Saturday, November 30, 2013

கடந்த நான்கைந்து நாட்களாக இந்து ஆங்கில நாளிதழில் தேஜ்பால் விவகாரத்திற்கு முதல் பக்கத்தில் இடம் ஒதுக்கப்படுகிறது. இன்று முதற் பக்கத் தலைப்புச் செய்தியே தேஜ்பால்தான். அப்புறம் தலையங்கப் பக்கத்தில் வண்ண கார்டூன், அப்புறம் மேலும் இரு செய்திகள் எல்லாவற்றிலும் தேஜ்பால்தான்.

தருண் தேஜ்பால்


புகார் வராமலேயே தன்னிச்சையாக கோவா காவல்துறை நடவடிக்கையைத் தொடர்ந்துள்ளது. அதிகாரத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட பாலியல் வன்முறை என்கிற வகையில் குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என நாம் எல்லோரும் இதை வரவேற்கவே செய்தோம்....

குற்றம் சுமத்தப்படும் யாருக்கும் சாட்ட ரீதியாகத் தம்மைக் காத்துக்கொள்ள உரிமை உண்டு. அந்த வகையில் இந்த வழக்கை வேறு மாநிலப் போலீஸ் விசாரிக்க வேண்டுமென தேஜ்பால் நீதிமன்றத்தை அணுகியுள்ளார். குஜராத் 2002 உட்பட பா.ஜ.க மற்றும் இந்துத்துவ சக்திகளைக் கடுமையாகத் தோலுரித்து அமபலப்படுத்தியவர் என்கிற வகையில் கோவாவை ஆளும் பா.ஜ.க அரசு தன்னைப் பழி வாங்கும் என அச்சம் தெரிவித்துள்ளார். இது நியாயமான அச்சம்தான். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் வழக்கு விசாரணையை வேறு மாநிலங்களுக்கு மாற்றியதற்குப் பல முன்னுதாரணங்கள் உண்டு.

மோடியும் அமித் ஷாவும் தங்கள் மாநிலத்தில் பணிபுரிய வந்த ஒரு இளம் பெண்ணைத் தொடர்ந்து, அவரது அந்தரங்கங்களைக் காவல்துறையைப் பயன்படுத்திக் கண்காணிதது ஆதாரங்களுடன் வெளியான பின்னும் மத்திய மாநில அரசுகள் கண்டுகொள்ளாததையும், அதே நேரத்தில் தேஜ்பால் விவகாரத்தில் இத்தனை தீவிரம் காட்டுவதையும் நாம் ஒப்பிட்டுப் பார்க்கவும் வேண்டியுள்ளது. எப்படியோ இது குறித்துத் தன் அச்சத்தை வெளிப்படுத்த தெஜ்பாலுக்கு உரிமை உண்டு.

இந்தச் செய்தியை முதல் பக்கத்தில், "செய்திகளை navigate பண்ண இடைஞ்சல் இல்லாமல்" (நன்றி ஏ.எஸ்.பி) "கண்ணை உறுத்தாத" மஞ்சள் வண்ணத்தில் (Garcia design?) பெட்டிச் செய்தியாக வெளியிட்டுள்ளனர் ரவி-ராம் சகோதரர்கள். தலைப்பு: "Tejpal blames it on BJP".

செய்தியை editorialise பண்ணக்கூடாது, செய்தி எழுத்து judgemental ஆக இருக்கக் கூடாது என சித்தார்த் வரதராஜனின் நீக்கத்திற்குக் காரணம் சொன்னவர்கள் இவர்கள்.

அது சரி, தேஜ்பால் மீது ரவி-ராம் சகோதரர்களுக்கு அப்படி என்ன ஆத்திரம்? யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்...

No comments: