியுள்ளனர். சென்ற நவ.7 அன்று இவ்வாறு மேகநாதன், சிவராஜ், ராஜா, ஏழுமலை என்கிற நான்கு தலித் மாணவர்கள் கல்லூரி அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் தாக்கப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலில் பாரதிகண்ணன், ஆறுமுகம் தவிர அய்யாத்துரை, விஜய் பிரதீப், திருலோகேஸ்வரன், சுகுமாரன்ஆகியோரும் பங்குபெற்றுள்ளதாக அறிகிறோம்.
இது குறித்து விடுதியில் தலித் மாணவர்கள் கூடிப் பேசியுள்ளனர். தேர்வு நேரத்தில் பிரச்சினை வேண்டாம் என முடிவு செய்து போலீசில் புகார் கொடுப்பதை தவிர்த்துள்ளனர்.தேவையானால் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது எனவும் முடிவு செய்துள்ளனர்.ஒவ்வொரு நாளும் பாரதி கண்ணன் கத்தியுடன் திரிந்ததை ஆசிரியர்களும் உறுதிபடுத்துகின்றனர். பாரதிகண்ணன், ஆறுமுகம் ஆகியோருக்கு இப்போது தேர்வு ஏதும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வு எழுதவிடாமல் சிலர் விரட்டப்பட்ட போது அவ்வாறு விரட்டிய மாணவர்களை ஆசிரியர்கள் சென்று கலைத்து அனுப்பிய சம்பவங்களும் நடந்துள்ளன. இந்நிலையில்தான் நவ.12ம் தேதி நிகழ்வுகள் அரங்கேறின.
நவ.12 வன்முறை:
இன்று காலை தேர்வு எழுத வந்த சில தலித் மாணவர்களை பாரதி கண்ணன் குழுவினர் மிரட்டியபோது பேராசிரியர்களும் பொறுப்பு முதல்வர் ஸ்ரீதேவும் சென்று மிரட்டியவர்களை விரட்டியுள்ளனர். இதற்கிடையில் தலித்மாணவர்கள் மிரட்டப்படுகிற செய்தி அறிந்த விடுதி மாணவர்கள் சுமார் 40-க்கும் மேற்பட்டோர் கையில் உருட்டுக்கட்டைகள் சகிதம் புரசைவாக்கத்திலிருந்து பஸ்சில் வந்து இறங்கியுள்ளனர். அவர்கள் கையில் உருட்டுக் கட்டைகள் தவிர வேறு ஏதும் அபாயகரமான ஆயுதங்கள் இருக்கவில்லை என்பதை ஒரு பேராசிரியர் உறுதிப்படுத்தினார்.
இதற்கிடையில் கல்லூரி நிர்வாகம் வாயிற் கதவுகளைச் சாத்தியுள்ளது. வந்த மாணவர்கள் ‘கேட்’டைத் தள்ளித் திறந்து உள்ளே திபுதிபுவென நுழைந்துள்ளனர். பேராசிரியர்களும் முதல்வரும் வந்து கேட்டபோது தங்களுக்கு யாரையும் தாக்கும் நோக்கம் இல்லை எனவும் தேர்வு எழுத வந்துள்ள மாணவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதே நோக்கம் எனவும் கூறி வெளியேற மறுத்து, உள்ளே அமர்ந்துள்ளனர். இதனால் பதட்டமடைந்த கல்லூரி நிர்வாகம் காவல்துறையின் உதவியை நாடியுள்ளது. கல்லூரி முதல்வர் எழுத்து மூலம் அருகிலுள்ள ‘எஸ்பிளனேடு’ காவல் நிலையத்திற்கு புகார் அனுப்பியுள்ளார். பதட்டம் அதிகரித்தபோது நேரிலும் சென்று புகார் செய்துள்ளார்.
தற்போது பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள காவல்துறை உதவிஆணையர் நாராயணமூர்த்தி கல்லூரி முதல்வரிடம் ‘பகுஜன் சமாஜ் கட்சி’ தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் மற்றும் வழக்குரைஞர் சங்க தலைவர் பால் கனகராஜ் ஆகியோரின் தொலைபேசி எண்களைத் தந்து அவர்கள் மூலம் மாணவர்களிடம் பேசி வெளியேறச் செய்யுமாறு ஆலோசனை கூறியுள்ளார். முதல்வரும் அவ்வாறே செய்துள்ளார்.கல்லூரி முதல்வர் கேட்டுக் கொண்டதற்கிணங்க வழக்குரைஞர் ரஜினிகாந்த்தும் த லித் மாணவர்களிடம் பேசியுள்ளார்.அவருடன் விஞ்ஞானி கோபாலும் இருந்துள்ளார். பாதுகாப்பிற்காகத்தான் தாங்கள் இருப்பதாக அவர்களிடமும் மாணவர்கள் சொல்லியுள்ளனர்.
சட்டக் கல்லூரியையும் நீதிமன்றத்தையும் பிரிக்கும் சுவர் வழியே திரும்பி வரும்போது பாரதிகண்ணன் அச்சுவரிலுள்ள சிறிய கேட்டுக்கு அருகிலுள்ள கல்லில் கத்தியைத் தீட்டிக்கொண்டிருந்ததை கோபால் நேரில் கண்டுள்ளார். இதற்கிடையில் தேர்வு எழுதி முடித்துவிட்டு அய்யாத்துரை வந்துள்ளார். ஏற்கனவே தலித் மாணவர்கள் தேர்வு எழுதுவதைத் தடுத்து அடித்தவர் அய்யாத்துரை என்பதால் அவரை தலித்மாணவர்கள் தாக்கியுள்ளனர். எனினும் அவர் அன்று ஆயுதம் எதுவும் கொண்டு வரவில்லை. தாக்கும் நோக்கத்துடன் இல்லை என்பதால் அடித்தவர்களே அவரை ஆசுவாசப்படுத்தி தண்ணீர் கொடுத்து அனுப்பியுள்ளனர். இதைத் தேர்வு எழுத வந்த தன் மகளுக்குப் பாதுகாப்பாக வந்த வழக்குரைஞர் பிரகாஷ் நேரில் பார்த்துள்ளார். ஆசிரியர்களும் உறுதிப்படுத்துகின்றனர்.
இந்நிலையில்தான் பாரதிகண்ணனும் ஆறுமுகமும் ஓடி வந்துள்ளனர். உருவிய கத்தியுடன் பாரதிகண்ணன் ஓடி வந்தது ஊடகங்களில் பதிவாகியுள்ளது. நாங்கள் சென்றபோது பாரதிகண்ணன் மயக்க நிலையில் இருந்ததாகச் சொல்லப்பட்டது. அவரது பெற்றோர்களே எங்களிடம் பேசினர். எங்களிடம் தெளிவாக விவரங்களைச் சொன்ன ஆறுமுகம் தங்கள் இருவரிடமும் அன்று கத்திகள் இருந்ததை ஒத்துக் கொண்டார். அய்யாத்துரை அடிபடுவதாக அறிந்து அவரைக் காப்பாற்றவே ஓடிவந்ததாகச் சொன்னார். கடும் சொற்களால் தலித் மாணவர்களைத் திட்டிக்கொண்டே கையில் கத்தியுடன் பாரதி கண்ணன் ஓடி வந்ததைக் கண்டு தலித் மாணவர்கள் பின்வாங்கியுள்ளனர்.
சித்திரைச் செல்வன் மீது பாரதிகண்ணன், ஆறுமுகம் ஆகியோருக்கு இருந்த முன் பகை குறித்து முன்பே கண்டோம். கத்தியுடன் வந்த இருவரும் சித்திரைச் செல்வனைத் தாக்கியுள்ளனர். தலையிலும் உட லிலும் பெருங்காயத்துடன் சித்திரைச் செல்வன் கீழே விழுந்ததைக் கண்ட தலித் மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் இருவரையும் தாக்கியுள்ளனர். கத்தி நழுவி கீழே விழுந்தவுடன் அவர்கள் இருவரும் உருட்டுக் கட்டைகளால் கடுமையாகத் தாக்கப்பட்டதை ஊடகங்களில் எல்லோரும் பார்த்தோம். காவல்துறையினர் அருகில் இருந்தும் தாக்குதலைத் தடுப்பதற்கோ, கூட்டத்தைக் கலைப்பதற்கோ முயற்சிக்காததையும் கண்டோம்.
இன்றைய நிலை:
நவ.12 நிகழ்ச்சியை ஒட்டி மூன்று வழக்குகள் பதிவாகியுள்ளன.
1. குற்ற எண்:1371/2008 என்கிற வழக்கில் பெயர் குறிப்பிடப்பட்ட 8 தலித் மாணவர்கள் ‘மற்றும் பலர்’ குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். இதுவரை 23 தலித் மாணவர்கள் இது தொடர்பாகக் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையிலும், சைதாப்பேட்டை கிளைச் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். மருத்துமனையிலுள்ள சித்திரைச்செல்வனும் கைது செய்யப்பட்டுள்ளார். இ.பி.கோ.147, 148, 307, 506(2) முதலான (கொலை முயற்சி உள்ளிட்ட)பிரிவுகளில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
2. குற்ற எண்:1372/2008 என்கிற வழக்கு சித்திரைச் செல்வன் அளித்த புகாரின் பேரில் பாரதி கண்ணன்,ஆறுமுகம் ஆகிய இருவர் மீது மட்டும் பெயர் குறிப்பிடப்பட்டு போடப்பட்டுள்ளது. பெயர் குறிப்பிடாமல் யாரையும்(‘மற்றவர்கள்’) சேர்க்கவில்லை. 506(2) அதாவது கொலை மிரட்டல் என்கிற பிரிவின் கீழ் மட்டுமே குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. யாரும் கைது செய்யப்படவில்லை.
3. குற்ற எண்.1373/2008: முதல்வர் அளித்த புகார் இது. முதல்வர் அளித்த புகார் ஒன்றின் அடிப்படையில் 14 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளில் சிலரை இடம் மாற்றியும், சிலரை தற்காகஇடை நீக்கம் செய்தும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பொறுப்பு முதல்வர் இடை நீக்கம் செய்யப்பட்டு நிரந்தர முதல்வர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். நீதிபதி (ஓய்வு) சண்முகம் தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றையும் அரசு நியமித்துள்ளது.
எமது பார்வைகள்:
1. கல்லூரி வளாகத்திற்குள் சாதி அமைப்புகள், வன்முறை ஆகியன மிகுந்த கவலைக்குரியவையாக உள்ளன.அன்றயை வன்முறை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. எனினும் நவ.12 சம்பவங்களை அன்றைய நிகழ்ச்சியை மட்டும் வைத்து மதிப்பிடக்கூடாது. தொடர்ச்சியாக அங்கு நடைபெற்று வரும் சம்பவங்களின் பின்னணியிலேயே வைத்து அது பார்க்கப்பட வேண்டும்.
2. கல்லூரிக்குள் சாதி அமைப்புகள் உருவாகிச் செயற்படுவதை அனுமதிக்கக்கூடாது. அதிலும் கல்லூரியின் பெயரில் டாக்டர் அம்பேத்கர் என்னும் சொல்லை நீக்கி அச்சிடுவது, கல்லூரி அருகில் அவற்றை ஒட்டுவது முதலானவற்றை கல்லூரி நிர்வாகம் தடுத்திருக்க வேண்டும். பிரச்சினைகள் வரும்போது உடனடியாக கவுன் லிசிங் செய்வது, தேவையானால் பெற்றோர் - ஆசிரியர்கள் - காவல்துறையினர் கூட்டம் கூட்டிப் பேசுவது, முடிவுகளுக்கு கட்டுப்படாதபோது நடவடிக்கை எடுப்பது என்கிற வடிவில் பிரச்சினைகளை அணுகியிருக்க வேண்டும்.
3. காவல்துறை அன்று தலையிடாததற்குச் சொல்லும் காரணம் தம்மை நிர்வாகம் உள்ளே அனுமதிக்கவில்லை என்பது. ஆனால் கல்லூரி நிர்வாகமோ எழுத்து மூலம் புகாரளித்துள்ளதாகச் சொல்லுகிறது. இது குறித்து நாங்கள் காவல்துறை ஆய்வாளர் ஜெயக்கொடியிடம் பேசியபோது தனக்கு அது தெரியாது என்றார். எனினும் அடிப்பட்ட மாணவர்களை அவரே சென்று தூக்கி வந்ததாகவும் குறிப்பிட்டார். காவல்துறையின் இந்தப்போக்கு கவலைக்குரியது. கண்முன் ஒரு Cognizable Offence நடக்கும் பொழுது அதை தடுக்க முனைவதற்கு எந்த ஆணையும்,அனுமதியும் தேவையில்லை.
4. அரசு கல்லூரிகள் அனைத்தும், குறிப்பாகச் சட்டக் கல்லூரிகள் என்பன தமிழக கிராமப் புறங்களின் நீட்சிகளாகவே உள்ளன. கிராமங்களிலுள்ள அத்தனை சாதி உணர்வுகளும் வளாகத்திற்குள் பிரதிபக்கின்றன. சென்னை சட்டக் கல்லூரி மட்டுமின்றி எல்லா அரசு கல்லூரிகளிலும் இதுவே நிலை. கோவை சட்டக் கல்லூரியிலும் இன்று இத்தகைய பிரச்சினை உள்ளது. சட்டக் கல்லூரியில் இப்பிரச்சினை கூடுதலாக இருப்பதற்கு வழக்குரைஞர் தொழிலின் தன்மை ஒரு காரணமாக உள்ளது. குறிப்பாக கிராமப்புறங்களில் சாதி சார்ந்துள்ளதாகவே இத்தொழில் உள்ளது. வழக்குரைஞராகப் பதிவு செய்வதே ஒரு சாதி சார்ந்த நிகழ்வாகவும் இன்று உள்ளது. அரசியல் கட்சிகள் இவற்றைக் கண்டிப்பதில்லை. ஒரு மாணவர் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியிலும், அதே நேரத்தில் சாதி சங்கத்திலும் உள்ளதை காண முடிகிறது.
5. அரசு கல்லூரிகள் மற்றும் சட்டக் கல்லூரிகள் அரசின் புறக்கணிப்பிற்குள்ளாகியுள்ளன. ஆசிரியர் கா லியிடங்கள் உடனடியாகப் பூர்த்தி செய்யப்படுவதில்லை. இதனால் வகுப்புகள் பல ரத்தாகின்றன. வகுப்புகள் ரத்தாகும் போது மாணவர்கள் வளாகத்திற்குள் கூடி நிற்பது பூசலுக்கு ஒரு காரணமாகிறது. தமிழகம் முழுவதுமுள்ள சட்டக் கல்லூரிகளில் இன்று நிரந்தர ஆசிரியப் பதவிகளில் மட்டும் சுமார் 55 இடங்கள் காலியாக உள்ளதாக அறிகிறோம்.ஆனால் அதே நேரத்தில் Elite Schools என்கிற பெயரில் அரசால் நடத்தப்படுகிற நிறுவனங்களில் வகுப்புகள் ஒழுங்காக நடத்தப்படுவதை யாரும் அறிவர். சென்னை சட்டக் கல்லூரியில் இச்சம்பவத்தின் போது நிரந்தர முதல்வர் கூட இல்லை. பொறுப்பு முதல்வரின் தலைமையில் கல்லூரி நிர்வாகம் அமைவது உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வழிவகுக்காது.
6. சில ஆண்டுகட்கு முன் விடுதியில் நடைபெற்ற மோதலை ஒட்டி அப்போது அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் சில பரிந்துரைகளை வழங்கியது. நிரந்தர முழு நேர விடுதிக் கண்காணிப்பாளர் நியமிக்கப்படவேண்டும் என்கிற பரிந்துரை உள்பட எதுவும் நிறைவேற்றப்பட்டதாக தெரியவில்லை.
7. மாணவர்களைத் தேர்வு எழுத விடாமல் தடுப்பது அம்மாணவர்களின் வாழ்வையும், எதிர்காலத்தையும் பாதிக்கும் ஒரு விஷயம். இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் கவலைப்பட்டிருக்க வேண்டும். எத்தனை மாணவர்கள் இவ்வாறு மிரட்டலுக்குப் பயந்து தேர்வு எழுதாமற் போனார்கள் என்பது குறித்து உறுதியான தகவல்களை பேராசிரியர்களாலும் நிர்வாகத்தாலும் கூற இயலவில்லை.
8. தலித் மாணவர்கள், தேவர் சாதி மாணவர்களைத் தாக்கியதாகச் சுருக்கிப் பார்க்கும் நிலையையே அரசும் காவல்துறையும் மேற்கொண்டுள்ளன. கண்ணில் பார்த்த தலித் மாணவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்துடன் எந்த தொடர்பும் இல்லாத ‘திருப்பதி சட்டக் கல்லூரி’ மாணவரான கோகுல்ராஜ் என்பவர் அவ்வழியே செல்லும்போது கைது செய்யப்பட்டுள்ளார். பிடிப்பட்ட இவரை விட்டுவிட முடிவெடுத்த காவல்துறை அவர் தலித் என்றவுடன் கைது செய்துள்ளனர். இளமுகில், கனகராஜ், கோபாலகிருஷ்ணன், திலீபன் முதலான மாணவர்களும் கூட இக்கல்லூரி மாணவர்களாக இருந்தபோதும் சம்பவத்துடன் தொடர்பில்லாத மாணவர்கள். தலித் என்பதாலேயே கைது செய்யப்பட்டுள்ளனர். தேடப்படும் மாணவர்களின் வீட்டாரும் தொல்லைக்குள்ளாக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை சில அதிகாரிகள் இழிவாகப் பேசியுள்ளனர்.
பரிந்துரைகள்:
1. கல்லூரி வளாகத்திற்குள் சாதி அமைப்புகள் செயல்படுவது அதன் சார்பில் சுவரொட்டிகள், துண்டறிக்கைகள் வெளியிடுவது தடைசெய்யப்பட வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட வடிவிலேயே கல்லூரிப் பெயர்கள் எதிலும் அச்சிடப்படவேண்டும். ‘டாக்டர் அம்பேத்கர்’ உள்ளிட்ட எந்தச் சொல்லையும் நீக்கி சுருக்குவது குற்றமாக்கப்பட வேண்டும்.
2. இப்பிரச்சினையை ஒட்டி சட்டக் கல்லூரிகளின் பெயரில் அம்பேத்கர் பெயர் நீக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை எழுப்பப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அரசு இதை ஏற்கக்கூடாது.
3. கோவை முதலான சட்டக் கல்லூரியிலும் இதே பிரச்சினை உள்ளது. அங்கும் தேர்வு எழுதிய மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். அரசும் நிர்வாகமும் முன் நடவடிக்கை எடுத்து வன்முறையைத் தடுக்க வேண்டும்.
4. அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் ஒரு சார்புடையவையாக உள்ளன. சித்திரைச் செல்வனை கத்தியால் குத்தி தாக்கி, அவர் தலையில் அடிபட்டு, காது கிழிந்துள்ள போதும் அவரைத் தாக்கியோர் மீது 307 பிரிவு போடப்படவில்லை. கைது செய்யப்படவுமில்லை. பின்னணியில் இருந்த சாதிப் பேரவையைச் சார்ந்த மாணவர்கள் மீதும் குற்றம் சுமத்தப்படவில்லை. இவை கண்டிக்கப்படத்தக்கவை. அரசு உடனடியாக இந்தத் தவறுகளைச் சரிசெய்ய வேண்டும்.
5. மாணவர்களைத் தேடுகிறோம் என்கிற பெயரில் அவர்களின் வீட்டார்களைத் தொல்லைப்படுத்துதல் தவிர்க்கப்படவேண்டும். கைது செய்யப்பட்ட அப்பாவி மாணவர்கள் குறிப்பாக திருப்பதி கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் விடுதலை செய்யப்பட வேண்டும்.
6. கல்லூரி முதல்வர் எழுத்து மூலம் புகார் அளித்தும் ஏன் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பது விசாரிக்கப்பட வேண்டும். பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங்கின் தொலைபேசி எண்ணைக் கொடுத்து அவருடன் பேசி சமாதானம் செய்யச் சொன்ன அதே காவல்துறை இன்று அவரைக் கைது செய்ய முயல்வதாக அறிகிறோம். பிற சாதிச் சங்கங்களின் வற்புறுத்தன்பேரில் இது செய்யப்பட்டால் அது தவறு. இதுகுறித்தும் விசாரிக்கப்பட வேண்டும்.
7. கல்லூரி ஆசிரியப் பணிக் கா லியிடங்கள் உடனடியாகப் பூர்த்தி செய்யப்பட வேண்டும். நின்றுபோன தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். மிரட்டல் காரணமாகத் தேர்வு எழுதாமல் போனவர்கள் குறித்து விசாரணை நடத்தி அவர்களுக்குத் தனித் தேர்வு நடத்த வேண்டும். நிரந்தர கவுன்சிலிங் அமைப்பு, அமைதிக்குழு ஆகியன கல்லூரியில் உருவாக்கப்பட வேண்டும். விடுதிக்கு முழு ‘வார்டன்’ நியமிக்கப்பட வேண்டும்.
8. மருத்துவ மாணவர்களுக்கு House Surgeon பயிற்சி உள்ளது போல சட்டம் பயிலும் மாணவர்களுக்கும் இறுதிஆண்டுகளில் (3 மற்றும் 5ம் ஆண்டு) பல்வேறு அரசு நிறுவனங்களின் சட்டத்துறைகள் மற்றும் Legal Cell Authority, High Court Registry ஆகியவற்றில் ஊதியத்துடன் கூடிய பயிற்சி அளிக்கப்படுதல் வேண்டும்.
9. சைதாப்பேட்டை கிளைச் சிறையிலுள்ள மாணவர்கள் உடனடியாக புழல் சிறைக்கு மாற்றப்பட வேண்டும்

காஷ்மீர் பிரச்சினை

நகைச்சுவை என்கிற பெயரில் தமிழ்ச் செல்வன் தொடங்கி விக்ரமாதித்தன் வரை சமகாலத் தமிழ் எழுத்தாளர்கள் பலரையும் கேலி செய்து எழுதியுள்ள ஜெயமோகனின் கட்டுரையைச் சென்ற `தீராநதி' (அக்.2008) இதழில் பார்த்தேன். சமூகச் சுரணையுள்ள எழுத்தாளர்கள் மீது அவரது காழ்ப்பு சற்றுக் கூடுதலாகவே வெளிப்பட்டுள்ளது! அதிரடியாக எதாவது சொல்லி, எழுதி தன் மீது கவனத்தை ஈர்ப்பதில் ஜெயமோகன் கில்லாடி. கிட்டத்தட்ட இதே நேரத்தில் தனது `ப்ளாக்'கில் பாசிச எதிர்ப்புணர்வுடன் எழுதும் தமிழ் எழுத்தாளர்களைக் கேவலப்படுத்தி அவர் எழுதிய கட்டுரை ஒன்றும் (`எனது இந்தியா') எனது கவனத்திற்கு வந்தது. கவன ஈர்ப்பிற்காக அரை நிர்வாணத்துடன் அந்தர்பல்டி அடிக்கவும் தயங்காத ஜெயமோகனின் வலையில் நான் விழ விரும்பாதபோதும், சங்க இலக்கியம் முதல் இந்தியத் தத்துவம் வரை எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுதக் கூடியவர் என்ற பெயருடன் எல்லாவற்றினூடாகவும் மனித வெறுப்பை, சமூக அநீதிகளைக் கொண்டாடும் அவரது மன நிலையைத் தோலுரிப்பது அவசியம் என்பதால் இதை எழுதுகிறேன்.
மத அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்தி, இந்தியச் சமூகத்தில் பன்மைத் தன்மையை ஒழித்துக்கட்ட வெறுப்பு அரசியல் செய்யும் பாசிஸ்டுகளின் பத்திரிகைகளில் வர வேண்டிய கட்டுரை அது. அவரது நூல்களை வாங்கி விற்கும் ஆர்.எஸ்.எஸ். நிறுவனங்கள், தேவஸ்தானங்கள், வாங்கி இலவசமாக விநியோகிக்கும் தொழிலதிபர்கள் இக்கட்டுரையை மறுபிரசுரம் செய்யக் கூடும்.
தன்னார்வ அமைப்புக்கள் வெளியிடும் பத்திரிகைகள் இந்திய எதிர்ப்பைக் கண் மூடித்தனமாக வெளிப்படுத்துவதாகத் தொடங்கும் ஜெ.மோ விரைவில் `சமரசம்' `விடிவெள்ளி' முதலான முஸ்லிம் இதழ்கள், ஜமாத்-ஏ-இஸ்லாமி முதலான முஸ்லிம் அமைப்புகள், அருந்ததிராய் போன்ற சமூகச் சுரணையுள்ள எழுத்தாளர்கள் எல்லோரையும் ஒன்றாக்கி வெளிநாட்டிலிருந்து கூலி பெற்று இயங்குபவர்களாகவும், மத அடிப்படைவாதிகளாகவும், பயங்கரவாதத்தை நியாயப்படுத்துபவர்களாகவும் சித்திரிக்கிறார். தன்னார்வ அமைப்புக்களை இடதுசாரிகளும் விமர்சிக்கிறார்கள், இந்துத்துவவாதிகளும் எதிர்க்கிறார்கள். கூடவே முஸ்லிம் இதழ்களையும் இலக்காக்குவதிலிருந்து ஜெ.மோ யார் என்பது விளங்கி விடுகிறது.
காஷ்மீர் பிரச்சினை தொடர்பான அருந்ததி ராயின் சமீபத்திய கட்டுரை ஒன்றை `அலசுகிறார்' ஜெ.மோ. முஸ்லிம் வெறுப்பு ஒன்றை மட்டுமே மூலதனமாகக் கொண்டு கடை விரிக்கும் ஜெ.மோ, மிக அடிப்படையான அரசியல் உண்மைகளையும் கூட அறியாத ஞானசூன்யம் என்பதை வரிக்கு வரி வெளிப்படுத்தி விடுகிறார்.
1947-ல் தொடங்கி காஷ்மீர மக்களின் குரலை ஒடுக்குவது, ஆண்டு தோறும் பத்தாயிரக் கணக்கில் அப்பாவி மக்கள் மீது படுகொலைகள், சித்திரவதைகள், கற்பழிப்புகள் நிகழ்த்துவது ஆகியவற்றைச் செய்கிற இந்திய அரசைக் கண்டிக்கும் அருந்ததிராயை `வெளிநாட்டு ஏஜன்ட்' என்கிற அளவில் இழி மொழிகளால் அவதூறு செய்கிறது ஜெ.மோவின் கட்டுரை. இரண்டு வாரங்களுக்கு முன் காஷ்மீர் பள்ளத்தாக்கில் நான்கு நாட்கள் தங்கி நிலைமையை நேரில் பார்த்த அனுபவம் எனக்குண்டு. அந்த நான்கு நாட்களில் இரண்டு நாட்கள் ஒரு விடுதியில் வைத்துப் பூட்டப்பட்டிருந்தோம் நாங்கள். வெளியில் சி.ஆர்.பி.எஃப் படைவீரர்கள் ஆயுதங்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் இன்று ஒவ்வொரு ஐந்து காஷ்மீரிக்கும் ஒரு இந்தியப் படைவீரர் என்கிற அளவில் இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. சுமார் எட்டு லட்சம் வீரர்கள், யாரை வேண்டுமானாலும் கைது செய்ய, சுட்டுக் கொல்ல முழு அதிகாரம் அளிக்கப்பட்டு அங்கே நிறுத்தப்பட்டுள்ளனர். பள்ளிகள், மருத்துவமனைகள், பழத் தோட்டங்கள் எல்லாம் இன்று இராணுவக் குடியிருப்புகள். உலக அளவில் பல்வேறு மனித உரிமை அமைப்புக்களும் வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் கடந்த 18 ஆண்டுகளில் ஒரு லட்சம் காஷ்மீர் முஸ்லிம்கள் இந்தியப் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். 80,000 குழந்தைகள் இன்று அனாதைகள் விடுதிகளில். அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படியே 2000-2002 ஆண்டுகளில் மட்டும் `காணாமலடிக்கப்பட்டவர்களின்' எண்ணிக்கை 3784. மனித உரிமை அமைப்புகள் இன்னும் பலமடங்கு அதிகமாக இந்த எண்ணிக்கையைச் சொல்கின்றன. பல்லாயிரக்கணக்கான இளம் விதவைகள், எந்தச் சட்ட உரிமைகளும் இல்லாத `அரை விதவைகள்' அதாவது காணாமலடிக்கப்பட்டவர்களின் மனைவிகள்: இதுதான் இன்றைய காஷ்மீர்.
எங்கு நோக்கினும் இராணுவ `கேம்ப்'கள். சாலையில் ஒரு இராணுவ வீரனைப் பார்த்தால், நீங்கள் செல்லும் வாகனத்தின் `ஹெட் லைட்'டை அணைத்து உள் விளக்கைப் போட வேண்டும். இல்லாவிட்டால் சுடுவார்கள்.
நான் சொல்கிற எதுவும் ஜெ. மோவுடையதைப் போல ஆதாரமற்ற அவதூறுகளல்ல. வெளிவர உள்ள எனது நூலில் அத்தனைக்கும் ஆதாரங்களுள்ளன. எந்தப் பொது மேடையிலும் அவருடன் விவாதிக்கத் தயாராக உள்ளேன்.
``அமர்நாத் குகைக் கோயில் சார்ந்து எழுந்த கிளர்ச்சியை ஒட்டி காஷ்மீரில் உருவான எதிர்க்கிளர்ச்சியை மாபெரும் மக்கள் புரட்சியாக நேரில் சென்று கண்டு ஆனந்த பரவசத்துடன் எழுதியிருக்கிறார் அருந்ததி ராய்'' - ஜெ.மோ.
பள்ளத்தாக்கிலுள்ள மக்களுக்கு அத்தியாவசிய மருந்துகள், குழந்தை உணவுகள் உட்படச் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தி, கொய்த ஆப்பிள் பழங்களை அழுகடித்துப் பொருளாதாரத் தடைவிதித்த இந்துத்துவ வன்முறை (தன்னெழுட்சியாக) எழுந்த கிளர்ச்சியாம். தமது நிலத்தைச் சட்ட விரோதமாக, மக்களின் சம்மதமின்றி ஆலய நிர்வாகத்திற்கு மாற்றியதை சுற்றுச் சூழல் நோக்கிலிருந்தும், உரிமைகள் அடிப்படையிலும் எதிர்த்த காஷ்மீர் மக்களின் செயற்பாடுகள் மக்கள் புரட்சி இல்லையாம்.
அமர்நாத் பற்றி தினசரி இதழ்களைக் கூட ஒழுங்காகப் படிக்காத அறிவுச் சோம்பேறிகளுக்கு என்ன தெரியும்? யாரும் எளிதில் செல்ல இயலாத `கிளேசியர்' பகுதியொன்றில் குகைக்குள் இருந்த `பனிலிங்கத்தை'க் கண்டுபிடித்தது ஒரு முஸ்லிம் ஆட்டிடையர் (1860). விக்கிரக ஆராதனையில் நம்பிக்கையற்றவர்களாக இருந்த போதும் அந்தச் செய்தியை இந்துச் சகோதரர்களுடன் பகிர்ந்து கொண்ட முஸ்லிம் ஆட்டிடையர்கள் (`மாலிக்'கள்), கடந்த 150 ஆண்டுகளாக அதைத் தமது பாதுகாப்பில் வைத்திருந்தனர். ஆண்டு தோறும் வரும் யாத்ரிகர்களுக்கு எல்லாவிதமான வசதிகளையும் செய்து தருதல், மிகப் பெரிய உணவுச் சாலைகளை அமைத்து உணவு வடித்துத் தருதல் எல்லாம் முஸ்லிம்கள் தான். ஸ்ரீநகரிலிருந்து அமர்நாத் வரை செல்லுமிடமெல்லாம் முஸ்லிம்களின் விருந்தோம்பல்கள் அன்றும் உண்டு, இன்று உண்டு. காஷ்மீரிகளின் விருந்தோம்பல் உலகப் பிரசித்தமானது.
இந்த ஆண்டு இத்தனை பிரச்சினைகளுக்கு மத்தியிலும் கூட நான்கு லட்சம் யாத்ரிகர்கள் வந்துபோயுள்ளனர். அவர்களில் ஒருவருக்கும் கூட ஒரு சிறு தீங்கும் விளைவிக்கவில்லை. மாறாக வழக்கமான அத்தனை விருந்தோம்பல்களும் நடைபெற்றன. இந்து யாத்ரிகர்களுக்கு முழுப் பாதுகாப்பும் அளிக்கப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் ஜம்முவிலிருந்து கொண்டு இந்துத்துவ அமைப்புக்கள் மேற்கொண்ட `கிளர்ச்சியை' ஒட்டி 30 முஸ்லிம் இளைஞர்கள் கொல்லப்பட்டனர். உண்டா, இல்லையா?
காஷ்மீரில் இந்திய அரசு மேற்கொள்ளும் விரிவாக்க ஆக்ரமிப்பு இந்துக் குடியேற்றங்களைச் செய்யும் வடிவிலானதல்ல. மாறாக எல்லாவிதமான நிறுவனங்களின் மீதுமிருந்த காஷ்மீர மக்களின் அதிகாரம் படிப்படியாகப் பறிக்கப்பட்டது. இதனுடைய ஒரு உச்ச கட்டம்தான் அமர்நாத் ஆலய நிர்வாகம் (Shrine Board) உருவாக்கப்பட்டதும், 100 ஏக்கர் நிலம் கையளிக்கப்பட்டதும். பா.ஜ.க. அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர் சின்ஹாவின் சதித்திட்டம் அது. ஒவ்வொரு ஆண்டும் உருப்பெறும் அந்தப் பனிலிங்கத்தின் ஆயுள் இரண்டு வாரங்கள் மட்டுமே. பின் அது உருகி `லிட்டர்' மற்றும் `ஜீலம்' நதிகளில் கரைந்தோடிவிடும். படிப்படியாக யாத்ரிகர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியது, யாத்திரைக் காலத்தை இரண்டு வாரங்களிலிருந்து இரண்டு மாதமாக அதிகரித்தது, பனி லிங்கத்தின் இடத்தில் நிரந்தரமாக ஒரு பளிங்கு லிங்கத்தை அமைக்கும் சதித்திட்டம் தீட்டியது ஆகியவற்றின் உச்ச கட்டமாகவே 100 ஏக்கர் நிலம் ஆலய நிர்வாகத்திற்கு அளிக்கப்பட்டதும், ஆலய நிர்வாகக் குழுவில் உள்ளவர்கள் சுங்கம் வசூலிக்கத் தொடங்கியதும் கிளேசியர் பகுதி ஒன்றில் யாத்ரீகர்கள் வசதிக்கென நிரந்தரமாக கட்டிடங்கள் உருவாக்குவதும். கடந்த 18 ஆண்டுகளில் உபரியாக எட்டு லட்சம் இராணுவத்தினரைச் சுமந்து அழிந்துள்ள காஷ்மீரின் இயற்கை வளங்கள் நிரந்தரமாக அழித்து விடும் எனச் சுற்றுச் சூழலாளர்கள் சொல்லியிருப்பது தெரியுமா ஜெ.மோக்களுக்கு.
``அந்த மண்ணின் மைந்தர்களான காஷ்மீரி பண்டிட்டுகளைக் கொன்று குவித்து அடித்துத் துரத்திய பின்னர்தான் அவர்களின் (காஷ்மீரிகளின்) போராட்டம் தொடங்கியது'' -ஜெ.மோ.
ஜெ.மோவின் வெறுப்பு அரசியலின் உச்சகட்ட வெளிப்பாடு இது. அவரது ஞானசூன்யத்திற்கான அப்பட்டமான சாட்சியம் இது. பண்டிட்கள் மண்ணின் மைந்தர்கள் என்பதில் நமக்கு மட்டுமல்ல, காஷ்மீர முஸ்லிம்களுக்கும் கருத்து மாறுபாடு இல்லை. ஆனால் பண்டிட்கள் + முஸ்லிம்கள் என்றொரு எதிர்வை உண்டாக்கி பண்டிட்களை மட்டும் மண்ணின் மைந்தர்கள் எனச் சொல்வதன் பொருளென்ன? முஸ்லிம்களை `அந்நியர்களாக'ச் சித்திரிப்பதுதானே.
பிரிவினைக் கலவரங்களின்போது ஜம்முவில் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை 5 லட்சம். கட்டாயமாகப் பாகிஸ்தானுக்கு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை ஒரு லட்சம். ஆனால் பள்ளத்தாக்கிலிருந்த பண்டிட்கள் யாரும் அப்போது கொல்லப்படவில்லை என்பது நினைவிருக்கட்டும். காந்தியடிகளும் கூட இந்த உண்மையைக் கணக்கிலெடுத்துக் கொண்டு காஷ்மீர முஸ்லிம்களைப் பாராட்டினார். 1990-களில் ஆளுநர் ஜெக்மோகனின் (ஜெய மோகனுக்கும் ஜெக்மோகனுக்கும் மூளையில், சிந்தனை முறையில் எந்தப் பெரிய வித்தியாசமும் கிடையாது) ஊக்குவிப்புடன் வெளியேறியவர்கள்தான் இன்று அகதிகளாக உள்ள பண்டிட்கள். இந்தியாவில் வேறு எந்த அகதிகளுக்கும் வழங்கப்படாத சலுகைகள் இன்று பண்டிட்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. டெல்லியில் மக்கள் நெருக்கமுள்ள பகுதிகளில் கடைகள், அரசு ஊழியர்களுக்கு வேலையின்றியே முழு ஊதியம்...
காஷ்மீரில் தீவிரவாதம் தலையெடுத்திருந்த கடந்த 18 ஆண்டுகளில் எஞ்சிய அப்பாவிப் பண்டிட்கள் மீது பயங்கரவாதம் ஏவப்பட்டதில்லை என்பதையும் நினைவிற்கொள்ளுங்கள். உளவு சொன்னார்கள், காட்டிக் கொடுத்தார்கள் என்கிற ரீதியில் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில தனிநபர்கள் கொல்லப்பட்டிருக்கலாம். குஜராத்தைப் போலவோ, மும்பையைப் போலவோ பெரிய அளவில் இனப் படுகொலையை பண்டிட்கள் மீது காஷ்மீரத் தீவிரவாதிகள் நிகழ்த்தியதில்லை. இன்னொன்றையும் மனசில் நிறுத்துங்கள். காஷ்மீரில் இன்று அகதிகளாகியிருப்பது பண்டிட்கள் மட்டுமல்ல. அதே அளவில் காஷ்மீரி முஸ்லிம்களும் இடம் பெயர்ந்துள்ளனர். இம்முறை நான் பண்டிட்களின் பிரதிநிதியாக குமார் வாஞ்சு என்பவரையும் சந்தித்துப் பேசினேன்.
``காஷ்மீர் மக்கள் தேடுவது சுதந்திரத்தை அல்ல. பாகிஸ்தானோடு இணைவது மட்டுமே என்பது வெளிப்படை'' - ஜெ.மோ.
இதுவும் உண்மையறியாமையின் விளைவான பிதற்றலே. சையத் அலி ஷா கீலானி போன்றவர்கள் பாகிஸ்தானுடன் இணைதல் என்கிற கருத்தை முன் வைத்தபோதிலும் சுதந்திர காஷ்மீர் (`ஆஸாதி') என்கிற கோரிக்கையை முன் வைப்பவர்களே அங்கு அதிகம். அமர்நாத் பிரச்சினைக்குப் பின் இன்று அங்கு நிலைமை முற்றிலும் மாறியுள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின் தீவிரவாதம் பின்னுக்குச் சென்று அமைதி வழியிலான மக்கள் எழுச்சியாக அது மாற்றமடைந்துள்ளது. அதையொட்டியே அக்டோபர் 6-ல் அறிவிக்கப்பட்ட லால் சவுக் பேரணி. இதை நேரில் காண்பதும் எங்களின் நோக்கமாக இருந்தது. ஆனால் இந்திய அரசின் கொடுங்கரங்கள் இந்த எழுச்சியை கொடூரமாக ஒடுக்கியதைத்தான் நாங்கள் நேரில் பார்க்க முடிந்தது. இன்று உருவாகியுள்ள `காஷ்மீர் ஒருங்கிணைப்புக் குழுவில்' பிரிந்திருந்த ஹூரியத் அமைப்புகள் தவிர, பார்கவுன்சில், வணிகப் பேரவை எனப் பல தரப்பு சிவில் சமூகத்தினரும் ஒன்றிணைந்துள்ளனர். பெரியவர் கீலானியையும் எங்கள் குழு சந்தித்து உரையாடியது. அவரது கருத்தும் மாறியுள்ளது. பல தரப்பட்ட மக்களையும் சந்தித்தோம். பொதுமக்கள், வழக்குரைஞர்கள், பாதிக்கப்பட்டவர்கள், சீக்கிய சமூகத்தினர் எல்லோருடனும் உரையாடினோம். இன்று காஷ்மீர மக்களின் ஒரே கோரிக்கை `ஆஸாதி. தான் பாகிஸ்தானுடன் இணைப்பு அல்ல.
பாகிஸ்தானை ஒரு தாலிபானிய அரசு எனவும், இன்று காஷ்மீருக்கு இருக்கும் அடிப்படை உரிமைகளும் இல்லாத சர்வாதிகார அமைப்பு எனவும் ஜெ.மோ குறிப்பிடுகிறார். இதுவும் அப்பட்டமான அறியாமையின் விளைவே. இது குறித்து நான் விரிவாக எழுதியுள்ளேன். ஜியாஉல்ஹக்கின் காலத்தைத் தவிர வேறெப்போதும் பாகிஸ்தான் தன்னை ஒரு முஸ்லிம் அரசாகப் பிரகடனப் படுத்திக் கொண்டதில்லை. ஜின்னா முஸ்லிம்களுக்கான ஒரு நாட்டைத்தான் கோரினாரே ஒழிய இஸ்லாமிய அரசு ஒன்றையல்ல. இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புகள், ஜனநாயகத்திற்குப் பொருந்தாத நிலப் பிரபுத்துவ மதிப்பீடுகளினடிப்படையிலான அரசியல் எல்லாவற்றிற்கும் அப்பால் கடந்த ஐந்து ஆண்டுகளாக அங்கே நடைபெற்ற ஜனநாயகத்திற்கான பேரெழுச்சியையும், போராட்டங்களையும் நாம் கவனிக்க வேண்டும். இராணுவ ஆட்சி வீழ்த்தப்பட்டதையும் மனங்கொள்ள வேண்டும். வழக்குரைஞர் அமைப்புக்கள், நீதிமன்றங்கள் ஆகியன இந்தியாவைக் காட்டிலும் அங்கே போர்க்குணத்துடனும், சுதந்திரமாகவும் செயல்படுகின்றன. அதன் விளைவே நீதிமன்றங்களின் மீதான முஷரெப்பின் தாக்குதல். அதன் பலன்களை இன்று அவர் சந்தித்துக் கொண்டுள்ளார். பாகிஸ்தான் தெருக்களில் பிச்சைக்காரர்களைப் பார்க்க முடியாது.
ஒப்பீட்டளவில் அகக்கட்டுமானங்கள், சாலை வசதிகள் முதலியன அங்கு அதிகம். இந்தியா பீற்றிக்கொள்ளும் `பொருளாதார வளர்ச்சிக்கும்' கூட பாகிஸ்தானின் வளர்ச்சி குறைந்ததல்ல. பாகிஸ்தானில் பல மட்டங்களில் பெண்களுக்கு அரசியல் ஒதுக்கீடு வழங்கப்பட்டாலும், சிறுபான்மை மதத்தவருக்கு அவர்கள் வேண்டாமென்று சொன்ன வரை இரட்டை வாக்குரிமை அளிக்கப்பட்டிருந்ததும் ஜெயமோகனுக்குத் தெரியுமா?
ஏதோ பாகிஸ்தானில் பாலும் தேனும் ஓடுவதாகவும், ஜனநாயகம் செழித்திருப்பதாகவும் நான் சொல்வதாக நினைக்க வேண்டாம். அமெரிக்க விசுவாசத்திலாகட்டும், சொந்த மக்களை ஒடுக்குவதிலாகட்டும் இந்திய அரசுக்கு எந்த வகையிலும் குறைந்ததல்ல பாகிஸ்தான்.
காஷ்மீர் பிரச்சினையை, 1. பாகிஸ்தானின் தூண்டுதல், 2. `ஜிஹாதி' பயங்கரவாதம், 3. தேசப் பிரிவினையின் எச்ச சொச்சம் ஆகியவற்றின் விளைவு என்பதாக மட்டுமே முன்னிறுத்தி காஷ்மீர மக்களின் சுய நிர்ணய உரிமை, சுதந்திர வேட்கை என்கிற அம்சத்தை மூடி மறைப்பது இந்திய ராஜ தந்திரத்தின் சதித் திட்டங்களில் ஒன்று. இந்தச் சதியைத் தோலுரித்து அவர்களின் சுதந்திர வேட்கையை வெளிப்படுத்திக் காட்டுவதே அருந்ததிராய் போன்ற எழுத்தாளர்களின் கடமையாகிறது. ஒரு எழுத்தாளனின் கடமை அதுதானே. வாழுங் காலத்தின் சமூக அநீதிகைளக் கண்டு கொதித்து சம காலத்தையே நிராகரிப்பவன்தானே எழுத்தாளன். டால்ஸ்டாய் முதல் ஆஸ்கார் வைல்ட் வரை அப்படித்தானே வாழ்ந்துள்ளனர். எழுத்துக்கள் காலத்தைக் கடந்து நிற்ப என்பதன் பொருளும் இதுதானே.
பாகிஸ்தான் தூண்டுதல், பயங்கரவாதப் பிரச்சினை எல்லாவற்றையும் மறைத்து அதை ஒரு சுதந்திர வேட்கையாகச் சொன்னதைச் சுட்டிக் காட்டி அதற்காகவே அருந்ததியை `குருவி மண்டை' எனவும், கூலிக்கு எழுதுபவர் எனவும் இழிவு செய்கிறார் ஜெ.மோ. ஒரு எழுத்தாளனின் மண்டைக்குள் சம கால ராஜதந்திரியின் மூளை அமைந்துள்ளதெப்படி? ஜெ.மோ. ஒரு வினோதப் பிராணிதான்.
ஒன்றைச் சொல்லியாக வேண்டும். உலகெங்கிலும் நடைபெறும் விடுதலைப் போராட்டங்களுக்கும், காஷ்மீரி மக்களின் போராட்டத்திற்கும் ஒரு வேறுபாடு உண்டு. காஷ்மீர மக்கள் தமக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றக் கோரித்தான் போராடிக் கொண்டுள்ளனர். காஷ்மீரி மக்களின் விருப்பைக் கேட்டு அதன்படி முடிவெடுப்பது என்கிற வாக்குறுதியை இந்திய அரசு ஐ.நா. அவையின் முன் அளித்தது. இந்த நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளுக்காகவும், அரசியல் துரோகங்களை எதிர்த்துமே காஷ்மீரிகள் இன்று போராடிக் கொண்டுள்ளனர்.
இன்று காஷ்மீர மக்கள் அமைதி வழியை நோக்கித் திரும்பியுள்ளனர். ஒற்றைக் கோரிக்கையுடன் ஒருங்கிணைந்துள்ளனர். இந்தியாவிலிருந்து காஷ்மீரத்திற்குச் சுதந்திரம் என்பதன் இன்னொரு பக்கம் காஷ்மீரத்திலிருந்து இந்தியாவிற்கும் சுதந்திரம் என்பதே. காஷ்மீர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஏற்படும் போதே இந்திய மண்ணில் பயங்கரவாதம் முடிவுக்கு வரத் தொடங்கும். தினந்தோறும் இந்த அம்சத்தில் செலவிடப்படும் ரூ.500 கோடியையும் இந்திய மக்களின் நலனுக்குச் செலவிட இயலும்.
ஜெயமோகன் கக்கியுள்ள இதர விஷக் கருத்துக்களைச் சுருக்கம் கருதி விட்டு விடுகிறேன். இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டு உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் அஃப்சல் குருவின் மனைவி குடியரசுத் தலைவரைச் சென்று மிரட்டினாராம். ``இந்தியச் சமூகம் அளிக்கும் வாய்ப்புக்கள்'' மூலம் முஸ்லிம்களில் பெரும்பகுதியினர் முன்னேறி வருகிறார்களாம் (பார்க்க : சச்சர் அறிக்கை); உலகப் பரப்பில் வாழும் முஸ்லிம் சமூகங்களை ஆங்காங்கு புதைக்கப்பட்ட கண்ணி வெடிகளாக மாற்றுகின்றனவாம் முஸ்லிம் அமைப்புகள் (எத்தனை கொடூரச் சித்திரிப்பு பாருங்கள்); மாற்று தேசியங்களை மத நோக்கில் அழிக்க முஸ்லிம்களுக்குத் தயக்கம் இருக்காதாம்.
``காரணம், இஸ்லாம் என்பது ஒரு தேசிய கற்பிதம் - ஒரு தேசிய கற்பிதம் - ஒரு மதமோ வாழ்க்கை முறையோ மட்டும் அல்ல. அது பிற தேசிய அற்புதங்களை ஏற்காது'' - ஜெ.மோ.
ஜெயமோகனுக்கு இஸ்லாம் பற்றியும் ஒன்றும் தெரியாது என்று மட்டுமே மேற்குறித்த வாசகங்களிலிருந்து நாம் புரிந்து கொள்கிறோம். இஸ்லாமின் `தேசியம்' என்கிற கருத்தாக்கமே கிடையாது. `உம்மா' - சமூகம், நம்பிக்கையாளர்களின் கூட்டமைப்பு என்பதற்கே அங்கு முக்கியத்துவம். பிற நம்பிக்கையாளர்களுடன் சமூக இணக்கத்தை அது மறுத்ததில்லை. காஷ்மீர மக்கள் அதற்கொரு நடைமுறை எடுத்துக்காட்டு.
சமூக அநீதிகளுக்கு எதிராக நிற்கும் தமிழ் எழுத்தாளர்களைப் பெயர் குறித்து ஏசுகிறார் ஜெ.மோ. மாவோயிஸ்டுகளுக்கு சீனாவிலிருந்து நிதி வருகிறதாம். ``ஆங்கில இதழ்களின் ஞாயிறு இணைப்பில்'' வரும் கட்டுரைகளைப் பார்த்து தமிழில் எழுதுகிறவர்களாம் இத்தகைய அறிவுஜீவிகள். இப்படிச் சொல்வதற்கு ஜெயமோகனுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது என்பதை, ``மனச்சாட்சியுள்ள வாசகர்கள்'' யோசிக்க வேண்டும். தமிழில் வெளிவந்த நூற்களையே ஈயடிச்சான் காப்பி அடித்து பொ. வேல்சாமி போன்றவர்களிடம் மாட்டிக் கொண்டு குடும்ப சகிதமாக அவமானப்பட்டவர் ஜெ.மோ. இவர் ஆங்கில இதழ்களைப் பார்த்து கட்டுரை எழுதுவதில்லை என்பதை மட்டும் ஏற்றுக் கொள்ளலாம். ஏனெனில் இவர் ஆங்கிலத்தில் எதையும் படிப்பதில்லை. மலையாளத்தில் வரும்வரை அவர் காத்திருப்பார்.
``தேசபக்தியே பாவமென்றாகிவிட்ட இச் சூழலில், முத்திரை குத்தப்பட்டு, வசைபாடப்பட்டு, அவமதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டு நின்ற போதும் உரக்கச் சொல்வோம் நண்பர்களே `வெல்க பாரதம்' '' எனக் கட்டுரையை முடிக்கிறார் ஜெ.மோ. அவரது கட்டுரையை முழுமையாகப் படித்துப் பாருங்கள் - முத்திரையை வேறு யாரும் அவர் மீது குத்த வேண்டுமா என்பது விளங்கும். முத்திரை குத்துவதற்கு அவர் முதுகில் இடமில்லை. அவரது உடல் முழுவதும் காவி முத்திரை படிந்துள்ளதற்கு இந்தக் கட்டுரையே சாட்சி.
`தேசபக்தி பாவமென்றாகி விட்ட சூழல்' என அவர் சமூகச் சுரணையுள்ள எழுத்துக்களைக் குறிப்பிடுகிறார். உண்மைதான். தேசபக்தியைப் பாவமென்று மட்டுமல்ல, கொடூரம், அயோக்கியத்தனம், vicious என்றெல்லாம் பெரியார் ஈ.வெரா மட்டுமல்ல, டால்ஸ்டாய் உள்ளிட்ட மனிதரை நேசித்த, சமூகச் சுரணையுள்ள எழுத்தாளர்கள் அவ்வளவுபேரும், ஆம் அவ்வளவு பேரும் சொல்லித்தான் உள்ளனர்.
ஜெயமோகனைச் சற்றே ஒதுக்கி வைத்துவிட்டு `தேசபக்தி', `தேசியம்' ஆகியன குறித்தும் கொஞ்சம் ஆழமாகச் சிந்திப்போம்

உத்தபுரத்தில் உண்மை அறியும் குழு

மதுரை மாவட்டம் உத்தப்புரம் கிராமத்தில் (பேரையூர் தாலுகா) 18 ஆண்டு காலமாக இருந்த தீண்டாமைச் சுவர் மே 6-ந் தேதியே இடிக்கப்பட்டபோதும் தொடர்ந்து அங்கு பிரச்சினை இருந்து விடுவதையும், கடந்த அக்.1-ந்தேதி ‘பிள்ளைமார்’ மற்றும் ‘குடும்பமார்’(தலித்கள்) ஆகிய இருதரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலை ஒட்டி போலீஸ் தாக்குதல் நடைபெற்றுள்ளது என்பதையும் அறிந்த பல்வேறு மனித உரிமை அமைப்புகளையும் சேர்ந்த நாங்கள் உண்மையை அறிந்து வெளிப்படுத்துவது என முடிவு செய்தோம்.
மதுரை வழக்குரைஞர் ரஜினி அவர்கள் தலைமையில் பூர்வாங்க ஆய்வு செய்வதற்கென எம் குழுவின் ஒரு பகுதி சென்ற அக்.14 அன்று உத்தபுரம் சென்றது. 144 தடை உத்தரவைக் காட்டி நாங்கள் உள்ளே நுழைய விடாமல் தடுக்கப்பட்டோம். தடை உத்தரவு திருவிழாவிற்குத்தானே என நாங்கள் கேட்டபோதும் காவல்துறை அனுமதி அளிக்க மறுத்தது. எனவே பெண்கள் ஐக்கியப் பேரவை அமைப்பைச் சேர்ந்த பேச்சியம்மாள் உத்தபுரம் செல்ல அனுமதி கோரி உயர்நீதி மன்றத்தை அணுகினார். அக்.20 அன்று அளிக்கப்பட்ட தீர்ப்பில் நீதியரசர் ராஜசூர்யா அவர்கள் அடுத்த ஒரு வாரத்திற்குள் ஏழு பேர் கொண்ட எம் குழு அங்கு சென்றுவர தடை செய்யக்கூடாது என உத்தரவிட்டார்.காமரா, வீடியோ முதலிய கருவிகளைப் பயன்படுத்துவதையும் தடுக்கக்கூடாது எனவும் ஆணையிட்டார். இதன்படி சென்ற அக்.25 அன்று மதியம் 12 மணி சுமாருக்கு எம் குழு உத்தபுரத்தை அடைந்தது.
குழுவிருந்தோர்:
அ.மார்க்ஸ், ரஜினி, கு.பழனிச்சாமி (மனித உரிமை மக்கள் கழகம் - பி.யூ.எச்.ஆர்), வெரோனிகா, பேச்சியம்மாள் (பெண்கள் ஐக்கியப் பேரவை), கோ.சுகுமாரன் (மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி), ம.இளங்கோ (பெரியார் திராவிடர் கழகம், புதுச்சேரி), கே.கேசவன் (குடியுரிமை பாதுகாப்பு நடுவம்).
நாங்கள் அங்கு சென்றபோது மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் மோகன், மதுரை கிழக்குத் தொகுதியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் நன்மாறன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட அமைப்பாளர் கே.சுவாமிநாதன். ஜனநாயக மாதர் சங்க புற நகர் மாவட்டச் செயலாளர் பொன்னுத்தாய், எழுத்தாளர் சு.வெங்கடேசன் மற்றும் பலர் அடங்கிய குழு பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணப் பணியை செய்து கொண்டிருந்தனர்.
தொடர்ந்து இப்பிரச்சினையைக் கையிலெடுத்துப் போராடிக் கொண்டிருக்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் இத்தலைவர்களிடம் விரிவாகப் பேசிச் செய்திகளைத் தொகுத்து கொண்டோம்.
உத்தபுரத்தில் பிறந்து தற்போது தேனி பகுதியில் சமூகத் தொண்டாற்றும் வேலுமணி மற்றும் தலித் பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர்களான மு.பஞ்சவர்ணம்(25), தர்மராஜ்(40), நாகம்மாள்(45), நா.பஞ்சவர்ணம்(35), பார்வதி(25), பவுன்தாயி(40), வெள்ளையம்மாள்(60) எனப் பலரையும் சந்தித்து அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்துக் கொண்டோம், சேதமடைந்த வீடுகளையும், பொருட்களையும் படம் எடுத்துக் கொண்டோம்.
பின்னர் பிள்ளைமார் பகுதிக்குச் சென்று பாண்டியன்(32), ராஜா(28), பானுமதி(38) ஆகியோரிடம் பேசினோம். பாண்டியனும் ராஜாவும் விரிவாகத் தம் கோரிக்கைகளை முன்வைத்தனர். உத்தபுரத்தி ல் ‘டூட்டி’யில் இருந்த உசிலம்பட்டி காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.) சி.பாலசுப்பிரமணியத்திடம் சில தகவல்களைத் தெளிவுபடுத்திக் கொண்டோம். ஐ.ஜி. சஞ்சீவ் குமார் அவர்கள் தான் வெளியூரிலிருப்பதாகவும் கண்காணிப்பாளர் மனோகரனிடம் பேசுமாறும் கூறினார். தொலைபேசியில் கண்காணிப்பாளர் அவர்களையும் தொடர்பு கொண்டு பேசினோம்.

நடந்தவை:

மே 6ந்தேதியே உத்தபுரத்தில் கட்டப்பட்டிருந்த தீண்டாமைச் சுவரில் ஒரு சிறு பகுதி இடிக்கப்பட்டபோதும், அங்கே சில காவலர்கள் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டபோதும், இடிக்கப்பட்ட பகுதி வழியே தலித் மக்கள் சுதந்திரமாக சென்று வர இயலவில்லை. குறிப்பாக வாகனங்களை அவ்வழியே செலுத்த இயலவில்லை. வாகனங்கள் வரும்போது வழியில் வேண்டுமென்றே அமர்ந்து பாத்திரங்களைக் கழுவுவது, துணி துவைப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு தலித் மக்களின் வாகனப் போக்குவரத்தை பிள்ளைமார்கள் தடுத்துள்ளனர்.
இதுகுறித்து ஐந்து முறை புகார்கள் செய்யப்பட்டபோதும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகமும் பலத்த விளம்பரங்களுடன் மே 6ல் இடிக்கப்பட்ட சுவரின் வழியே சுமுகமான போக்குவரத்து ஏற்படுவதற்கு எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை.எந்த நோக்கத்திற்காக சுவர் இடிக்கப்பட்டதோ அது முழுமையாக நிறைவேறவில்லை. நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத மற்ற பிரச்சினைகளை தீர்க்கும் முயற்சியிலும் மாவட்ட நிர்வாகம் இறங்கவில்லை.
எடுத்துக்காட்டாக பிள்ளைமார் பகுதியிலிருந்து சாக்கடை ஒன்று வழிந்தோடி தலித் பகுதியில் தேங்குகிறது. குடிநீரையும் அது மாசுபடுத்துகிறது. இதை தடுத்து நிறுத்தி கழிவுநீரை வேறு வழியில் செலுத்தும் முயற்சியையும் அரசு செய்யவில்லை.காவல்துறையின் ‘அவுட்போஸ்ட்’ பிள்ளைமார் சங்க உறவின் முறை கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பிரச்சினை உள்ள ஒரு ஊரில் ஆதிக்கசாதியைச் சேர்ந்த உறவின்முறை கட்டிடத்தில் ‘அவுட்போஸ்ட்’ திறப்பது என காவல்துறை எடுத்த முடிவை எங்களால் விளங்கிக் கொள்ளவே இயலவில்லை. தலித் மக்கள் தங்கள் குறைகளை அங்கு எப்படிச் சென்று தயக்கமின்றி பதிவு செய்ய முடியும்?முத்தாலம்மன் கோவில் பிரச்சினை கடந்த பல ஆண்டுகளாக அங்கு தொடர்ந்து வருகின்ற ஒன்று. பொது இடத்தில் அக்கோவிலும், அரச மரமும் அமைந்துள்ள போதும் அது தமக்குச் சொந்தமென பிள்ளைமார்கள் கூறுகின்றனர்.
அந்த நிலத்திற்கு பட்டாவும் கோருகின்றனர். பிள்ளைமார் பகுதியையும், தலித் பகுதியையும் பிரிக்கிற சுவர் அமைக்கும் முடிவு எடுக்கப்பட்ட 1989 ஒப்பந்தம் ரொம்பவும் பக்கச்சார்பானது. தலித்களுக்கு எதிரானது. அரச மரத்தைச் சுற்றி திருவிழாக் காலங்களில் தலித் மக்கள் பாரம்பரியமாக செய்து வந்த முளைப்பாறி எடுக்கும் உரிமையும் இந்த ஒப்பந்தத்தில் மறுக்கப்பட்டுள்ளது. அரச மரத்தைச் சுற்றி பிள்ளைமார்கள் சுவர் ஒன்றையும் அமைத்துள்ளனர்.
இந்நிலையில் சென்ற அக்.1 அன்று திருவிழாவைக் காரணம் காட்டி அரச மரத்தைச் சுற்றியிருந்த சுவருக்கு பிள்ளைமார்கள் வெள்ளை அடிக்க முனைந்தபோது, அதை தலித் மக்கள் தடுத்துள்ளனர். இருபக்கமும் மக்கள் திரண்டுள்ளனர். நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டதாகவும், உறுதியற்ற தகவல்கள் கூறுகின்றன. இதையொட்டி அன்று டூட்டியில் இருந்த உசிலம்பட்டி காவல்துறை துணை ஆய்வாளர் ஜெகதா என்பவர் தலித் பகுதியில் தாக்குதலைத் தொடங்கியுள்ளார்.
‘வாக்கி டாக்கி ’ மூலம் தகவல் தெரிவித்து வெளியிலிருந்து காவலர்கள் வருவிக்கப்பட்டு சுமார் 12 மணி நேரம் திரும்பத் திரும்ப தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.ஜெகதாவும், எஸ்.பி.சி.ஐ.டி பிரிவை சேர்ந்த பூவேந்திரனும் (முன்னாள் அமைச்சர் துரைராஜின் சகோதரர்) தாக்குதல் அனைத்திற்கும் காரணமாக இருந்துள்ளனர். ஆண்கள் அனைவரும் தப்பி ஓட, அங்கிருந்த தலித் பெண்களே எல்லாத் தாக்குதலுக்கும் இலக்காகியுள்ளனர். வீடுகளில் புகுந்து பொருட்கள் நாசப்படுத்தப்பட்டள்ளன. கதவுகள், கண்ணாடி சன்னல்கள், ஃபேன் முதலான சாமான்கள் உடைக்கப்பட்டுள்ளன.‘‘வாடி அவுசாரி, உத்தபுரத்தை உழுவ போறண்டி, ஓடுங்கடி’’ என்று சொல்லி துணை ஆய்வாளர் ஜெகதா தம்மை அடித்ததாக பெண்கள் பலரும் வாக்குமூலம் அளித்தனர். தன் மீது தண்ணீரை ஊற்றி ஊற்றி அடித்ததாக இன்னொரு பெண் கூறினார்.
மூன்று நாட்களே ஆன கைக்குழந்தையுடன் கூடிய ஒரு பெண் உட்பட பலரும் காவல் நிலையத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். மோகன் எம்.பி. தலையிட்டு சிலரை விடுதலை செய்துள்ளார். மூன்று வெள்ளைத்தாளில் ரேகை பதித்துக்கொண்டே தாங்கள் விடுவிக்கப்பட்டதாகப் பெண்கள் கூறினர்.பிள்ளைமார் பகுதியில் எந்த தாக்குதலையும் போலீஸ் நடத்தவில்லை. காவல்துறையை பிள்ளைமார்களை வெகுவாகப் புகழ்ந்தனர். தமது வீடுகளில் இரண்டும், சிறிய முருகன் கோவில் ஒன்றின் கதவும் தலித்களால் உடைக்கப்பட்டதாகக் கூறினர்.

தலித் தரப்பிலிருந்து சொற்ப அளவில் சிறு தாக்குதல்கள் நடந்திருக்கலாம். ஆனால் தலித் மக்கள் மத்தியில் போலீஸ் மேற்கொண்ட பெருந்தாக்குதலுடன் ஒப்பிடும்போது இது மிகவும் சொற்பமானது என்பது குறிப்பிடத்தக்கது.கோவில் தங்களுக்கு மட்டுமே சொந்தமெனவும், சுவர் அமைத்துக் கொள்வது தமது உரிமையெனவும், தங்கள் சொந்த நிலத்தில் தாங்கள் சுவர் எழுப்பியுள்ளோமெனவும், 1989 ஒப்பந்தத்தின்படி அரச மரத்திலோ, கோவிலிலோ தலித்களுக்கு உரிமையில்லை எனவும், கட்டப்படவிருக்கும் பஸ் ஷெல்டரை ஊர் பொதுவான அரச மரத்தடியில் கட்டாமல் தங்கள் பகுதியிலுள்ள பஞ்சாயத்துக் கட்டிடத்தின் அருகில் கட்ட வேண்டுமெனவும் பிள்ளைமார்கள் வலியுறுத்தினர்.

எல்லாவற்றிற்கும் இந்த கம்யூனிஸ்ட்கள்தான் காரணம் எனவும் குற்றம் சாட்டினர்.உத்தபுரத்தில் ‘டூட்டி’யில் இருந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் சி.பாலசுப்பிரமணியத்திடம் நாங்கள் பேசியபோது தலித் பகுதி மீதான தாக்குதலுக்கு போலீஸ் காரணமல்ல என்றார். சரி யார் காரணம் என்று கேட்டதற்கு, தெரியாது என்றார். தலித் பகுதியிலிருந்துதான் வெடிகுண்டு வீசப்பட்டது என்றார். ஆனால் வெடிகுண்டு வீசப்பட்டதற்காக தடயம் ஏதும் எங்களுக்கு கிடைக்கவில்லை.

அன்று மாலை மதுரை காவல்துறை கண்காணிப்பாளர் மனோகரனை தொடர்பு கொண்டு பேசியபோது போலீஸ் அவுட்போஸ்டை மாற்ற இருப்பதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ள காவல்துறை அதிகாரிகள் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

எமது பார்வைகளும், பரிந்துரைகளும்:

1. அக்.1, 2 தேதிகளில் தலித் மக்கள் மீது காவல்துறை மேற்கொண்ட கொடுந்தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. முன்னதாக அளிக்கப்பட்ட புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை மிகவும் வன்மத்துடன் தலித்களுக்கு எதிராகச் செயல்பட்டுள்ளது. காவல்துறையின் தலித் விரோதப் போக்கு வெளிப்படையாக உள்ளது.

2. பிள்ளைமார்களில் 24 பேர்கள் மீது பெயர் குறிப்பிட்டும், பெயர் குறிப்பிடாமல் மொத்தம் 150 பேர்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. யார் மீதும் தீண்டாமை தொடர்பான வன்கொடுமை சட்ட விதிகளைப் பயன்படுத்தவில்லை. மிகச் சாதாரண பிரிவுகளே பயன்படுத்தப்பட்டுள்ளன.

3. தலித்களில் 19 பேர்கள் மீது பெயர் குறிப்பிட்டும், பெயர் குறிப்பிடப்படாமல் மொத்தம் 240 பேர்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வெடிமருந்து பொருள் சட்டம் உட்பட, கடும் பிரிவின் கீழ் இவ்வழக்குகள் போடப்பட்டுள்ளன.

4. மாவட்ட நிர்வாகம் எள்ளளவும் பொறுப்பற்று செயல்பட்டுள்ளது. சுவர் இடிக்கப்பட்டதன் நோக்கத்தை நிறைவேற்ற எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. அக்.1,2 தாக்குதலுக்கு பின்னும் கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குதல், மருத்துவ உதவி அளித்தல், மின் தொடர்பை சரி செய்தல் என எந்த முயற்சியும் 13-ந் தேதி வரை மேற்கொள்ளப்படவில்லை. சாக்கடைப் பிரச்சினை, பஸ் ஷெல்டர் கட்டுதல் உட்பட எதற்கும் தீர்வு ஏற்படுத்த முனையவில்லை.

5. தலித் விரோதப் போக்குடன் செயல்பட்ட இரு காவல்துறை அதிகாரிகள் மீதும் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

6. அக்.1,2 சம்பவங்கள் தொடர்பாக நீதி விசாரணை வேண்டும்.

7. தற்போது உசிலம்பட்டி பகுதியிலுள்ள காவல்துறையினர் முற்றிலுமாக மாற்றப்பட வேண்டும். 50 விழுக்காட்டினர் தலித்களாக அமைய வேண்டும். உத்தபுரத்தில் ‘டூட்டி’யில் இருப்பவர்களிலும் பாதிப் பேர் தலித்களாக இருக்க வேண்டும்.

8. போலீஸ் ‘அவுட்போஸ்ட்’ உடனடியாக பொது இடத்திற்கு கொண்டுவரப்பட வேண்டும்.

9. சாக்கடைக் கழிவுநீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும்.

10. சுவரை முற்றிலுமாகத் தகர்த்து போக்குவரத்துக்கு எவ்வித தடையுமில்லாமல் செய்ய வேண்டும். இது தொடர்பான புகார்களை காவல்துறை உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

11. அரச மரத்தைச் சுற்றியுள்ள சுவர் நீக்கப்பட்டு அங்கே பஸ் ஷெல்டர் கட்டப்பட வேண்டும்.

12. முத்தாலம்மன் கோவில் உள்ள இடத்திற்கு பிள்ளைமார்களுக்கு பட்டா அளிக்கக்கூடாது. தவிரவும் பிரச்சினையை தவிர்ப்பதற்காக முத்தாலம்மன் கோவிலை அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும்.

13. இப்பிரச்சினையை உலகறியச் செய்து தொடர்ந்து நீதிக்காகப் போராடி வரும் மார்க்சிஸ்ட் கட்சியை இக்குழு பாராட்டுகிறது.

(contact address: சிவா அப்பார்ட்மெண்ட்ஸ், 4/787, அன்னை வீதி, அண்ணாநகர்,மதுரை-20. செல்: 94441 20582, 94432 94892, 90471 44854)
01.11.2008